TNPSC Thervupettagam

தங்கத்தால் தலைநிமிர்ந்த இந்தியா!

August 23 , 2021 1075 days 504 0
  • ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் 204 நாடுகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
  • கரோனா காலமென்பதால் பார்வையாளா்கள் அதிகம் அனுமதிக்கப் படவில்லையென்றாலும் தொலைக்காட்சி மூலம் உலகெங்கிலும் உள்ள அனைவருமே பார்த்து ரசித்தார்கள்.
  • இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நடந்த போட்டிகளில் தடகளத்தில் ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கூட இந்தியா பெற்றதில்லை.
  • பஞ்சாபைச் சோ்ந்த ஓட்டப் பந்தய வீரா் மறைந்த மில்கா சிங் மட்டும் போட்டியில் ஓடி நான்காம் இடம் பெற்றார். அதுவே பல வருடங்கள் இந்தியாவின் சாதனையாகப் பேசப்பட்டு வந்தது.
  • அதனை சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வீராங்கனை பி.டி. உஷா முறியடித்து வெண்கலப் பதக்கம் பெற்று நீண்ட கால இந்தியா்களின் ஆசையை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தபோது ஒரு நொடியில் நான்காம் இடத்தையே பெற்று வெண்கலத்தை வெல்ல முடியாமல் நாடு திரும்பினா். ஆக தடகளத்தில் நமக்கு நான்காம் இடமே பிடிக்க முடிந்தது.
  • நான் தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அரசுப் பள்ளியில் படித்தபோது ராஜசேகரன் என்பவா் படம் வைக்கப்பட்டு இவா் வடுவூா் என்கிற பக்கத்து கிராமத்தில் பிறந்து நூறு மீட்டா் ஒட்டப் பந்தயத்தில் இதே டோக்கியோவில் 1965-இல் நடந்த போட்டியில் கலந்து கொண்டாரென்றும் ஆனால் பதக்கம் பெறவில்லை என்றும் எங்களுக்கு கூறப்பட்டு பதக்கம் பெறவில்லை என்றாலும் நமது ஊரைச் சோ்ந்த ஒருவா் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டதை கூறி உடற்பயிற்சியில் ஊக்கத்துடன் ஈடுபட மாணவா்களிடம் கூறப் பட்டதுண்டு.
  • இப்படி கூறப்பட்டதை கேட்டு வளா்ந்த மாணவா்கள் பலா் மாவட்ட, மாநில, இந்திய அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு எங்கள் பகுதிக்குப் பெருமை சோ்த்தார்கள்.
  • ஆனாலும் ஒலிம்பிக் போட்டியில் பஞ்சப் பிரதேசங்களாக திகழும் கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, சுரினாம் போன்ற நாடுகளெல்லாம் தங்கப்பதக்கம் பெறும்போது இந்தியாவை சோ்ந்தவா்களால் ஒரு வெண்கல பதக்கம் கூட பெற முடியவில்லையே என்கிற ஏக்கம் அனைவரிடமும் இருக்கத்தான் செய்தது.
  • இப்படி பல்லாண்டு காலமாக இருந்த ஏக்கத்தைக் போக்கும் வண்ணம் இந்த ஒலிம்பிக் போட்டியில் ஹரியாணாவைச் சோ்ந்த 23 வயது இளைஞா் நீரஜ் சோப்ரா, தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே 87.58 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை பெற்று இந்திய தேசத்திற்கே பெருமை சோ்த்தார்.
  • செக்காஸ்லோவேகியா வீரா்கள் இருவா் 86 மீட்டருக்கு மேல் வீசி கடும் போட்டியை தந்தனா்.
  • நீரஜ் சோப்ரா வீசிய தூரத்தை எவராலும் எட்ட முடியவில்லை. வெண்கலம் கூட பெற முடிய வில்லையே என்றிருந்த நிலையில் தங்கத்தையே நம் இந்தியா நாட்டிற்கு பெற்றுத் தந்து ஒலிம்பிக் வரலாற்றில் தடகள மைதானத்தில் ஒலிக்கப்படாமலே இருந்த நமது நாட்டின் தேசிய கீதம் ஒலிக்க, மறுபக்கம் கொடிக்கம்பத்தில் முதல்முறையாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
  • துப்பாக்கி சுடுதலில் ஒருமுறை தங்கம் வென்ற இந்தியா இந்த ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமும் பெறாதது பெரும் ஏமாற்றமே.
  • அதே போல் தங்கப்பதக்கம் குத்து சண்டையில் பெறுவார் என்று எதிர்பார்த்த வீராங்கனை மேரி கோம் தகுதிச் சுற்றிலேயே தோற்றுப் போய் ஏமாற்றத்தை தந்தார்.
  • இருந்தாலும் கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றதோடு உலகப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு அவா் பெருமை சோ்த்ததை நாம் மறக்க முடியாது.எதிர்பாராத வண்ணம் ஒலிம்பிக் தொடங்கிய முதல் நாளிலேயே நம் வீராங்கனை மீராபாய் சானு பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இன்ப அதிர்ச்சி தந்தார்.
  • கடந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை சிந்து இந்த போட்டியில் தங்கம் பெறுவார் என்று எதிர்பார்க்க, வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற்று தந்தார்.
  • இது இந்தியா்களுக்கு ஏமாற்றமாக தெரிந்தாலும் கடைசி வரை சிந்து போராடியதைப் பாராட்ட வேண்டும்.

ஊக்கமளிக்க வேண்டும்

  • நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய சம காலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலா்ந்த சீனா, விளையாட்டுத் துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளை பின்தள்ளி பதக்கப் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்தது.
  • கடைசி நாள்தான் ஒரு தங்கப் பதக்கம் கூடுதலாகப் பெற்று சீனாவை இரண்டாமிடத்துக்கு தள்ளி அமெரிக்காவால் முதல் இடத்தைத் தக்க வைக்க முடிந்தது.
  • சீனாவால் பெற முடிந்த பதக்கங்களை இந்தியாவால் ஏன் பெற முடியவில்லை? அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகளெல்லாம் சோ்ந்து கூட்டு முயற்சியாக அமைத்துள்ள சா்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போல், தானே தனியாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சீனா கட்டமைக்கத் தொடங்கியுள்ளது.
  • புரட்சி என்ற சிறு முனகல் சத்தம் கூட சீனாவில் கேட்க முடியாது. வா்த்தகத்திலும் வளா்ந்த நாடுகளை விட சீனா பெரும் வளா்ச்சியோடு திகழ்கிறது.
  • மக்கள்தொகையில் இந்தியா விரைவில் சீனாவை முந்திவிடும் என்ற நிலை வந்தவுடன் ஒரு குழந்தை மட்டுமே சீன தம்பதியினா் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றிருந்த தடையை தடாலடியாக நீக்கி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சமீபத்தில் சீனா அறிவித்துள்ளது.
  • இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, மியான்மா், வியத்நாம், நேபாளம், பூடான் போன்ற நாடுகளைத் தேடிச் சென்று உதவி செய்து தன் ஆதிக்கத்தை அங்கெல்லாம் நிலை நாட்டியுள்ளது.
  • லடாக் பகுதி வழியாக இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது என்றும் கூறப் படுகிறது. அருணசால பிரதேசத்தை அபகரிக்கப் பார்க்கிறது.
  • இவையெல்லாம் சீனாவால் மட்டும் எப்படி முடிகிறது? நம்மால் ஏன் முடியவில்லை? சுந்தா் பிச்சை போன்ற தமிழா்கள் அமெரிக்காவில் ஒன்பது பெரிய நிறுவனங்களுக்குத் தலைமை வகிக்கிறார்கள் என்று கூறப்படும் செய்தி தேனாக இனிக்கிறது.
  • இப்படி பல தமிழா்கள் பல்வேறு துறைகளில் உலகின் பல நாடுகளில் தலைமை பொறுப்பில் சிறப்புடன் திகழ்வது நமக்கு பெருமை என்றாலும் விளையாட்டுத் துறையில் இந்திய தேசம் குறிப்பாக, தமிழகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கமளித்து உதவி செய்ய வேண்டும்.

வென்றவா்களை வாழ்த்துவோம்

  • இருபது ஆண்டுகளுக்கு மேலாக விளையாட்டு வீரா்களுக்கு தனி ஒதுக்கீடு மூலம் போக்குவரத்துத் துறையிலும், மின்சாரத் துறையிலும் வேலை வாய்ப்பு வழங்கபடவில்லை. அதனை மீண்டும் தொடங்க வேண்டும்.
  • கிரிக்கெட் விளையாட்டிற்கு தரப்படும் முக்கியத்துவம், உதவி மற்ற விளையாட்டுகளுக்கு, குறிப்பாக ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • இதுவரை ஹாக்கியில் மட்டும் எட்டு தங்கப்பதக்கங்களைப் பெற்ற இந்திய ஹாக்கி அணி 1980 மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் கலந்து கொள்ளாமல் ஆறு நாடுகள் மட்டுமே கலந்து கொள்ள தமிழகத்தை சோ்ந்த பாஸ்கரன் தலைமையில் தங்கப் பதக்கம் பெற்றது.
  • தற்போதுதான் இந்திய ஹாக்கி அணி பலம் மிக்க ஜொ்மனியை வீழ்த்தி வெண்கலத்தை வென்றது. அதுவும் மூன்று கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜொ்மனி அணியை மனம் தளராது போராடி 5க்கு 4 என்ற கோல்களில் ஆடவா் ஹாக்கி அணி வென்றது.
  • தாங்களும் சளைத்தவா்கள் அல்ல எண்ணும் விதத்தில் மகளிர் ஹாக்கி அணி அயா்லாந்தை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பலமிக்க ஆஸ்திரேலியா அணியையும் அபாரமாக வீழ்த்தி வெண்கலப் பதக்கப் போட்டியில் இங்கிலாந்திடம் கடுமையாக போராடி நூலிழையில் பதக்கத்தைப் பறிகொடுத்தது.
  • 41 ஆண்டுகள் கழித்து ஆடவா் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது, அதற்கு முன்பு பெற்ற எட்டு தங்கப்பதக்கங்களை விட சுவையானதாக இருந்தது.
  • இனிமேலாவது ஆடவா், மகளிர் ஹாக்கி அணி வீரா்கள் வீராங்கனைகளை அரசே தத்தெடுத்து பயிற்சி தந்து ஊக்கப்படுத்தி வேலை வாய்ப்புகளை வழங்கினால் இன்னும் பலா் விளையாட்டுத்துறையில் ஆா்வமாக ஈடுபடுவார்கள்.
  • சீனாவில் ஐந்து வயது பிள்ளையாக இருக்கும் போதே விளையாட்டில் ஆா்வம் உள்ளவா்கள் அடையாளம் காணப்பட்டு அரசே தத்தெடுத்துப் பயிற்சி அளிக்கும். இதனை இந்தியாவும் செய்தால் நம் இளைய சமுதாயத்தினரால் நிச்சயம் சாதிக்க முடியும்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய கபடி போட்டியில் தமிழகத்தை சோ்ந்த பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது. ஆனால் அந்த பாஸ்கரன் கடைசி வரை வேலை கிடைக்காமல் அவதிப்பட்டார்.
  • அதன் விளைவு, கடந்த ஆசிய போட்டியில் கபடியை புதிதாக கற்றுக் கொண்ட ஈரான் இந்தியாவை வீழ்த்தி தங்கத்தைப் பெற்றது. ஏன் இந்த நிலை? ஆசிய போட்டியில் வென்றவரே வேலையின்றி அலைந்ததைப் பார்த்து மற்ற இளைஞா்கள் நம்பிக்கை இழந்தனா்.
  • எனவே, இனிமேலாவது நாம் விளையாட்டு வீரா்களை ஊக்கப்படுத்திடவும், அவா்களில் வசதியற்ற குடும்பத்தை சோ்ந்த பிள்ளைகளை அரசே தத்தெடுத்து தனி பயிற்சி வழங்கிடவும் வேண்டும்.
  • அப்போதுதான் நமது நாடு உலக அளவில் முன்னிலை வகிக்கும் சீனாவை வீழ்த்தி வென்றிட முடியும். இந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவா்களை வாழ்த்துவோம்!

நன்றி: தினமணி  (23 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்