TNPSC Thervupettagam

தடுப்பூசி இயக்கத்தை உத்வேகப்படுத்துக!

May 27 , 2021 1339 days 530 0
  • கரோனா தடுப்பூசிக்கான முதல் தவணைக்கும், இரண்டாவது தவணைக்குமான இடைவெளியை அரசு மேலும் நீட்டித்திருப்பது வரவேற்புக்குரியது.
  • பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும், தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்துத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பது சற்றே ஆசுவாசத்தைத் தருகிறது.
  • முதல் தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டவர்கள், தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து அடுத்த தவணை போட்டுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
  • ஏப்ரல் தொடக்கம் வரை வேறு விதமான தடுப்பூசித் திட்டத்தை இந்தியா பின்பற்றியது; கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டதோடு, நோய்த் தொற்றால் அதிக அளவு பாதிப்படையக்கூடியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது.
  • இரண்டாவது அலை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில். இதுவரை ஒன்றிய அரசை விமர்சித்துவந்த மாநில அரசுகள், தடுப்பூசிப் பொறுப்பை ஏற்றுத் தங்கள் செயல்திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • இந்தியாவில் குழந்தைகளுக்குப் போடும் தடுப்பூசித் தவணைகளுக்கு 4-லிருந்து 8 வார இடைவெளி விடப்படுகிறது. எனினும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான சோதனைகளில் (18-55 வயதினருக்குச் செலுத்தப்பட்டது) இரண்டாவது தவணையை முதல் தவணையிலிருந்து 6 வாரங்கள் கழித்துப் போட்டுக்கொண்டவர்களைவிட 8 வார இடைவெளியில் போட்டுக்கொண்டவர்களுக்குக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எதிர்ப்பாற்றல் கிடைத்தது கண்டறியப்பட்டிருக்கிறது.
  • நீண்ட இடைவெளியில் அந்தத் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டுப் பார்த்தபோது நல்ல பலனளித்திருப்பது தெரியவந்திருக்கிறது. நோய்த் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பின் அளவைக் கண்டறிவதற்கு எதிர்ப்பு சக்தி செல்கள் முக்கியமானவை என்றாலும் செல்கள் அடிப்படையிலான எதிர்ப்பு சக்தியும் முக்கியம்.
  • கரோனா பெருந்தொற்று ஏற்பட்டு 18 மாதங்கள்தான் ஆகின்றன என்பதால் தடுப்பு மருந்துகளால் எவ்வளவு காலத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதைத் தற்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
  • அப்படியே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு நோய் தீவிரமாவது மிகமிக அரிது. அதனால் தான், தடுப்பூசி மிகவும் முக்கியமானதாகிறது.
  • கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை மக்களுக்குப் போடுவதற்கு, காலநீட்டிப்பு குறித்த ஒன்றிய அரசின் பரிந்துரைகள் உதவும் என்று நம்பலாம். ஆகஸ்ட் வாக்கில் மேலும் சில தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன.
  • இந்தியாவின் தினசரி இறப்புகள் அமெரிக்கா, பிரேசிலைவிட அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படாததாலும் புதியதாக கரோனா வைரஸின் வடிவங்கள் அச்சுறுத்திக்கொண்டிருப்பதாலும் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
  • தடுப்பூசிகளின் நோக்கம் என்பது கடுமையான நோயையும் இறப்பையும் தடுப்பதாகும். ஆகவே, தடுப்பூசி தொடர்பாக எடுக்கப்படும் எந்த முடிவுகளும் இதை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்