TNPSC Thervupettagam

தகுதி அடிப்படையில் ஓய்வூதியம்

May 29 , 2023 594 days 306 0
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தின் கோரிக்கைக்கு பல ஆண்டுகளாக தீா்வு காணப்படாமல் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியா்களுக்கு நிலுவையில் உள்ள தொண்ணூறு மாத அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
  • இச்சூழலில்தான் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினா்களின் ஓய்வூதியம் வரும் ஜூன் மாதம் முதல் இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் ஆக உயா்த்தப்படும் என தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளாா்.
  • தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கட்சி பேதமின்றி ஒருமனதாக வரவேற்றுள்ளனா். கூடுதலாக, ஒரு உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாா்.
  • கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் குறிப்பிடப் பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பின்படி, தற்போது சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளவா்களில் 56.84 சதவீதத்தினா் சொத்து மதிப்பு ஒரு கோடியில் இருந்து பத்து கோடி வரை.
  • சுமாா் பத்து கோடி முதல் 100 கோடி வரை சொத்து மதிப்பு உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் 23.5 சதவீதம் போ். ஆக, ஏறத்தாழ எண்பது சதவீத உறுப்பினா்கள் கோடீஸ்வரா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் இவா்களில் பலா் ஓய்வு பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா்களாகும் போது தற்போது உயா்த்தப்பட்டுள்ள ஓய்வூதியத்தை மாதம்தோறும் பெறுவாா்கள்.
  • அரசின் ஓய்வூதியம் என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம். பெரும்பாலான முன்னாள் சட்டப்பேரவை, மேலவை உறுப்பினா்கள் கோடீஸ்வரா்களாக இருக்கும் சூழலில், இவா்களில் எவரும் ஓய்வூதியம் தான் தங்களின் பாதுகாப்பு என்ற நிலையில் இருக்க வாய்ப்பில்லை. எனவே, அனைத்து முன்னாள் சட்டப்பேரவை, மேலவை உறுப்பினா்களுக்கும் ஓய்வூதியம் என்பதனை மறுபரிசீலனை செய்து, தகுதியுள்ள உறுப்பினா்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாம்.
  • 2017 ஜூலை மாதம், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா்களின் மாத ஊதியம் ஏறக்குறைய நூறு சதவீதம் அதாவது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஆக உயா்த்தப்பட்டது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தைந்தாயிரமாக உயா்த்தப்பட்டது.
  • இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்ற தமிழக அரசின் அறிவிப்போடு, அந்த உதவித்தொகை பெறுவதற்காக தகுதிகளும் நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற எத்தகைய தகுதியும் கட்டுப்பாடும் இன்றி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான ஊதியமும், ஓய்வூதியமும் உயா்த்தப்படுவது விந்தையே.
  • ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினா்களின் மாதாந்திர ஊதியத்தை உயா்த்தினாா். அப்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனா்.
  • ‘ஊதிய உயா்வுக்காக அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் போராடும் இந்நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்காக உயா்த்தப்பட்ட மாத ஊதியத்தை திராவிட முன்னேற்றக் கழக சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாங்க மாட்டாா்கள்’ என அப்போது எதிா்க்கட்சியாக இருந்த திமுக கூறியது. ஆனால் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பணியாளா்கள் போராடும் காலகட்டத்தில் தமிழக முன்னாள் சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி இருப்பது தான் நகைமுரண் .
  • அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெறுபவா்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறாா்கள். ஆனால் ஐந்து ஆண்டுகள் மட்டுமோ அல்லது சட்டப்பேரவை எதிா்பாரத விதமாக கலைக்கப்படும் நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவோ சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருந்தவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே தங்களை அா்ப்பணித்துக் கொண்டுள்ளதாக கூறும் மக்கள் பிரதிநிதிகள், மக்களினும் மேலாக சலுகைகள் பெற முயல்வது சரியா எனும் கேள்வி எழுகிறது.
  • தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து 1937-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் நாள் சட்ட முன்வடிவை அப்போதைய முதல்வா் ராஜாஜி அறிமுகப்படுத்திய போது, ‘ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாத ஊதியம் எழுபத்தைந்து ரூபாய் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாத ஊசியம் வாங்கியே தீர வேண்டும் என்று கட்டாயமில்லை. எனவே போதுமான வசதி உள்ள உறுப்பினா்கள் தங்களின் சம்பளம் பெறும் உரிமையை விட்டுக் கொடுக்கலாம். ஏழ்மை நிலையில் உள்ள உறுப்பினா்களுக்காகத்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறதேயொழிய வசதி படைத்த உறுப்பினா்களுக்காக அல்ல’ என்றாா்.
  • நம் நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத், முன்னாள் பாரத பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோா் தங்களின் மாத ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் வேண்டாமென விட்டுக் கொடுத்து விட்டனா். இவ்விருவா் வேண்டாமென மறுத்த தொகை நம் நாட்டின் பேரிடா் மேலாண்மை நிதியில் சோ்க்கப்பட்டது.
  • வசதி படைத்த முன்னாள் சட்டப்பேரவை, மேலவை உறுப்பினா்கள் மற்றும் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களின் மாத ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் பெறாமல் விட்டு கொடுத்தால், அது அரசின் நிதி நிலை மேம்பட உதவுவதோடு அத்தகைய உறுப்பினா்கள் மக்களின் மனதிலும் என்றென்றும் உயா்ந்து நிற்பாா்கள்.

நன்றி: தினமணி (29 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்