- உலகின் விலை மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்று தங்கம். மனிதகுலம் மற்ற உலோகங்களைவிடத் தங்கத்துக்குத் தனி அந்தஸ்து வழங்கியிருக்கிறது. அழகுக்கு, ஆடம்பரத்துக்கு, சேமிப்புக்கு என்று பல்வேறு பயன்களுக்காகத் தங்கத்தை மக்கள் வாங்குகின்றனர். தங்கம் விலை குறைந்தால் குதூகலிக்கின்றனர். கூடினால் கவலை கொள்கின்றனர். இவ்வாறு மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் தங்கம் எப்படி உருவானது?
- தங்கம் சுரங்கத்தில் இருந்தும், சில நேரம் கடலுக்கு அடியில் இருந்தும் கிடைக்கிறது. ஆனால், இந்தத் தங்கத்தின் பிறப்பிடம் பூமி அல்ல. எல்லையில்லாப் பிரபஞ்சத்தின் ஏதோ ஓரிடத்தில் இருந்துதான் தங்கம் உருவாகி வந்திருக்கிறது. அதாவது 100 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு நட்சத்திரத்தின் இறப்பில் இருந்துதான் தங்கத்தின் பிறப்பு தொடங்குகிறது.
- அண்டப் பெருவெடிப்புக்குப் (Big Bang) பிறகு பிரபஞ்சம் தோன்றியபோது ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய இரண்டு அணு வகைகளே உருவாகியிருந்தன. இதில் ஹைட்ரஜன் அணுக்களால்தாம் நாம் காணும் நட்சத்திரங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன.
- ஈர்ப்பு விசையால் இந்த ஹைட்ரஜன் அணுக்களில் அதீத அழுத்தம் உண்டாகும்போது, அங்கே அணுக்கருச் சேர்க்கை (Nuclear Fission) நடைபெறத் தொடங்குகிறது. இந்த வினை ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றுகிறது. அப்போது அதீத வெப்பமும் ஒளியும் உமிழப்படுகின்றன. இதைத்தான் நாம் நட்சத்திரம் ஒளிர்வதாக நினைத்துக்கொள்கிறோம்.
- பல கோடி ஆண்டுகளுக்கு நிலையாக எரியும் இந்த நட்சத்திரத்தின் வெப்பம் ஒருகட்டத்தில் மிக அதிக அளவுக்கு உயரும்போது ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒன்றோடு இன்னொன்று இணைந்து, அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், இரும்பு போன்ற அணுக்களை உற்பத்தி செய்கின்றன.
- ஒருகட்டத்தில் நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது, இரும்பின் இறுக்கம் காரணமாக நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து மொத்த நட்சத்திரமும் வெடித்துச் சிதறுகிறது. இந்த நட்சத்திர வெடிப்பைத்தான் நாம் ‘சூப்பர் நோவா’ என்கிறோம். இந்த மாபெரும் நட்சத்திர வெடிப்பில்தான் இரும்பைவிடக் கனமான உலோகங்கள் தோன்றுகின்றன.
- சூப்பர் நோவா நிகழும்போது நம் கற்பனைக்கும் எட்டாத ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் நட்சத்திரத்தில் உருவான தனிமங்களின் அணுக்களை அதிவேகத்தில் வெளியே தள்ளுகிறது. இந்தத் தனிமங்கள் குளிர்ந்து விண்வெளியில் உள்ள வாயுக்களோடும் தூசுகளோடும் கலந்துவிடுகின்றன. இவற்றைதான் நாம் நெபுலா என்கிறோம். இந்த நெபுலாக்கள்தாம் புதிய நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் மாறுகின்றன.
- இந்த நெபுலாக்களே தங்கத்தின் பிறப்பிடமாகவும் இருக்கின்றன. நெபுலாக்களுக்குள் நியூட்ரான் கவர்தல் (Neutron Capture) எனும் வினை நடைபெறுகிறது. வாயு மேகங்களும் தூசியும் குளிரும்போது அதிலுள்ள எடை குறைந்த தனிமங்களில் உள்ள அணுக்கருக்கள் நியூட்ரான்களைப் பிடித்து இழுத்து கனமான தனிமங்களாக மாறத் தொடங்குகின்றன. இந்தச் செயல்பாடு பலமுறை நிகழும்போது வெள்ளி, தங்கம், ஈயம், யுரேனியம் போன்ற எடை அதிகமான உலோகங்கள் உருவாகின்றன.
- சரி, விண்ணில் உருவான இந்தத் தங்கம் பூமிக்கு எப்படி வந்தது? இந்த நெபுலாக்கள் இணைந்து கோள்களாகின்றன அல்லவா? அவ்வாறு பூமி உருவாகும்போது அதனுடன் நெபுலாவில் இருந்த தங்கமும் பூமியின் ஒரு பகுதியாகிவிடுகிறது. பூமிக்கு மிக அடியில் இருந்த இந்தத் தங்கம் எரிமலை வெடிக்கும்போது வெளியாகும் குழம்பின் மூலம் வெளியே வருகிறது.
- அந்தக் குழம்பு குளிர்ந்து பாறையாகும்போது அவற்றுடன் கலந்துவிடுகிறது. இந்தப் பாறைகளில் இருந்து தங்கத்தை நாம் பிரித்து எடுத்துப் பயன்படுத்துகிறோம். அதேபோலத் தங்க உலோகம் கலந்த விண்கற்கள் பூமியில் மோதியதன் மூலமும் பூமிக்குத் தங்கம் கிடைத்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- தங்கம் உருவாவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. நம் சூரியனைவிட எட்டு மடங்கு பெரிய நட்சத்திரம் அழியும்போது, அதன் அடர்த்தியான மையப்பகுதி ஈர்ப்பு விசையின் காரணமாக நொறுங்கி, அதில் இருக்கும் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் இணைந்து நியூட்ரான் களாக மாறுகின்றன. இதன் நிறை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது, அது நட்சத்திரமாக உருவாகிறது. இதைத்தான் நியூட்ரான் நட்சத்திரம் என்கிறோம்.
- இவ்வாறு உருவான இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றை இன்னொன்று சுற்றி வரும்போது, ஈர்ப்பு அலையின் அலைக்கழிப்பால் அவை சுற்றுப்பாதையில் இருந்து விலகி மோத நேர்கிறது. அவ்வாறு நிகழும் விபத்தில் வெளியாகும் ஏராளமான ஆற்றல், தங்கம் உள்ளிட்ட கனமான தனிமங்களையும் உருவாக்கியிருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- இதுவரை நாம் பூமியில் இருந்து 2.44 லட்சம் மெட்ரிக் டன் தங்கத்தைக் கண்டறிந்து இருக்கிறோம். இன்னும் பல லட்சம் டன் தங்கம் பூமியில் இருக்கலாம். ஒருவேளை பூமியில் உள்ள தங்கம் தீர்ந்தாலும்கூடப் பிரபஞ்சத்தில் உள்ள வேறு கோள்களில் நிச்சயம் தங்கம் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- அணுக்கருச் சேர்க்கையின் போதுதான் தங்கம் உருவாகிறது என்றால், நம்மால் இதனைச் சோதனைக் கூடத்தில் உருவாக்க முடியுமா? நிச்சயமாக முடியும். இன்றைய அறிவியல் அதற்கான சாத்தியத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால், ஒரு கிராம் தங்கத்தை உருவாக்கவே நாம் ஒரு யுகத்துக்குக் காத்திருக்க வேண்டும். அதற்கான செலவும் அதிகமாக இருக்கும் என்பதால் நாம் தங்கத்தை அந்த முறையில் உருவாக்குவதில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2023)