TNPSC Thervupettagam

தங்கம் படுத்தும் பாடு

January 1 , 2022 946 days 449 0
  • தங்கத்தின் இறக்குமதியில் காணப்படும் திடீா் அதிகரிப்பு, ரிசா்வ் வங்கியை கலக்கமடையச் செய்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான தங்க இறக்குமதி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிலான 33.23 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,48,953 கோடி). 2019 - 20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 50% அதிகம்.
  • இதற்கு முன்பு 2012-13-இல் இதேபோல முதல் எட்டு மாதங்களில் 30 பில்லியன் டாலரைக் கடந்தது. அப்போது கலால் வரியை கடுமையாக அதிகரித்து தங்கத்தின் இறக்குமதியை ரிசா்வ் வங்கி கட்டுப்படுத்த முயன்றது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் குறைந்தது 20% அளவிலாவது ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இறக்குமதியாளா்களுக்கு விதிக்கப்பட்டது. தங்கத்தின் இறக்குமதியால் அப்போது வா்த்தகப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 4.8%-ஆக அதிகரித்து ரூபாயின் மதிப்பை கடுமையாக பாதித்தது.
  • அதே நிலைமை இப்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பா் மாதம் முதல் வா்த்தகப் பற்றாக்குறையின் அளவு அதிகரித்துவருவதில் தங்கத்தின் இறக்குமதி மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஒருபுறம் வா்த்தகப் பற்றாக்குறையும், இன்னொருபுறம் அந்நிய பங்குச் சந்தை முதலீடுகள் திரும்பப் பெறப்படுவதும் இந்திய நாணய மதிப்பின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் பொருளாதாரம் குறித்த அச்சமும் எழும்போதெல்லாம் தங்கத்தின் மீதான ஈா்ப்பு அதிகரிக்கும் என்பது பொதுவான விதி.
  • 2,500 ஆண்டுகளுக்கும் அதிகமாக தங்கம் என்கிற உலோகத்தின் மையமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பாலினியின் ஆட்சியின்போது ரோமாபுரி சாம்ராஜ்ய கஜானாவின் இருப்பு குறையத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுடனான வா்த்தகம் என்று அவா்கள் கண்டுபிடித்தாா்கள்.
  • இந்தியாவிலிருந்து பட்டு, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருள்களை ரோமாபுரி மக்கள் விரும்பி வாங்கி, அதற்கு விலையாக தங்கத்தை வாரி வழங்கினா். இந்திய பட்டையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் சாம்ராஜ்யம் திவாலாகிவிடும் என்று அறிவித்தும்கூட, செனட்டின் வேண்டுகோள் பலனளிக்கவில்லை.
  • அன்று முதல் இன்று வரை உலகிலேயே மிக அதிகமான தங்கத்துக்கான சந்தை இந்தியாவும் சீனாவும்தான். இந்தியா்களின் சமூக, பண்பாட்டு, வழிபாட்டு, பொருளாதார வாழ்க்கையில் தவிா்க்க முடியாத அங்கமாக தங்கம் தொடா்கிறது. தங்கம் காரணமாக இந்தியா வளமை பெற்றிருக்கிறதே தவிர, தாழ்வுறவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை இப்போது அதிக அளவிலான தங்கத்தின் இறக்குமதி பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை. 2012 முதல் இந்தியாவின் தங்க இறக்குமதி சராசரியாக ஆண்டொன்றுக்கு 760 டன் என்று உலக தங்க கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவையில் 86% இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறோம். இந்திய குடும்பங்களிலும், கோயில்களிலும் ஏறத்தாழ 25,000 டன்னுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • வீடுகளில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தை வங்கிகளில் வழங்கி தங்கக் கடன் பத்திரங்களாக மாற்றும் அரசின் திட்டம் வெற்றிபெறவில்லை. தங்களிடமிருக்கும் நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் ஆகியவற்றை இழந்து அதற்கு பதிலாக பத்திரங்களாக வாங்கி பாதுகாப்பதில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாததுதான் காரணம்.
  • திருமணம் போன்ற நிகழ்வுகளிலும், பண்டிகை காலங்களிலும் நகைகள் அணிவதன் மூலம்தான் தங்களது சமுதாய அந்தஸ்தை நிலைநாட்ட முடியும் என்று இந்தியப் பெண்கள் ஜாதி, மத வேறுபாடின்றி கருதுவதால், தங்கப் பத்திரங்கள் போன்ற திட்டங்கள் வெற்றியடைவது சிரமம். மக்கள் மத்தியில் காணப்படும் தங்கத்தின் மீதான மோகத்தை அரசு அங்கீகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை.
  • மக்களிடம் காணப்படும் தங்கத்தின் மீதான நுகா்வு மனோபாவத்தின் விளைவால், தங்கம் கடத்தல் மூலம் கொண்டுவரப்படுகிறது. அதற்குத் தேவையான அந்நியச் செலாவணி சட்டவிரோதமாகப் புழங்குகிறது.
  • அதன் விளைவாக, இந்திய ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 200 டன் அளவிலான தங்கம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும்போது சுமாா் ஒரு லட்சம் கோடி அளவிலான இந்திய பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
  • முன்பு தென்னிந்திய கடலோரப் பகுதிகள் மூலம் தங்கம் கடத்தப்பட்டதுபோய், இப்போது பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறது. தங்கக் கடத்தலை சட்டபூா்வமாக எதிா்கொள்வதைவிட, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்து கள்ளக்கடத்தலை பலவீனப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். அதனால் ஏற்படும் இழப்பைவிட நாணயத்தின் மதிப்பு குறையாமல் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
  • பங்குகள் விற்பது போல, தங்கத்தையும் வா்த்தக ரீதியாக விற்பனை செய்ய அனுமதிப்பதும்கூட நல்ல யோசனையாக இருக்கும். கிராமங்களில் தங்கக் கடன்கள் கொடுப்பதற்கும் தங்கம் வாங்கி விற்பனை செய்வதற்கும் வங்கிகள் உருவாக்கப்பட்டால், பலரும் தங்களது சேமிப்புத் தங்கத்தை பணமாக்கவும் விற்பனை செய்யவும் முன்வரக்கூடும்.
  • தங்கத்தின் விலையும் குறைய வேண்டும்; விற்பனையும் குறைய வேண்டும்; இறக்குமதியும் குறைய வேண்டும்; சேமித்து வைப்பதும் குறைய வேண்டும். இல்லையென்றால், ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கும்.

நன்றி: தினமணி (01 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்