TNPSC Thervupettagam

தகுதிக்கும் சமவாய்ப்புக்கும் இடம் எங்கே

November 30 , 2022 705 days 423 0
  • பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 % இடஒதுக்கீடு (இ.டபிள்யூ.எஸ்) தொடர்பான ஜன்ஹித் அபியான் (எதிர்) மத்திய அரசு-2022 வழக்கில், அரசின் 103-ஆவது சட்டத் திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை நீதித்துறை அனுமதித்திருக்கிது.
  • நடைமுறையிலுள்ள ஜாதிவாரியான இட ஒதுக்கீட்டுடன், பொருளாதார ரீதியான 10 % இட ஒதுக்கீட்டுக்கும் வழிவகுக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை (2019) மத்திய அரசு நிறைவேற்றி சட்டமாக்கியது. 103-ஆவது சட்டத் திருத்தம் என்று குறிப்பிடப்படும் அத்திருத்தத்தில், அரசியல் சாசனத்தின் 15, 16-ஆவது பிரிவுகளில் 15 (6), 16 (6) என்ற துணைப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
  • பட்டியலினத்தோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) ஆகிய ஜாதியினர் ஏற்கனவே பெற்றுவரும் 49.5 % ஜாதிவாரி இடஒதுக்கீட்டில் பயனடைந்து வருவதால், அவர்களுக்கு இந்த 10 % இட ஒதுக்கீட்டில் இடமில்லை. இது தொடர்பான முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முன் மூன்று பிரதான கேள்விகள் இடம்பெற்றன.
  • முதலாவது, இட ஒதுக்கீட்டின் அடிப்படையாக பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்கும் 103-ஆவது சட்டத்திருத்தம் அரசியல் சாசன அடிப்படையை மீறுகிறதா? இரண்டாவது, அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது கட்டாயமா? மூன்றாவது, 10 % இட ஒதுக்கீட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினர் விலக்கப்படுவது அரசியல் சாசனப்படி சரியானதா?
  • இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு, சட்டத் திருத்தம் சரியே என 3:2 என்ற பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது. இதில் சட்டத் திருத்தத்தை ஆமோதித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, நீதிபதி பெலா எம். திரிவேதி, நீதிபதி ஜெ.பி. பர்திவாலா ஆகிய மூவரும், பொருளாதார அளவுகோலே இடஒதுக்கீட்டுக்கு ஒற்றை அடிப்படையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பொதுப்பிரிவினருக்கான 10 % இடஒதுக்கீடு அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும். சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினர் இந்த சட்டத் திருத்தத்தில் விலக்கப்பட்டிருப்பது, கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தெளிவான விளக்கத்தை மீறுவதாக இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
  • இந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ள நீதிபதி எஸ். ரவீந்திர பட்டும் அவரை ஆமோதித்துள்ள தலைமை நீதிபதி யு.யு. லலித்தும் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) பொருளாதார அளவுகோலே இடஒதுக்கீடுகளுக்கு ஒற்றை அடிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும் என்றபோதும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினர் விலக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இவர்களிருவரும் தீர்ப்பளித்தனர்.
  • அதிலும் நீதிபதி ரவீந்திர பட் தனது தீர்ப்பில், இந்த சட்டத் திருத்தத்தில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினர் விலக்கப்பட்டிருப்பது, அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடான பாகுபாடற்ற தன்மையை மீறுவதாகும் என்று கூறியிருக்கிறார்.
  • இந்தத் தீர்ப்பு, ஏழ்மையே சமுதாயத்தை பலவீனப்படுத்துகிறது. எனவே இட ஒதுக்கீட்டுக்கான நியாயமான வரையறையாக பொருளாதாரமே இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக அங்கீகரித்திருப்பது, நீதித்துறையின் புதிய கண்ணோட்டமாகும்.
  • நமது அரசியல் சாசனம், ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கிறதா என்றால், இல்லை. எம்.ஆர். பாலாஜி (1961) எஸ்.சி.ஆர். 439, எம்.வி.தாமஸ் (1976) 2 எஸ்.சி.சி. 310 உள்ளிட்ட பல வழக்குகளில், ஜாதி மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒற்றை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • என்றபோதும், இந்திரா சாஹ்னி (1992) 2 எஸ்.சி.சி. 217 வழக்கில், நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான அமர்வு அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பில், இட ஒதுக்கீட்டுக்கு வருமானமோ, சொத்துகளோ அளவுகோலாக இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இந்திரா சாஹ்னி வழக்கில் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோல் அடிப்படையல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, அப்போது நடைமுறையிலிருந்த சட்டத்தின் படி அமைந்ததாகும். அப்போது செயல்பாட்டிலிருந்த அரசில் சாசனத்தின் 15 (1), 16 (1) பிரிவுகளின்படி, பொருளாதார அடிப்படை ஏற்கத்தக்கதல்ல என்றபோதும், பின்னாளில் இதில் மாற்றம் செய்வதை அத்தீர்ப்பு தடுக்கவில்லை. தற்போதைய 103-ஆவது சட்டத் திருத்தத்தின்படி இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை அடிப்படையாக்குவதை முந்தைய தீர்ப்புகள் தடுக்கவில்லை.
  • அடுத்ததாக, இதுவரையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கூறியபடியும், அரசியல் சாசனத்தின்படியும் இட ஒதுக்கீடானது மொத்தமாக 50 %-ஐத் தாண்டக் கூடாது என்ற வரையறையை தற்போதையை சட்டத் திருத்தம் மீறலாமா என்ற அடிப்படைக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
  • இதற்கு உச்சநீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் (3: 2) அளித்த தீர்ப்பானது, 50 % உச்சவரம்பைத் தாண்டுவது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. ஏனெனில், அரசியல் சாசனத்தின் 15 (4), 16 (4) ஆகிய பிரிவுகள் இதற்கு முந்தைய வழக்கு விசாரணையின்போது நடைமுறையில் இருந்தன. அவையே 50 % உச்சவரம்பை வலியுறுத்தி வந்தன.
  • கடந்த பல பத்தாண்டுகளில் செய்யப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்கள், அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் போன்ற உறுதியான செயல்பாடுகள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தகுதி கருத்தில் கொள்ளப்படாததை உறுதியாக ஏற்கவில்லை. இந்த இடஒதுக்கீடு 50 % உச்சவரம்பை மீறுவது, ஓ.சி. என்றழைக்கப்படும் பொதுப்பிரிவினருக்கு பாரமாகவே அமையும். பொதுப்பிரிவில் பிறந்தது அவர்களின் குற்றமல்ல, அதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவது நியாயமல்ல.
  • தற்போதைய உலகம் அதிநவீனத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. தற்போது மெய்நிகர் நாகரிகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இணையவெளி, செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் ஆகியவை மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. இவற்றை நிர்வகிக்க, திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் அவசியம் இருந்தாக வேண்டும். இந்நிலையில் இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பை மீறும் வகையில் செயல்படுவது, தகுதி வாய்ந்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுதலிப்பதுடன், சமூகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கும் காரணமாகிவிடும்.
  • நமது சமூகத்தில் வரலாற்று ரீதியாக நிகழ்த்தப்பட்ட பாகுபாடுகளைக் களைவதும் அவசியம்; தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் அவசியம். இந்த இரண்டையும் சமநிலையில் பேண, 50 % இடஒதுக்கீட்டு எல்லை வரையறை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
  • எம்.ஆர். பாலாஜி வழக்கு முதல், டி. தேவதாசன் (1964) 4 எஸ்.சி.ஆர். 680 வழக்கு வரை உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பல தீர்ப்புகளும், இறுதியாக இந்திரா சாஹ்னி வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வு அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பும் இட ஒதுக்கீட்டில் 50 % இடஒதுக்கீட்டு உச்சவரம்பை வலியுறுத்தியுள்ளன.
  • இந்திரா சாஹ்னி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி, இதனை ஒரு விதிமுறையாகவே கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்; 9 நீதிபதிகள் அமர்வில் 7 பேர் இதனையே ஏற்றிருக்கிறார்கள். பொதுப்பிரிவில் உள்ள தகுதி வாய்ந்தவர்களின் வாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டுமானால், 50 % உச்சவரம்பு மீறப்படலாகாது என்பதே அவர்களின் தீர்ப்பு.
  • ஆனால், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், ஜன்ஹித் அப்யான் (எதிர்) மத்திய அரசு வழக்கில் தற்போது உச்சநீதிமன்ற அமர்வு அளித்திருக்கும் பெரும்பான்மைத் தீர்ப்பானது, 50 % உச்சவரம்பை நீர்த்துப்போகச் செய்கிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு (இ.டபிள்யூ.எஸ்.) என்பது முந்தைய தீர்ப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதே இதற்குக் காரணம்.
  • எனினும், இது பலத்த விவாதச்சூழலை உருவாக்கியிருப்பதாக, மாறுபட்ட தீர்ப்பை அளித்த நீதிபதி எஸ். ரவீந்திர பட் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். வருங்காலத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராடுவதற்கான சூழலை இத்தீர்ப்பு உருவாக்கி இருக்கிறது. அத்தகைய சூழலில் இட ஒதுக்கீடு கட்டுக்குள் அடங்காத நிலை ஏற்படக்கூடும்.
  • அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் பணியில் அரசியல் நிர்ணய சபை ஈடுபட்டிருந்தபோது, இட ஒதுக்கீடு தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இட ஒதுக்கீடானது இடைக்கால ஏற்பாடாகவே இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச இடங்களே ஜாதிவாரி இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுபூர்வமான வாதங்கள் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டன. அதுவே அரசியல் சாசனம் கூறும் அனைவருக்கும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
  • அதற்கு ஓர் உதாரணத்தையும் அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை மொத்த இடங்களில் 70 % இடஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டால், மீதமுள்ள 30 % இடங்கள் மட்டுமே பொதுப்பிரிவினருக்குக் கிடைக்கும். இது அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு உகந்ததல்ல. இதை நான் ஏற்க இயலாது' என்றார் அம்பேத்கர்.
  • எனவே ஜாதிவாரியான இட ஒதுக்கீடும், தகுதியுள்ள பொதுப்பிரிவினருக்கான வாய்ப்பும் சமமாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்