TNPSC Thervupettagam

தடுமாறும் தாய் பல்கலைக்கழகம்

October 1 , 2024 56 days 116 0

தடுமாறும் தாய் பல்கலைக்கழகம்

  • இந்தியாவில் உயர் கல்வி வசதிகளை உருவாக்க வேண்டும் என்கிற திட்டத்தில் ஆங்கிலேயர்கள் இறங்கிய​போது, முதல்​கட்டமாக முக்கியமான மூன்று நகரங்​களில் பல்கலைக்​கழகங்கள் தொடங்​கப்​பட்டன. 1857இல் தொடங்​கப்பட்ட சென்னைப் பல்கலைக்​கழகமும் அவற்றில் ஒன்று.
  • தென்னிந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்​கழகங்​களுக்கு இதுவே தாய். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர் சி.வி.ராமன், அப்துல் கலாம் போன்றோர் இதன் முன்னாள் மாணவர்கள். இத்தகைய பின்புலம் கொண்ட பல்கலைக்​கழகம் விரைவில் மூடப்​படுமோ எனப் பேச்சு அடிபடும் அளவுக்குக் கடந்த இரண்டு ஆண்டு​களாகப் பல்வேறு சிக்கல்கள் நிலவு​கின்றன.

அதிகார மோதல்:

  • தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கும் இடையே நடந்து​வரும் அதிகார மோதல், பல்கலைக்​கழகங்​களின் செயல்​பாடு​களிலும் எதிரொலிக்​கிறது. சென்னைப் பல்கலைக்​கழகம் ஓராண்​டுக்கும் மேலாகத் துணைவேந்தர் இன்றி இயங்கிவரும் நிலைக்கும் இந்த முரண்பாடே முதன்மைக் காரணமாகக் கூறப்​படு​கிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அரசுப் பல்கலைக்​கழகங்​களுக்கு வேந்தராக உள்ள மாநில ஆளுநர், இணைவேந்தராக உள்ள உயர் கல்வித் துறை அமைச்சர், துணைவேந்தர் ஆகியோர் அதிகாரப் படிநிலை வரிசையில் முன்னணி வகித்​தா​லும், நடைமுறையில் அந்தந்த மாநில அரசுகள்தான் பல்கலைக்​கழகத்தின் அன்றாடச் செயல்​பாடு​களில் உரிமை செலுத்துவதாக உள்ளன.

துணைவேந்தர் இல்லாததன் விளைவு:

  • சென்னைப் பல்கலைக்​கழகத் துணைவேந்தர் எஸ்.கௌரி ஆகஸ்ட், 2023இல் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு சட்டமன்​றத்தில் நிறைவேற்​றப்பட்ட தனிச் சட்டம்தான் துணைவேந்தர் நியமனத்​துக்கு அடிப்படை. அதன்படி உருவாக்​கப்​படும் நியமனக் குழுதான் புதிய துணைவேந்தரை நியமிக்​கும். இக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரைச் சேர்க்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்​தியதை ஒட்டிச் சிக்கல் ஏற்பட்டது.
  • இது மாநில அரசுக்கும் ஆளுநருக்​குமான மோதலாக மாறி, நீதிமன்​றத்தில் வழக்குத் தொடுப்​பதுவரை சென்றது. தற்போதுவரை துணைவேந்தர் நியமிக்​கப்​பட​வில்லை. உயர் கல்வித் துறைச் செயலர் முதலான மூவர் குழு, துணைவேந்தர் பொறுப்பைக் கையாள்​கிறது. எல்லாக் கோப்பு​களும் இம்மூவரின் பார்வைக்கும் தனித்​தனி​யாகச் சென்று​வரும் நிலை.
  • அனைத்து வேலைகளும் தாமதம் ஆகின்றன; முக்கியமான முடிவுகள் எடுக்கத் தயங்கும் சூழலும் ஏற்பட்​டுள்ளதாக ஆசிரியர் அமைப்புகள் கூறுகின்றன. தேர்வுக் கட்டுப்​பாட்டு அலுவலரும் பொறுப்பு அதிகாரி​தான். துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழாவும் தள்ளிப்​போனது. பல மாணவர்கள் படித்து முடித்தும் பட்டம் பெற முடிய​வில்லை. அவர்கள் உயர் கல்விக்கோ, வேலைக்கோ விண்ணப்​பிப்​பதும் சிக்கலுக்கு உள்ளானது.

ஆசிரியர் பற்றாக்குறை:

  • 540 பேர் ஆசிரியர்​களாகப் பணிபுரிய வேண்டிய நிலையில், 193 பேர் மட்டுமே இங்கு உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணியாளர்​களில் 1,417 பேர் இருக்க வேண்டிய நிலையில் 460 பேர் மட்டுமே இருப்​ப​தாகவும் ஆசிரியர் / பணியாளர் சங்கங்கள் கூறுகின்றன. கௌரவ ஆசிரியர்​களையும் ஒப்பந்தப் பணியாளர்​களையும் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பற்றாக்​குறையைச் சமாளித்​துக்​கொண்​டிருக்​கிறது.
  • சில துறைகள் ஓராசிரியரைக் கொண்டும் ஈராசிரியரைக் கொண்டும் இயங்கு​கின்றன. கௌரவ ஆசிரியர்​களுக்குச் சம்பளம் கொடுப்​பதும் சில முறை தடைபட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஒப்பந்தப் பணியாளர்​களுக்குச் சம்பளம் அளிக்​கப்​பட​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இவர்களில் தூய்மைப் பணியாளர்​களும் அடக்கம்.
  • சென்னைப் பல்கலைக்​கழகத்தின் கீழ் 133 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 91 சுயநிதிக் கல்லூரிகள். பல்கலைக்கழக மானியக் குழு நிர்ண​யித்த ஊதியத்தைக் கொடுக்க​வில்லை எனக் கூறி அக்கல்​லூரி​களின் ஆசிரியர்களை செனட் தேர்தலில் பங்குபெற விடாமல் சென்னைப் பல்கலைக்​கழகம் முன்பு தடுத்தது. ஒரு பல்கலைக்​கழகமாக அது எடுக்​கப்பட வேண்டிய சரியான நடவடிக்கை​தான்.
  • ஆனால், தனது ஆசிரியர்​களுக்கே உரிய காலத்தில் சம்பளம் கொடுக்க இயலாத நிலை இந்தப் பல்கலைக்​கழகத்​துக்கு ஏற்பட்டது. ஓய்வு​பெறும் ஆசிரியர்​களுக்கு மாதந்​தோறும் ஓய்வூ​தியம் மட்டும் வழங்கப்​படு​கிறது. கருணைத்தொகை உள்ளிட்ட பிற ஓய்வூ​தியப் பலன்கள் 2018இலிருந்து நிலுவையில் உள்ளன. முழுமையான ஓய்வூ​தியப் பலன்களைக் கேட்டுப் போராடிவரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்​களில் 37 பேர் முதுமை காரணமாக இறந்து​விட்டனர்.

பல்கலைக்​கழகமா? தனியார் நிறுவனமா?

  • ஓய்வூ​தியம், ஆராய்ச்சி போன்ற​வற்றுக்கான நிதியை ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோ​ருக்குச் சம்பளம் கொடுக்கப் பல்கலைக்​கழகம் பயன்படுத்​தியது, இன்னொரு பிரச்​சினைக்கு வழிவகுத்தது. தணிக்கை அறிக்கையில் இது ஆட்சேபிக்​கப்​பட்டதை முன்வைத்து, பல்கலைக்​கழகத்​துக்கு வழங்கும் நிதியை மாநில அரசு குறைத்தது. பல்கலைக்​கழகத்தின் செலவில் பாதிக்கும் மேல் அரசின் ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டது.
  • இதைக் காரணம் காட்டி வருமான வரித் துறை, சென்னைப் பல்கலைக்​கழகத்தைத் தனியார் நிறுவன​மாகக் கருதி, அதற்கேற்ப வரி விதித்தது. முந்தைய 3 ஆண்டு​களாகப் பல்கலைக்​கழகம் 424 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக வருமான வரித் துறை 2024 தொடக்​கத்தில் நோட்டீஸ் அனுப்​பியது. இதனால் பல்கலைக்​கழகத்​துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்​கப்​பட்டன.
  • இந்தியாவில் எந்த ஓர் அரசுப் பல்கலைக்​கழகமும் வருமான வரித் துறையால் இப்படி நடத்தப்​பட்​ட​தில்லை. இந்தப் பிரச்சினை பின்னாள்​களில் தீர்க்​கப்​பட்டு​விட்​டாலும், பல்கலைக்​கழகத்தின் நற்பெயர் கேள்விக்​குள்​ளானது. மாநில அரசுக்கு மத்திய அரசு ஏற்படுத்தும் மறைமுக நெருக்​கடி​யாகவும் இது பார்க்​கப்​பட்டது.

தமிழக அரசின் பாராமுகம்:

  • ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதலோடு, பல ஆண்டு​களாகவே தமிழ்நாடு அரசு பல்கலைக்​கழகத்​திடம் பாராமுகமாக இருந்து வருவதும் பின்னடைவுக்கு இட்டுச்​சென்​றுள்ளது. நிர்வாகத்தில் குளறுபடி இருப்பின் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு தீர்வுகாண முடியும். சில ஆண்டு​களுக்கு முன் இதே சென்னைப் பல்கலைக்​கழகத்தில் நிர்வாகப் பிரச்​சினைகள் எழுந்தன. அப்போது ஐஏஎஸ் அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி அரசால் பிரத்​யேகமாக நியமிக்​கப்​பட்டுத் தீர்வு காணப்பட்ட நிகழ்வை ஒரு முன்னு​தா​ரண​மாகக் கல்வி ஆர்வலர்கள் கூறுகின்​றனர்.
  • “சென்னைப் பல்கலைக்​கழகத்​துக்கு எனத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி பல ஆண்டு​களாகக் குறைக்​கப்​பட்டு​விட்டது. அதன் விளைவுதான் இப்போது எதிர்​கொள்​ளப்​படு​கிறது. பல்கலைக்​கழகத்​துக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு அளிக்க வேண்டும். தனியார் பல்கலைக்​கழகமாக இருந்த அண்ணா​மலைப் பல்கலைக்​கழகம் கடுமையான நிதி, நிர்வாக நெருக்​கடிக்கு உள்ளாகி​யிருந்த நிலையில், தமிழக அரசு அதற்குப் பொறுப்​பேற்றுக்​கொண்டு, 2013இல் அதை அரசுப் பல்கலைக்​கழகம் ஆக்கியது. அந்தப் பிரச்​சினையோடு ஒப்பிடு​கை​யில், சென்னைப் பல்கலைக்​கழகம் எதிர்​கொண்​டிருப்பது எளிய பிரச்​சினை​தான்” என்கிறார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காந்திராஜ்.

பொற்காலமும் பொறுப்பு​களும்:

  • சென்னைப் பல்கலைக்​கழகம் உள்பட அரசு உயர் கல்வி நிறுவனங்​களின் தரத்தைத் தக்கவைப்​பதில் ஆளுநருக்கு உள்ள அக்கறை வரவேற்​கப்பட வேண்டியதே. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்துப் பேசும் சர்க்​காரியா குழு, புஞ்சி குழு ஆகியவை ஆளுநர் பதவியில் இருப்​பவருக்குப் பல்கலைக்கழக வேந்தருக்கான அதிகாரங்​களைப் பல வரம்பு​களுக்கு உட்பட்டே வழங்கு​கின்றன. மாநில அரசின் கட்டுப்​பாட்டுக்குக் கீழ் வரும் பல்கலைக்​கழகங்​களில் அவற்றின் தனி உரிமையை ஆளுநர் மதிக்க வேண்டும். இதுதான் இந்தியா முழுவதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.
  • மருத்​துவரும் கல்வி​யாள​ருமான ஆர்க்காடு லட்சுமணசாமி, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் தடம்ப​தித்த ஒரு துணைவேந்தர். அவரது பணிக்​காலத்தில் மாநில முதல்வராகவே இருப்பினும், பல்கலைக்கழக வளாகத்​துக்குள் நுழைவதை முடிந்த வரை தவிர்க்கும் சூழல் இருந்தது. பல்கலைக்​கழகம் அரசியலுக்கு அப்பாற்​பட்டதாக இருக்க வேண்டும் என நினைத்​ததோடு, அதை உறுதியோடு செயல்​படுத்​துபவ​ராகவும் லட்சுமணசாமி இருந்​தார். காமராஜர், பக்தவத்சலம் போன்ற​வர்​கள்கூட, லட்சுமணசாமியின் கொள்கைக்கு மதிப்பு அளித்து முதிர்ச்​சி​யுடன் நடந்து​கொண்​டனர். இத்தகைய முன்னோடிகள் பணிபுரிந்த இடம் இது.

புத்தொளி பாயட்டும்:

  • துணைவேந்தர் இல்லாமலே சென்னைப் பல்கலைக்​கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று முடிந்​துள்ளது. உயர் கல்வித் துறைச் செயலர், துணைவேந்தர் பொறுப்பில் செயல்​பட்​டுள்​ளார். இது மிக அரிதான நடைமுறை. எனினும் நீண்ட காலமாகக் காத்திருந்த 1,300 மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது ஆறுதலை அளிக்​கிறது. முந்தைய பட்டமளிப்பு விழாவில் கலந்து​கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்​டா​லின், “காமராஜரின் ஆட்சி பள்ளிக் கல்வியின் பொற்கால​மாகவும் கலைஞரின் ஆட்சி கல்லூரி​களின் பொற்கால​மாகவும் இருந்​ததைப் போல எனது ஆட்சி உயர் கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் எனத் திட்ட​மிட்டுச் செயல்​படுத்​திக்​கொண்​டிருக்​கிறோம்” என்றார்.
  • ஏழை மாணவர்​களின் உயர் கல்விக் கனவுகளை நிறைவேற்று​வதில் சென்னைப் பல்கலைக்​கழகம் போன்ற​வைதான் முன்னிற்க முடியும். நெருக்​கடியில் சிக்கி​யுள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்​களுக்குப் புத்தொளி பாய்ச்​சுவதன் மூலம் முதல்வர் ஸ்டாலினின் வார்த்​தைகள் செயல்​வடிவம் பெறட்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்