TNPSC Thervupettagam

தங்க சுரங்கத்தின் சாவி நம் கையில்

October 3 , 2024 54 days 73 0

தங்க சுரங்கத்தின் சாவி நம் கையில்

  • தூய எண்ணங்களுடன் நல்ல செயல்களை செய்தால் நமது விதியை நாமே தீர்மானிக்க முடியும் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளிச் செய்துள்ளனர். ஒவ்வோருவருடைய நல்வாழ்வுக்கான தங்கச் சுரங்கத்தின் சாவி அவரவர் கையில் உள்ளது. இதனால் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள முடியும். மிருகங்களைவிட மனிதன் உயர்ந்தவன் என பெருமிதம் கொள்கிறோம்.
  • யோசித்துப்பார்த்தால் மனிதனும் மற்ற உயிரினங்களை போல் பிறப்பு, உணவு, உறைவிடம், உறக்கம், சுகம், மக்கட்பேறு, வயது முதிர்வு, உடல் தளர்வு, நோய், இறப்பு என்ற வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பதை உணர முடியும். உண்மையில் மிருகங்களை விட நாம்தான் அதிக துன்பத்தை அனுபவிக்கிறோம். ஏனெனில் மற்ற உயிரினங்களுக்கு சிந்திக்கும் திறன், விருப்பம், அவமானம், இன்ப-துன்பம் எதுவும் இல்லை. நாம் பாவ-புண்ணிய கணக்கை நேர்செய்து, தெய்வநிலைக்கு உயரவே பிறந்திருக்கிறோம்.
  • யாருமே பாவம் செய்ய விரும்புவதில்லை. ஆனால் பாவமே அதிகம் செய்கிறோம். ஏதோ மாயா சக்தியால் பொருள், மனிதர்கள் மீது பற்று வைக்கிறோம். அவற்றை அடையும் விருப் பத்தில் பாவம் செய்ய தூண்டப்படுகிறோம். எதை செய்தாவது, எப்படியாவது ஒன்றை அடைய முயலும்போது, பாவ-புண்ணியத்தை புறக்கணிக்கிறோம். ஒரு விருப்பம் நிறை வேறினால் அதோடு திருப்தி அடைவதில்லை. நெருப்பில் நெய் ஊற்றியது போல் மற்றோரு விருப்பம் முளைத்து மேலும் பெரிதாக வளர்கிறது.
  • விருப்பம் நிறைவேறாவிட்டால் ஆத்திரம் உண்டாகும். ஆத்திரம் கோபமாக பரிணமித்து பாவம் செய்ய தூண்டுகிறது. கோபம், சுயநலம், கஞ்சத்தனம் இவையே நம் எதிரிகள். மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றுவதாலும் பாவம் செய்தவர்கள் ஆகிறோம். நம் விருப்பங்கள் எண்ணற்றவை. ஆசைப்படும் பொருட்கள் மற்றும் மனிதர்கள் நம்மைவிட்டு பிரிவது சர்வ நிச்சயம். பொருட்கள் அழிவதும், மனிதர்கள் மரணமடைவதும் இயற்கையின் நியதி.
  • கெட்டதே செய்யாமல் கொஞ்சம் நல்லதும் செய்வதால் அவ்வப்போது கொஞ்சம் சுகம் கிடைக்கிறது. சுகமாக இருப்பதைப்போல் உணர்கிறோம். ஆனால் நீண்டகாலம் நிரந்தரமாக சுகத்தில் திளைக்க முயற் சித்தாலும் முடியவில்லை. ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் துன்பத்துக்கு ஆளாகிறோம். எங்கு சென்றாலும் துக்கம் நிழல்போல் பின்தொடர்கிறது. இந்த உலகில் என்னைப்போல் துன்பம் அனுபவிப்பவர்கள் எவரும் இல்லை என ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.
  • இந்த நரகத்திலிருந்து தப்புவதற்கு வழியுண்டா என ஏங்குகிறோம். நம் சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்போது நிலை குலைந்து போகிறோம். நாம் முற்பிறவிகளில் செய்த செயல்களே பலவிதமாக வெளிப்பட்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை.
  • செயல், பிரதிச் செயல் - இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் நம் தேவைகளுக்காக செயலைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது ஒரு பேரதிசயம். நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதைப்போல் நம் பாவ - புண்ணியத்தை வேறு ஒருவரின் கணக்குக்கு மாற்ற முடியாது. நம் செயல்களின் விளைவுகளை வேறுயாரும் அனுபவிக்க இயலாது. நாம் செய்த புண்ணிய-பாவங்கள் மட்டுமே நம் சுக-துக்கம் இரண்டுக்கும் காரணம்.
  • இந்த செயலுக்கு இந்த விளைவு என நாம் அறிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு செய லும் நம் கண்களுக்கு புலப்படாமல் பரிணமித்து பலன் தருகிறது. அது இயற்கையின் நியதி. மனித சக்திக்கு அப்பாற்பட்ட மென்பொருள். நம் செயல்களின் பலனாக உடலை கொடுத்து, சுக-துக்கங்களை அனுபவிக்க வைத்து, உடல் நலிவுற்று மரணமடைந்து, மீந்துபோன தண்டனையை அனுபவிக்க மீண்டும் புது உடலுடன் பிறக்கிறோம். இதை நினைத்து வேதனைப்படுகிறோம்.
  • இது பிறவித் தண்டணை. பிறப்பு-இறப்பு என்ற குழியில் விழுந்தபின், எப்படி விழுந்தோம் என ஆராய்வதைவிட, குழியிலிருந்து மேலே வருவதற்கு முயற்சி செய்வதற்கே சிந்திக்கும் திறன் மற்றும் புத்தியை இயற்கை, மனிதர்களுக்கு மட்டும் அளித்துள்ளது. நல்வாழ்வுக்கான தங்கச் சுரங்கத்தின் சாவி நம்மிடமே இருக்கிறது. நல்ல எண்ணத்துடன் நல்ல செயல்களை செய்வதன் மூலம் நம் விதியை நாமே தீர்மானிக்க முடியும். நம்மை நாமே செதுக்கும் சிற்பியாக முடியும். உடல், ஆற்றல், அறிவு, மனம், சிந்தனை திறன் ஆகியவற்றை இயற்கை நமக்கு கொடுத்துள்ளது.
  • எந்த எதிர்பார்ப்புமின்றி மழை பொழிவதைபோல் நாம் பிறருக்கு கொடுக்க வேண்டும். இது வெறும் செய்தியோ, தகவலோ இல்லை. என்றும் மாறாத விதி. இதுவே மனித குலம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். மனிதர்கள் பிறந்து இறக்கலாம். இந்த உண்மை காலத்தால் அழியாமல் ரத்தினம், வைரம் போன்று என்றும் பிரகாசிக்கும். இந்த உலக உண்மை எல்லோருக்கும் பொருந்தும்.
  • இதில் உயர்வு-தாழ்வு என்ற பாரபட்சம் இல்லை. பாவம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறோம். சுற்றியபடி கயிற்றை அவிழ்ப்பதே தீர்வு. புண்ணிய செயல்களை செய்வதே ஒரே வழி. இந்த விவேகத்துடன் செயல்களை செய்தால் வெற்றி நம்மை தேடிவரும். இதுவே நிம்மதியாக வாழும் வழி.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்