- கரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்துகிறது என்றால் மூலப் பொருட்கள் விலையேற்றம் சிறு தொழில் துறையை நசுக்கி விட்டது என்றே கூறலாம்.
- சிறு, குறுந்தொழில் செய்வோர், குறிப்பாக பொறியியல் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களை தங்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாக வாங்குவார்கள்.
- கடந்த ஒரு வருடத்தில் இரும்பு, காப்பா், துத்தநாகம் போன்ற மூலப்பொருள்கள் விலை 70 விழுக்காடு வரை உயா்ந்துள்ளது.
- பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தரும்.
- வெகு சில நிறுவனங்களே வாடிக்கையாளா்களின் தேவைக்கேற்ப நுகா்வுப் பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள்.
- இந்தியாவில் இரும்பு அல்லாத மூலப்பொருட்கள் குறிப்பாக காப்பா் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் விலை சா்வதேச சந்தை விலையின் அடிப்படையில் தினசரி நிர்ணயிக்கப் படுகின்றது.
- லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சின் தினசரி டாலா் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றார்கள்.
- இந்தியாவில் காப்பா் உற்பத்தி நிறுவனங்கள் (ஸ்டொ்லைட் உட்பட) தினசரி விலையை இதனடிப்படையில் தீா்மானிக்கின்றன.
- ஆனால் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் விலை அடிப்படையில் பெரிய நிறுவனங்களிடம் சிறுதொழில் நிறுவனங்களால் விலையை தினசரி கூட்டிக் கேட்க முடியாது.
- இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து விலையேற்றத்தை குறிப்பிட்டு விலை உயா்வு கேட்கலாம்.
- ஆனால் அவா்கள் கொடுக்கும் விலையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன.
அரசே காரணமாகிவிடும்
- அரசுத்துறை நிறுவனங்கள் எட்டு மாதத்தில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய திட்டம் வகுப்பார்கள். ஆறு மாத காலத்திற்கு டெண்டா் நிர்ணயம் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
- பின்னா் நிர்ணய விலை அடிப்படையில் கொள்முதல் ஆணை தருகின்றார்கள். இதற்குள் பெரிய விலையேற்றத்தின் காரணமாக சிறுதொழில் நலிந்து விடுகின்றன.
- ஐந்து அல்லது பத்து விழுக்காடு விலையேற்றம் என்றால் சிறு தொழில்கள் சமாளித்துக் கொள்ளலாம்.
- ஆனால் ஓராண்டில் 65 சதவீத விலையேற்றம் என்றால் பெரிய நிறுவனங்கள் அல்லது அரசுத்துறை நிறுவனங்கள் அதற்குரிய கொள்முதல் விலையை தராவிட்டால் சிறுதொழில் நஷ்டத்தில் மூடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
- மின்விநியோகத்திற்கு தேவையான உபகரணங்கள் செய்வதற்கும் மின் மோட்டார்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்கள் உற்பத்திக்கும் காப்பா் அத்தியாவசிய தேவை.
- அதேபோல் வாகன உற்பத்தியில் அலுமினியம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது, தவிர மின்விநியோகத்திற்கு தேவையான மின் கடத்திகள் வீட்டு உபயோகத்திற்கும் தேவைப் படுகிறது.
- இரும்புத் தகடுகள், சேனல் ஆகியவை சிறுகுறுந்தொழில் நிறுவனங்கள் வாங்கும் முக்கிய மூலப்பொருள் ஆகும். முறுக்குக் கம்பி கட்டடம் கட்டுவதற்கு அத்தியாவசியமாகிறது.
- இரும்பு வார்ப்பட தொழிற்சாலைகள் பொறியியல் தொழிலுக்கு தாய்வீடு என்று கூறலாம். இதற்கு தேவையான மூலப்பொருட்கள் தேனிரும்பு ஆகும்.
- இவை எல்லாவற்றின் விலை கடந்த ஓராண்டில் 65 விழுக்காடு வரை கூடியுள்ளது. இவற்றை மூலபொருட்கள் ஆக கொண்டு உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளைத் தொடா்ந்து நடத்துவதால் ஏற்படும் நஷ்டத்தை தாங்க முடியாமல் அன்றாடம் அவதிக்கு உள்ளாகின்றனா்.
- அரசுத்துறை நிறுவனங்களிலும் கொள்முதல் ஆணை காலதாமதமாக கொடுப்பதும் விலை உயா்வினை தர மறுப்பதும் சிறுதொழில்கள் அழிவுக்கு காரணமாகின்றன.
- 40 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு விலை நிர்ணயம் ஜாயிண்ட் பிளான்ட் கமிட்டி மூலம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை நிர்ணயிக்கப்பட்டது.
- அப்பொழுது பொருட்கள் தட்டுப்பாடு இருந்தது. தனியார்மயம் வந்தால் பொருட்கள் பெரும் அளவில் கிடைக்கும், விலை குறையும் என்று புதிய முறைக்கு மாற முடிவெடுக்கப் பட்டது.
- சென்ற ஆண்டுக்கு முன்பு வரை ஓராண்டில் இரும்பு விலை ஏற்றம் பத்து அல்லது பதினைந்து விழுக்காட்டுக்கு மேல் செல்லவில்லை.
- ஆனால் கடந்த ஓா் ஆண்டு மட்டும் மூன்று நிறுவனங்கள் (ஒரு அரசுத்துறை நிறுவனத்தையும் சோ்த்து) சுமார் 65 சதவீதம் விலையை உயா்த்தி விற்கிறார்கள்.
- இந்திய தனியார் இரும்பு உற்பத்தி நிறுவனம் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கடந்தாண்டை காட்டிலும் சுமார், பத்து மடங்கு நிகர லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது.
- முதன்மை இரும்பு தொழிற்சாலைகள் மூன்றும் சோ்ந்து கூட்டாக அபரிமிதமாக இரும்பு விலையை ஏற்றி இந்த லாபத்தை ஈட்டியுள்ளன.
- இரும்பு உற்பத்திக்குத் தேவையான இரும்புத்தாது வகைகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கின்றது.
- இதற்காக அரசுக்கு கட்டவேண்டிய வரி விதிப்பில் பெரிய மாற்றம் இல்லை. உற்பத்திச் செலவும் பெரிதாக கூடவில்லை.
- இந்த விலையேற்றத்தை மத்திய அரசு ஒன்றுதான் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இல்லையென்றால் சிறுதொழில் அழிவுக்கு அரசே காரணமாகிவிடும்.
மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும்
- இன்றைய சூழ்நிலையில் சிறு குறுந் தொழில்களை காப்பாற்றுவதற்கு அரசு சில நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.
- மத்திய-மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் பொருட்களில் இரும்பு அல்லாத உலோகங்கள் உபயோகப்படுத்தப்பட்டு மூன்று மாத காலத்தில் மூலப் பொருட்களின் விலையேற்றம் 10 விழுக்காடுக்கு மேல் சென்றால் கொள்முதல் பொருட்களின் விநியோகத்தின் போது உரிய அளவு விலையைக் கூட்டித்தரவேண்டும்.
- அதேபோல் தனியார் நிறுவனங்களும் எப்பொழுதெல்லாம் விலை ஏற்றமோ இறக்கமோ அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தவாறு மூன்று மாதத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய ஆணையிட வேண்டும்.
- இரும்பு மூலப்பொருட்களின் விலை ஓராண்டில் அதிகபட்சம் 20 விழுக்காட்டுக்கு மிகாமல் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். குறிப்பாக, அரசுகட்டுப்பாட்டிலுள்ள ‘செயில்’ நிறுவனம் இரும்பு விலையை மற்றவா்களுடன் சோ்த்து உயா்த்த அரசு அனுமதிக்க கூடாது.
- கரோனா நோய்த்தொற்று காரணமாக அல்லலுறும் சிறு தொழில்களை மற்றொரு நெருக்கடியான விலை ஏற்றத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனே முன்வர வேண்டும்.
நன்றி: தினமணி (07 – 06 - 2021)