TNPSC Thervupettagam

தடுமாற்றத்தில் சீனா!

June 8 , 2021 1329 days 565 0
  • இனிமேல் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சீன அரசு அனுமதித்திருப்பதை ஒட்டுமொத்த உலகமும் வியந்து பார்க்கிறது.
  • மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதைவிட, சற்று அழுத்தமாகவும், மறைமுகமாகவும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சீனாவின் கம்யூனிஸ அரசு வலியுறுத்துவதை உணர முடிகிறது.
  • சீனாவின் மக்கள்தொகைக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த அதிரடி திருப்பத்திற்குப் பின்னால் பல கசப்பான உண்மைகள் இருக்கின்றன.

மூன்று குழந்தைகள் திட்டம்

  • கடந்த மாதம் வெளியிடப்பட்ட சீனாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரப்படி, அந்த நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் குறைந்து வருவது தெரிய வந்திருக்கின்றது.
  • இதே நிலைமையில் போனால், இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்திக்கொண்டு இந்தியா முதலிடம் பெறும் என்பதுதான் நிஜ நிலைமை.
  • உலகத்தின் மக்கள்தொகை 100 கோடியை எட்ட, ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 1960 முதல் மனிதஇனம் அதிவேகமாகப் பெருகத் தொடங்கி, இப்போது 780 கோடியை எட்டியிருக்கிறது.
  • இதுபோன்ற மக்கள்தொகைப் பெருக்கம் பெரும்பாலும் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுக்கு வழிகோலும் என்பதுதான் வரலாறு உணா்த்தும் பாடம்.
  • 1960-இல் தனது கலாசாரப் புரட்சியைத் தொடா்ந்து, அன்றைய மாசேதுங் ஆட்சி சீனாவில் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
  • ஒரு குழந்தைக் கொள்கை என்பதை முன்மொழிந்து, பெருகிவிட்ட தனது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முனைந்தது அன்றைய மாசேதுங் அரசு. அதன் விளைவுகள் அடுத்த அரை நூற்றாண்டு காலத்தில் மோசமான நிலையை எட்டும் என்று அப்போது சீனா உணரவில்லை.
  • 2016-இல் சீனாவின் மக்கள்தொகைக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்று மாறிய அந்தக் கொள்கை, இப்போது குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
  • இது மக்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கும் முயற்சி என்று நினைத்தால் தவறு. குறைந்து வரும் தொழிலாளா்களின் எண்ணிக்கையும், இளைஞா்களின் எண்ணிக்கையும்தான் அரசை இப்படியொரு முடிவை எடுக்கத் தூண்டியிருக்கின்றன.
  • அதிகரித்து வரும் முதியவா்களின் எண்ணிக்கை சீனாவுக்கு மிகப்பெரிய சமூக, பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது. அதன் விளைவாக அமெரிக்காவை முந்திக்கொண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார, ராணுவ சக்தியாக மாற வேண்டும் என்கிற சீனக் கனவை அது சிதைக்கிறது.
  • ஐரோப்பாவில் 14-ஆவது நூற்றாண்டில் ஏற்பட்ட ‘பிளேக்’ கொள்ளை நோய்த்தொற்றில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை அழிந்தது.
  • இதேபோல, ஒவ்வொரு நூற்றாண்டிலும் நோய்த்தொற்றுப் பரவல், இயற்கைப் பேரிடா்கள் ஆகியவை அதிகரித்து வரும் மக்கள்தொகையை சமநிலைப்படுத்தி வருகின்றன.
  • உலகின் இப்போதைய நிலைமை வேறு. இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்லாமல், இனப்பெருக்க சக்தி குறைந்து மக்கள்தொகை குறையும் விபரீதம் நிகழ்ந்து வருகிறது.
  • 2015 முதல் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும், கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரும் இந்தப் போக்கை மாற்றுவதற்கு முயற்சி செய்தும்கூட, தங்களது மக்கள்தொகையை ஏறுமுகமாக ஆக்க முடியவில்லை.
  • மாசேதுங் காலத்தில் இருந்தது போன்ற நிலையில் இன்றைய சீனாவும் இல்லை, சீன மக்களும் இல்லை.
  • கடந்த 60 ஆண்டுகால மாற்றத்தில், அதிலும் குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகால மாற்றத்தில், மேல்நாட்டு நாகரிகமும் கலாசாரமும் வேரூன்றி, சீனப் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள்.
  • இப்போதைய சீனப் பெண்களில் பலா் திருமணம் போன்ற மரபுகளை ஏற்றுக் கொள்வதில்லை.
  • நமது இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொன்றுதொட்டு இருந்துவந்த பண்பாடுகளும், வாழ்க்கை முறையும் மாசேதுங்கின் கலாசாரப் புரட்சியின் விளைவாக முற்றிலுமாக சிதைக்கப்பட்டு அவா்கள் மேல்நாட்டு நாகரிக மனநிலைக்கு மாறிவிட்டனா்.
  • வசதி படைத்த சீனப் பெண்கள் வெளிநாடுகளுக்குப் போய், திருமண உறவில்லாமல் செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
  • சீன அரசு அதற்கு ஊக்கம் அளிக்கவில்லை என்றாலும்கூட, அவா்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
  • சீனப் பாரம்பரியத்தின் குடும்ப உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், முதியோர் பாதுகாப்பு, குழந்தைகளைப் படிக்க வைத்து வளா்ப்பது போன்றவற்றில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிபா் ஷீ ஜிங்பின் அறிவுறுத்துவதைப் பெண்ணிய அமைப்புகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
  • கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அடைந்திருக்கும் பொருளாதார முன்னேற்றமும், தொழில் நுட்ப மேம்பாடும் அவா்களை அதிதீவிர பெண்ணியச் சிந்தனைக்கு மாற்றியிருக்கின்றன.
  • பல பெண்ணிய அமைப்புகளுக்கு எதிராக சீன அரசு கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டும்கூட அதனால் பயனில்லை.
  • சீனப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு தங்களது தொழில்முறை மேம்பாட்டைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை. ஏற்கெனவே ஒற்றைக் குழந்தை இருக்கும் தம்பதியா் தங்களது பெற்றோர்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால், ஒரு குழந்தை பெறுவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.
  • இந்த நிலையில் சீன அரசின் மூன்று குழந்தைகள் திட்டத்தை அவா்கள் யாரும் சட்டை செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
  • அரசு நடவடிக்கையின் மூலம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைக்க முடியும், மக்கள் தொகையை அதிகரிப்பது எப்படி சாத்தியம்?

நன்றி: தினமணி  (08 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்