TNPSC Thervupettagam

தடம் புரளும் ரயில்கள்!

October 15 , 2024 95 days 188 0

தடம் புரளும் ரயில்கள்!

  • இன்னொரு ரயில் விபத்து கடந்துபோயிருக்கிறது. இந்தமுறை சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் மைசூரு-தர்பங்கா "பாக்மதி' விரைவு ரயில், அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருக்கிறார்கள். விபத்தில் ரயில் என்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
  • அதில் 6 பெட்டிகள் கவிழ்ந்தன. சரக்கு ஏற்றிச் செல்லும் முன்பகுதி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
  • சரக்கு ரயிலின் பின்புறத்தில் "பிரேக் வேன்' இருந்ததும், கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் வேகக் கட்டுப்பாடு இருந்ததும் மிகப் பெரிய விபத்து ஏற்படுவதைத் தடுத்திருக்கின்றன. சிக்னல் கோளாறுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், விசாரணையின் முடிவில்தான் தெளிவு கிடைக்கும்.
  • என்ஐஏயும் (தேசிய புலனாய்வு முகமை) விசாரணையில் இறங்கியிருக்கிறது. பொன்னேரி அருகே ஏற்கெனவே இருமுறை ரயில் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருக்கும் நிலையில் என்ஐஏ களமிறங்கியிருப்பது சரியான முடிவு.
  • ஜூன் 17-ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
  • ஒருபுறம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்து வருவதாக தெரிவிக்கிறார். இன்னொருபுறம் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் மனித கவனக் குறைவாலோ, தொழில்நுட்பக் கோளாறாலோ, சிக்னல் பிரச்னையாலோ தொடர்ந்து விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன.
  • விபத்துகள் நடக்கின்றன என்பது மட்டுமில்லாமல், அவற்றுக்குப் பின்னால் ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் இருப்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் 24 ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. 90% முயற்சிகள் ஓட்டுநர், ரயில்வே ஊழியர்களின் முன்னெச்சரிக்கையாலும் சமயோசிதத்தாலும் தடுக்கப்பட்டிருக்கின்றன.
  • கவரைப்பேட்டை விபத்து நடந்த அன்று உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்கி}லக்சூர் தடத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு உருளை வைக்கப்பட்டிருந்ததை என்ஜின் ஓட்டுநர் பார்த்து ரயிலை நிறுத்தி விபத்தைத் தடுத்தார். அதே நாளில், மும்பை மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு, ரயில் சேவை சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.
  • செப்டம்பர் 17-ஆம் தேதி பிலாஸ்பூர்-ருத்ராப்பூர் தடத்தில் செல்லும் டூன் எக்ஸ்பிரஸை தடம்புரளச் செய்ய தண்டவாளத்தில் 7 அடி நீளமுள்ள கனமான இரும்பு உருளை வைக்கப்பட்டிருந்தது. ரயில் ஓட்டுநர் பிரேக்கை இயக்கி வேகத்தைக் கட்டுப்படுத்தியதால் விபத்து தடுக்கப்பட்டது.
  • செப்டம்பர் 21-ஆம் தேதி குஜராத்தில், செப்டம்பர் 22-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், செப்டம்பர் 28-ஆம் தேதி லக்னௌ - சாப்ரா எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் என்று ரயில்களை தடம்புரளச் செய்ய பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன.
  • ஜான்சி-பிரயாக்ராஜ் பயணிகள் ரயிலை தடம்புரளச் செய்ய தண்டவாளத்தில் மிகப் பெரிய பாறை ஒன்று வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதுபோல நடந்த 24 நிகழ்வுகளில் ரயில் ஓட்டுநர்கள் விழிப்புடன் இருந்து விபத்தை தவிர்த்திருக்கிறார்கள். அவர்கள் ரயில்வே நிர்வாகத்தால் பாராட்டப்படுகிறார்களா என்பது தெரியவில்லை.
  • மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமை முனைப்பாளர் சந்திரசேகர் கெüர் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே நிர்வாகம் சில தகவல்களைத் தந்திருக்கிறது. 2019-20 முதல் 2023-24 வரையில் 200 ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன.
  • 2019-20-இல் 55; 2020-21-இல் 22; 2021-22-இல் 35; 2022-23-இல் 48; 2023-24-இல் 40; இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 18 என்று, அவருக்கு பதில் கிடைத்திருக்கிறது. 2019-20-இல் 40; 20-21-இல் 17; 2021-22-இல் 27; 2022-23-இல் 36 ரயில் தடம் புரண்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
  • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்படும் விபத்துகள் 3% மட்டுமே என்கிறது ரயில்வே பாதுகாப்பு சீராய்வுக் குழு. பெரும்பாலான விபத்துகளுக்கு சிக்னல் கோளாறுகள்தான் காரணம். விபத்தைத் தடுப்பதற்கான "கவச்' தொழில்நுட்பம் இன்னும் பெரும்பாலான ரயில்களில் பொருத்தப்படாமல் இருப்பது மிகப் பெரிய குறைபாடு.
  • மனிதர்களின் கவனக் குறைவுகூட பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் எல்லா விபத்து விசாரணை முடிவிலும் கீழ்நிலையில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். உயரதிகாரிகள் பொறுப்பாக்கப்படுவதில்லை. அதுவும்கூட, விபத்துகள் தொடர்வதற்கு முக்கியமான காரணம்.
  • இந்தியாவிலேயே மிக அதிகமான ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. ஆனாலும், முக்கியமான பணிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ரயில் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்களுக்கான 18,000 இடங்கள் நிரப்பப்படாமல் தொடர்கின்றன.
  • போதுமான ஊழியர்கள் இல்லாததால் அதிக நேர உழைப்பு, ரயில் ஓட்டுநர்களுக்கு பணிச் சுமை காரணமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தவறுகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
  • அதிவேக, அதிநவீன ரயில்கள் அதிகமாகத் தேவை என்பதிலும், ரயில்வேயின் கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மிகப் பெரிய முதலீடு வேண்டும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், குறைந்த கட்டணத்தில் அதிகரித்த வசதியுடனான ரயில் பயணம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அவசியம் என்பதையும் அரசு உணர வேண்டும்.

நன்றி: தினமணி (15 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்