TNPSC Thervupettagam

தடுப்பூசியால் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம்

February 10 , 2024 341 days 266 0
  • உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் 6,04,000 பேர் இந்தப் புற்றுநோயால் உலக அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வருடந்தோறும் 1,23,907 பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 77,348 பேர் உயிரிழக்கிறார்கள்.
  • ஒவ்வொரு மணி நேரத்திலும் இந்தியாவில் எட்டுப் பெண்கள் இப்புற்றுநோயினால் இறக்கிறார்கள் என்பது வேதனை தரும் செய்தி. இப்புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் இதிலிருந்து முழுமையாகக் குணமடைய முடியும். ஆனால், இப்புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் இறப்புகள் ஏற்படுகின்றன.

இரண்டாம் இடம்

  • இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டில் நாட்டில் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் அதிக மாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசியப் புற்று நோய்ப் பதிவுத் திட்டத்தின் அறிவிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8,534 பெண்கள் இவ்வகைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாருக்கு ஏற்படும்

  • புகைபிடிக்கிறவர்கள்,நோய் எதிர்ப்புத் திறன் குன்றியவர்கள், எச்..வி தொற்று கொண்டவர்கள், பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆள்பட்டவர்கள், உடல் பருமனுடைய வர்கள், கருத்தடை மருந்துகளை அதிகம் பயன்படுத்திய வர்கள், இளம் வயதிலேயே பாலுறவில் ஈடுபட்டவர்கள் (குறிப்பாக 18 வயதுக்கு முன்னதாக), பலருடன் பாலுறவில் ஈடுபட்டவர்கள், பரம்பரையாகக் குடும்பங்களில் இப்புற்றுநோயைக் கொண்டவர்கள், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் போன்றோருக்கு இப் புற்றுநோய் ஏற்படச் சாத்தியம் அதிகம்.

அறிகுறிகள்

  • உடலுறவு கொள்ளும்போது வலியும் உடலுறவுக்குப் பிறகும் மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தப்போக்கும் ஏற்படும். மாதவிடாய் ரத்தப்போக்கு வழக்கத்தைவிட அதிகமாகவும் பல நாள்கள் வரை நீண்டும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, பிறப்புறுப்பில் இருந்து திரவம், ரத்தம் கசிவதோடு துர்நாற்றம் வீசும். வெள்ளைப்படுதலும் ஏற்படலாம். இத்துடன் இடுப்பு வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், கழிக்கும்போது எரிச்சல், கால்களில் வீக்கம், எலும்பு வலி, எடை இழப்பு, பசியின்மை, சோர்வு, முதுகு வலி, வயிற்று வலி ஆகியவையும் இதன் அறிகுறிகள்.

புற்றுநோயின் வகைகள்

  • எந்த செல்லில் இருந்து உருவா கிறது என்பதைப் பொறுத்து மூன்று வகை களில் இப்புற்றுநோய் ஏற்படுகிறது.

# ஸ்குவாமஸ் செல் கார்சினோமா

  • இது தட்டையான மெல்லிய செல் களில் இருந்து உருவாகும். 90% பெண் களுக்கு இவ்வகைப் புற்றுநோயே ஏற்படும்.

# அடினோகார்சினோமா

  • இவ்வகைப் புற்றுநோய் சுரப்பு செல்களில் இருந்து உருவாகும்.

# இரண்டும் சேர்ந்த கலப்பு வகை

  • இவ்வகைப் புற்றுநோயில் மேற்கூறிய இரண்டு வகைப் புற்றுநோய் செல்களுமே சேர்ந்து இருக்கும்.

புற்றுநோய் நிலைகள்

  • கருப்பை வாய்ப் புற்றுநோயில் நான்கு முக்கிய நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் பல உள்பிரிவு களும் உள்ளன. உதாரணத்திற்கு, முதல் நிலை என்றால் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். நான்காம் நிலை என்றால் புற்றுநோய் உடலெங்கும் பரவிக் குணப்படுத்தச் சிரமப்படும் சிக்கலான நிலை என்று அர்த்தம்.

மருத்துவப் பரிசோதனைகள்

  • கோல்போஸ்கோபி, பாபனி கோலாவ் சோதனை (பாப் ஸ்மியர்), பாபிலோமா வைரஸ்களின் டிஎன்ஏ சோதனைகள் முதன்மையானவை. இச்சோதனைகளுக்காகக் கருப்பை வாய்ப் பகுதி செல்கள் மகப்பேறு மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும். இதில் புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகள் தெரிந்தால் அப்பகுதியில் திசுப்பரிசோதனை செய்து புற்று நோயை உறுதிசெய்வார்கள்.

பின் பரிசோதனைகள்

  • திசுப்பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன் தன்மை, நிலை, அது எந்த அளவிற்கு உடலில் பரவியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே பரிசோதனைகளுடன் சிடி ஸ்கேன், எம்.ஆர்., பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்துகொள்வது அவசியம். அச்சோதனைகள் புற்றுநோயின் முழு விவரங்களைப் பெறவும், சரியான சிகிச்சையை வழங்கவும் உதவும்.

சிகிச்சை

  • புற்றுநோயின் வகை, நிலை, தரம், பரவிய அளவு, நோயாளி யின் உடல் நலம், அவரது உடல் எந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்கிறது போன்றவற்றைப் பொறுத்து சிகிச்சை அமையும். அதன் அடிப்படையில், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோ தெரபி, இலக்கு சிகிச்சை, இம்யூனோ தெரபி, பராமரிப்பு சிகிச்சை எனப் பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.

மனித பாபிலோமா வைரஸ்

  • கருப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் பாபிலோமா வைரஸ், சிறிய உறை இல்லாத, இரட்டை இழைகள் கொண்ட டிஎன்ஏ வைரஸ் ஆகும். இவற்றில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. இவை மனிதத் தோல், சவ்வுப்படலம், பிறப்புறுப்பு போன்றவற்றைப் பாதிக்கும்.
  • மனித பாபிலோமா வைரஸ் பாலியல் உறவு கொண்ட அனைவரிடமும் தொற்றிக் கொள்ளும். ஆனால், அனைவருக்கும் புற்று நோய் ஏற்படுவதில்லை. பலருக்கு உடலின் நோய் எதிர்ப்பாற்றல் இந்த வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்திவிடும். நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதவர் களிடம் இப்புற்றுநோய் ஏற்படுகிறது.
  • கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட, 95% மனித பாபிலோமா வைரஸ்களின் தொற்றே காரணம். கருப்பை வாய்ப் புற்றுநோய் மட்டுமல்லாமல் பெண், ஆண் பிறப்புறுப்பு, ஆசன வாய்ப்பகுதி, வாய்-தொண்டை பகுதி என இருபாலினருக்கும் புற்றுநோயை இவ்வைரஸ் ஏற்படுத்தலாம்.
  • மனித பாபிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி: மனித பாபிலோமா வைரஸ் ஆறு வகையான புற்றுநோயை ஏற்படுத்துவதால், மனித பாபிலோமா வைரஸின் தடுப்பூசி ஆறு வகைப் புற்றுநோய்களைத் தடுக்கிறது. தடுப்பூசியை ஒன்பது வயதிலேயே செலுத்திக்கொள்வது சிறந்தது. அப்படிச் செலுத்த முடியாவிட்டால், முதல் தவணை 11-12 வயதில் பரிந்துரைக்கப்படுகிறது. 15 வயதிற்குள் கொடுக்கப்பட்டால் இரண்டு தவணை தடுப்பூசிகளே போதுமானவை.

உலக சுகாதார நிறுவனப் பரிந்துரை

  • உலக சுகாதார நிறுவனம் தற்சமயம் 9-14 வயதுடைய சிறார்களையே (ஆண், பெண்) இலக்காக வைத்து இத்தடுப்பூசி யைப் பரிந்துரைத்துள்ளது. பாலியல் தொடர்பு, உடலுறவு போன்றவை நிகழ்வதற்கு முந்தைய வயதிலேயே இத்தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கெனவே பாலுறவு வைத்துக்கொண்டவர்கள், திருமணம் ஆனவர்களுக்கு இந்தத் தடுப்பூசி முழுமையான பாதுகாப்பை அளிக்காவிட்டாலும் குறைந்தபட்ச (44%) பாதுகாப்பைத் தரும்.

தடுப்பூசியை எப்படிச் செலுத்திக் கொள்ள வேண்டும்

  • பாபிலோமா 4 வைரஸ் வகைகளிலி ருந்தும் 9 வைரஸ் வகைகளிலிருந்தும் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை 9-26 வயதுடைய ஆண்/பெண் என இருபாலினரும் செலுத்திக் கொள்ள லாம். இவர்கள் முதல் தடுப்பூசியைச் செலுத்திய பிறகு, இரண்டாவது தடுப்பூசியை இரண்டு மாதங்கள் கழித்தும் மூன்றாம் தடுப்பூசியை ஆறு மாதங்கள் கழித்தும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
  • பாப்பிலோமா 2 வைரஸ் வகைகளி லிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை 10-25 வயதுடைய பெண்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் முதல் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட பிறகு, இரண்டாம் தடுப்பூசியை ஒரு மாதம் கழித்தும் மூன்றாம் தடுப்பூசியை ஆறு மாதங்கள் கழித்தும் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசியால் பயப் படக்கூடிய பின்விளைவுகள் எதுவும் இல்லை.

வராமல் தடுப்பது எப்படி

  • வரும் முன் காப்போம்' என்கிற அடிப்படையில் மேற்கூறிய தடுப்பூசி களை எந்தவித அச்சமும் இன்றி உரிய நேரத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக பாப் ஸ்மியர் (Pap smear Test) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்