- இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) தயாரித்திருக்கும் ‘கோவிஷீல்டு’, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘கோவேக்ஸின்' ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து ஒழுங்காற்று ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதைத் தொடர்ந்து எழுந்திருக்கும் சர்ச்சையில் நியாயம் இல்லாமல் இல்லை.
- இந்த அனுமதியின் காரணமாக இந்திய வரலாற்றில் மிகப் பெரும் எண்ணிக்கையில் தடுப்பூசி போடுவதற்கான களம் அமைந்திருக்கிறது. இந்தியா வெகு காலமாகத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. எனினும் புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து, பரிசோதித்து, உலகுக்கு அளிக்கும் நாடாக இந்தியா அவ்வளவாகப் பெயர்பெற்றதில்லை.
- ஆகவே, இந்தப் பெருந்தொற்று இந்தியாவுக்கு முன்னுதாரணமில்லாத ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இந்திய மக்களிடம் தடுப்பு மருந்தின் செயல்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறியும் மிக முக்கியமான ஒரு நடைமுறை புறந்தள்ளப்பட்டிருக்கிறது.
- மூன்றாவது கட்டப் பரிசோதனையில் சில தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்; சிலருக்குத் தடுப்பூசி அல்லாத ஊசி போடப்படும். இருவருக்குமே எந்த ஊசி போடப்பட்டது என்று சொல்லப்படுவதில்லை. இந்தக் கட்டம் மிகவும் முக்கியமானது.
- ஆஸ்ட்ராஜெனகாவுடன் எஸ்ஐஐ போட்டிருந்த ஒப்பந்தத்தின் காரணமாக பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட்டிருந்தது. ஆனால் 1,600 இந்தியத் தன்னார்வலர்களுக்கு மூன்றாம் கட்டப் பரிசோதனையில் போடப்பட்ட தடுப்பூசி எந்த அளவுக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஃபைஸர், மாடர்னா, ஆஸ்ட்ராஜெனகா போன்ற உலகின் முன்னணி மருந்து நிறுவனங்கள் தங்களின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பு, தங்கள் நாட்டு மக்களிடம் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி நடத்திய பரிசோதனைகளின் முடிவுகளைப் பகுதியளவாவது வெளியிட்டார்கள்.
- இதுபோன்ற மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், இது குறித்த தரவுகளை இன்னும் தரவில்லை. இந்தப் பரிசோதனைக்குத் தேவையான தன்னார்வலர்கள் கிடைக்காததே இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் தரும் தரவுகள்தான் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையையும் செயல்திறனையும் உறுதிப்படுத்தும்.
- மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 50% மட்டுமே தடுப்பூசி பெறக்கூடிய சூழலில் தன்னார்வலர்கள் இருப்பதால், அவர்கள் அந்தப் பரிசோதனையில் பங்கேற்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது அறமற்றது. எஸ்ஐஐயும் பாரத் பயோடெக் நிறுவனமும் போதுமான அளவுக்குத் தரவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத சூழலில் ஏன் அவசர அவசரமாக அந்தத் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. கொடிய நோய்களுக்கெல்லாம் தடுப்பூசித் திட்டம் உருவாக்கப்பட்டு பெருமளவில் தடுப்பூசி போடப்பட்டு அந்நோய்கள் ஒழித்துக்கட்டப்பட்டிருந்தும் நம் நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான உணர்வு மக்களிடையே இன்னமும் நிலவித்தான் வருகிறது. இந்தச் சூழலில் அரசு ஏன் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பே.
நன்றி: தி இந்து (14 – 01 – 2021)