TNPSC Thervupettagam

ட்ரம்ப் கொள்கையும் பங்குச் சந்தையும்..

March 3 , 2025 5 hrs 0 min 9 0

ட்ரம்ப் கொள்கையும் பங்குச் சந்தையும்..

  • அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் (MAGA) என்ற முழக்கத்துடன் டொனால்டு ட்ரம்ப் அதிகாரத்துக்கு வந்துள்ளார். பதவியேற்ற உடனே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கூடுதல் வரிவிதிப்பு அமலாக்கத்தை தள்ளி வைத்தார்.
  • அதேநேரம், இந்த வரி விதிப்பை ட்ரம்ப் உண்மையிலேயே அமல்படுத்துவாரா அல்லது உலக நாடுகளை வர்த்தக ரீதியாக பணிய வைப்பதற்கான தந்திரமாக பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எத்தகைய அறிவிப்பையும் உடனடியாக அறிவிக்கவில்லை.
  • அதேநேரம், ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்கு சென்று அவரை உடனடியாக சந்தித்த சில முக்கிய உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் இடம்பெற்றுவிட்டார். இதுதவிர, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான (ஹார்லி டேவிட்சன் பைக்) இறக்குமதி வரியை குறைத்த மத்திய அரசு, எண்ணெய், எரிவாயு வாங்கப்படும் என அறிவித்துள்ளது.
  • பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இருதரப்பு வர்த்தகத்தை இரு மடங்காக (500 பில்லியன் டாலர்) உயர்த்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அதிநவீன ராணுவ தளவாடங்களை (எப்-35 போர் விமானம்) இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
  • அதேநேரம், எந்த ஒரு நாடும் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கும் இறக்குமதி வரி விகிதத்துக்கு நிகராக அந்த நாடுகளின் பொருட்களுக்கும் நாங்களும் வரி விதிப்போம் என ட்ரம்ப் அறிவித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. வரும் ஏப்ரல் முதல் இதை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும்.

பங்குச் சந்தை நிலவரம்:

  • கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. முக்கிய குறியீட்டெண்கள் சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளன. இதற்கு ட்ரம்பின் கொள்கைகள் காரணமா அல்லது வேறு காரணிகள் உள்ளனவா என்பது குறித்து பார்க்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே இந்திய பங்குச் சந்தைகள் இறங்கத் தொடங்கி விட்டன.
  • அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) அதிக அளவில் பங்குகளை விற்றதே இதற்கு முக்கிய காரணம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ரூ.75.54 லட்சம் கோடியாக இருந்த எப்ஐஐ முதலீடு, 2025 ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி ரூ.67.76 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ரூ.7.78 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். பிப்ரவரி மாதத்தை கணக்கில் எடுத்தால் இது மேலும் அதிகரிக்கும்.

ஏன் பங்குகளை விற்றார்கள்:

  • அதிக மதிப்பீடுகள்: நம்முடைய வரலாற்று சராசரியுடன் ஒப்பிடும்போது ‘நிப்டி’ குறியீடு மிக கூடுதல் மதிப்பில் (over value) வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. வருங்காலத்தில் இந்தியாவின் ஜிடிபி அதிகரிக்கும் என்றும் இதனால் நிறுவன பங்குகளின் வருவாய் ஈட்டும் (இபிஎஸ்) திறன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதே இதற்குக் காரணம். ஆனால் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் எதிர்பார்த்த அளவில் இல்லை. அந்த காலாண்டில் ஜிடிபி 6.6% வளரும் என எதிர்பார்த்த நிலையில், 5.4% ஆக இருந்தது. 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடந்ததால் மூலதன செலவு குறைந்ததே இதற்குக் காரணம்.
  • அடுத்தபடியாக, மந்த கதியில் இருந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க சீன அரசு சில ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தது. ஏற்கெனவே சீன பங்குச் சந்தை வளர்ச்சி குறைவாக இருந்ததால், சலுகை காரணமாக வர்த்தகம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் எப்ஐஐ-கள் சீனாவில் முதலீட்டை அதிகரித்தனர். இதற்கான முதலீட்டை இந்திய பங்குகளை விற்று திரட்டினர். மூன்றாவதாக, அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கினார்.
  • கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை அறிவித்தார். இதனால், முதலீட்டாளர்களுக்கு அந்நாட்டு பொருளாதாரம் வலிமை அடையும் என்ற நம்பிக்கை பிறந்ததால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இருந்த முதலீட்டை திரும்பப் பெற்று, அமெரிக்காவில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
  • மேலும் அமெரிக்காவின் பணவீக்கம் அந்நாட்டு மத்திய வங்கியின் ஆறுதல் நிலைக்கு வராததால், வட்டி குறைப்புக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே, அந்நாட்டின் 10 ஆண்டு கருவூல பத்திரத்துக்கான வட்டி 4.5% ஆக உயர்ந்தது. முதலீடு குறையும் ஆபத்து இல்லாத, அதேநேரம் அதிக லாபம் தரக்கூடிய பாதுகாப்பான தேர்வாக உள்ளதால் எப்ஐஐ-கள் இந்த பத்திரங்களில் அதிக முதலீடு செய்யத் தொடங்கினர். இதுபோல, இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளின் லாபம் நாணய தேய்மானத்தால் குறையும் வாய்ப்பு உள்ளது. இதையும் கணக்கில் கொண்டு தான் இந்தியாவில் உள்ள முதலீட்டை திரும்பப் பெறுகிறார்கள்.
  • ஜனவரி மாத மத்தியில் நிறுவனங்களின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கைகள் வெளியாக தொடங்கின. அவற்றின் வருவாயும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் எப்ஐஐ-கள் பங்குகள் விற்பனையை வேகப்படுத்தி உள்ளனர். பெரும்பாலும் எப்ஐஐ-கள் பெரிய நிறுவனங்களில்தான் முதலீடு செய்வார்கள். இந்நிலையில் அவர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றபோதும் நிப்டி, சென்செக்ஸ் குறியீட்டெண்கள் சுமார் 15% அளவுக்கு மட்டுமே சரிந்துள்ளன.
  • இதற்குக் காரணம், எப்ஐஐ-கள் விற்ற பங்குகளை உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ) வாங்கியதுதான். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. டி-மேட் கணக்குகள் எண்ணிக்கை 12 கோடியாகி உள்ளது. பரஸ்பர நிதி முதலீட்டாளர் கணக்குகள் எண்ணிக்கை 5 கோடியாகி உள்ளது. மாதந்தோறும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யும் தொகை ரூ.10 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.26 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • இந்த பணத்தைக் கொண்டு டிஐஐ-கள் பங்குகளை வாங்கி குவித்ததும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பங்குச்சந்தை கூடுதல் மதிப்பை எட்டியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எப்ஐஐ-கள் பெரிய நிறுவன பங்குகளை விற்கத் தொடங்கியபோது, அவற்றை டிஐஐகள் வாங்கினர். ஆனால் டிஐஐ-களின் திட்டங்கள் பெரிய, நடுத்தர, சிறு நிறுவன பங்குகளில் பரவி இருப்பதால், எப்ஐஐ-கள் விற்கும் அனைத்துபெரிய நிறுவன பங்குகளையும் வாங்க முடியவில்லை. இதனால், அவற்றின் விலை மளமளவென சரிந்தன.

ரூ.2 லட்சம் கோடி கையிருப்பு:

  • ஒருகட்டத்தில் பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தையின் எதிர்கால வளர்ச்சியின் எதிர்பார்ப்பை மறுபரிசீலனை செய்ய வைத்தது. எனவே, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் கிடைத்த லாபத்தை டிஐஐ-கள் அறுவடை செய்யத் தொடங்கினர். மேலும் தொடர் சரிவு காரணமாக முதலீட்டை குறைத்துக் கொண்டு, ரொக்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைக்கத் தொடங்கினர்.
  • பங்குகள் சார்ந்த திட்டங்களின் சராசரி ரொக்க கையிருப்பு 3% லிருந்து 5% ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.2 லட்சம் கோடியை ரொக்கமாக வைத்துள்ளனர். டிஐஐ-களின் இந்த செயலால் நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளின் குறியீட்டெண்கள் சுமார் 25% அளவுக்கு சரிந்துள்ளன.
  • சரிவு எப்போது முடிவுக்கு வரும்: முதலாவதாக, சர்வதேச அளவில் தெளிவு ஏற்பட வேண்டும். ட்ரம்ப் வரி விதிப்பை கடுமையாக அமல்படுத்துவாரா அல்லது அவர் அதை ஒரு பேச்சுவார்த்தை தந்திரமாக பயன்படுத்துவாரா என்பது தெரியவில்லை. இரண்டாவதாக, இந்தியாவால் இந்த பிரச்சினையை புத்திசாலித்தனமான முறையில் கையாள முடியுமா மற்றும் சீனாவுக்கு பதிலாக வேறு நாட்டில் உற்பத்தியை தொடங்க வேண்டும் (சீனா +1) என்ற முதலீட்டாளர்களின் எண்ணத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா என்பதையும் பார்க்க வேண்டும்.
  • மூன்றாவதாக, மத்திய அரசு தனது மூலதன செலவின திட்டங்களை மீண்டும் தொடங்குமா என்பதை பார்க்க வேண்டும். மேலும் அரசு அளித்துள்ள ரூ.1 லட்சம் கோடி வருமான வரிச்சலுகையால், நுகர்வு அதிகரிப்பதுடன் சேமிப்பாகவும் மாறி பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பில் பிரதிபலிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் வரும் ஏப்ரல் மாதம் முதல் தெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • இதனிடையே, நல்ல செய்தி என்னவென்றால், நிப்டி 50 PE இறுதியாக சரி செய்யப்பட்டு, 5 ஆண்டு நீண்டகால சராசரிக்கு கீழே உள்ளது. எனவே, ஒரு மதிப்பீட்டு கண்ணோட்டத்தில் பார்த்தால் பங்குச் சந்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்புவதற்கான நெருக்கமான இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்