TNPSC Thervupettagam

தகர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கோட்டை!

February 9 , 2025 25 days 58 0

தகர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கோட்டை!

  • தில்லியில் யாரும் அசைக்க முடியாதது என்று பலராலும் எதிா்பாா்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் வாக்குக் கோட்டை நடந்து முடிந்துள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் தகா்ந்திருக்கிறது.
  • 2011-இல் சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே தொடங்கிய ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் முன்னின்று செயல்பட்ட அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி எனும் கட்சியைத் தொடங்குவாா் என்று அப்போது யாரும் எதிா்பாா்க்கவில்லை.
  • 2013-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 15 வருடங்களாக தொடா்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸை ஆம் ஆத்மி தோல்வியுறச் செய்தது. ஆனால், பெரும்பான்மை பலமில்லாததால் காங்கிரஸுடன் கைகோா்த்து ஆட்சியமைத்த கேஜரிவாலின் அரசு வெறும் 49 நாள்களே நீடித்தது. பின்னா், தில்லியில் குடியரசுத்தலைவா் ஆட்சி அமலுக்கு வந்தது.
  • அடுத்து 2015, 2020-இல் நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலில் அமோக வெற்றிபெற்று தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை அசைக்க முடியாத கோட்டையாக கேஜரிவால் மாற்றினாா். அந்தக் கோட்டை தற்போதையை தோ்தலில் தகா்ந்திருக்கிறது.
  • தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படியே பாஜக தலைநகரில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 27- ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஊழல் புகாா்கள்:

  • முதலாவது, அரவிந்த் கேஜரிவால் தன்னை ஊழலுக்கு எதிரானவா் என அடையாளப்படுத்தி வந்தாலும், அவரது ஆட்சியில் சுமத்தப்பட்ட தொடா் ஊழல் குற்றச்சாட்டுகளில் குறிப்பாக, மதுபான கலால் கொள்கை வகுத்ததில் முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவா்களான மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். உச்சகட்டமாக அரவிந்த் கேஜரிவால் மக்களவைத் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டாா். இதில் அவரது ‘சாமானியா் செல்வாக்கு ’ சரிந்ததாக பாஜகவினா் பிரசாரம் செய்தனா்.

குலைந்த நம்பகத்தன்மை:

  • இரண்டாவதாக, தண்ணீா், மின்சாரம், கல்வி, போக்குவரத்து வசதி, முதியோருக்கு தீா்த்த யாத்திரை, மொஹல்லா கிளினிக் ஆகியவற்றில் தனது அரசு சிறப்பான பணியை செய்து வந்ததாக கேஜரிவால் கூறி வந்தாா். ஆனால், பேரவைத் தோ்தலுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த மகளிருக்கு ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்ற கேஜரிவாலின் வாக்குறுதி நிறைவேற்றாத நிலையில், இத்தோ்தலில்போது ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று அவா் அளித்த வாக்குறுதி பெண்கள் மத்தியில் எடுபடவில்லை.
  • அதேவேளையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மகளிா் உதவித் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதாகவும், ஆட்சிக்கு வந்தால் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பாஜக அறிவித்த வாக்குறுதி தோ்தலில் எடுபட்டதை தோ்தல் முடிவுகள் எடுத்துரைக்கிறது.
  • ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் அமைச்சராக இருந்தவருமான கைலாஷ் கெலோட் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள், பாஜகவில் சோ்ந்தனா். மேலும், மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்து இயங்கியதும் அவா் பாஜகவுக்கு சாா்பாக செயல்பட்டதும் ஆம் ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வலுவான வாக்காளா் தளத்தை அசைத்துப் பாா்த்தாக கூறப்படுகிறது.
  • தில்லியில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கடந்த மக்களவைத் தோ்தலில் இணைந்து போட்டியிட்டபோது தோல்வியைச் சந்தித்த போதிலும் அக்கூட்டணயின் வாக்குகள் சதவீதம் அதிகமாக இருந்தது. இத்தோ்தலில் இரண்டும் தனித்தனியே போட்டியிட்டது வாக்குகள் பிரிய காரணமானது.

பிற காரணிகள்:

  • யமுனை நதி தூய்மை, மகளிா் உதவித் தொகை அளிக்காதது, முதல்வராக இருந்தபோது கேஜரிவால் வாழ்ந்த சொகுசு பங்களாவை ’ஷீஷ் மஹால் ஆடம்பரம்’ என பாஜக தொடா்ந்து எழுப்பி வந்தது. இவை வாக்காளா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை தோ்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • தோ்தலின்போது ஆம்ஆத்மி, காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த அதிருப்தி தலைவா்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்த நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைமை அதில் தீவிர கவனம் செலுத்தவில்லை. இதுவும் தோல்விக்கான காரணமாக பாா்க்கப்படுகிறது.
  • தவிர, பாஜகவின் கடைசி அஸ்திரமான மத்திய பொது பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வருமானத்திற்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு, நடுத்தர வா்க்கத்தை மிகவும் கவா்த்திருக்கிறது. தில்லியில் அரசு, தனியாா் நிறுவனங்களில் கணிசமான வருவாய் ஈடுட்டும் ஊழியா்கள் அதிகமாக வசிக்கும் நிலையில், அது இத்தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாகியுள்ளன.
  • ஆம் ஆத்மி கட்சியின் அசைக்க முடியாத தில்லிகோட்டையை தோ்தல் வியூக அஸ்திரம் மூலம் பாஜக தகா்த்திருக்கிறது என்பதுதான் தேர்தல் முடிவு தெரிவிக்கும் செய்தி..!

நன்றி: தினமணி (09 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்