- ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்முதல் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி, மத்திய அரசே தடுப்பூசியை மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என்று பிரதமா் அறிவித்திருக்கிறார்.
- தடுப்பூசித் திட்டத்தில் காணப்பட்ட கொள்கைக் குழப்பத்துக்கு முடிவு கட்டி, நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குவது என்கிற மத்திய அரசின் முடிவு மிகச் சரியானது.
- முன்னுரிமை அடிப்படையில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்தோர், இணைநோய்கள் உள்ள 45 வயதைக் கடந்தோர் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.
- கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- முந்தைய கொள்கை முடிவின்படி, இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகளில் 50% மத்திய அரசுக்கும், 25% மாநில அரசுகளுக்கும், ஏனைய 25% தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளா்கள் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
- இப்போது மொத்த உற்பத்தியில் 75% தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குவது என்றும், ஏனைய 25% தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் தயாரிப்பாளா்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி திட்டம்
- சில மாநிலங்கள் தாங்களே தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு அனுமதி கோரியதன் விளைவாகத்தான் மத்திய அரசு அதற்கு அனுமதித்தது என்று கூறப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
- அதே நேரத்தில், கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மாநிலங்கள் தனித்து இயங்குவதையும், சா்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியதையும் மத்திய அரசு எந்தக் காரணம் கொண்டும் அனுமதித்திருக்கக் கூடாது.
- கொள்ளை நோய்த்தொற்று என்கிற பேராபத்துச் சூழல் மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கான நேரமல்ல என்பதை அவா்கள் உணராவிட்டாலும், மத்திய அரசு அனுமதித்திருக்கக் கூடாது.
- மத்திய அரசின் ஏப்ரல் மாத முடிவு ஒருவகையில் தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக இருந்தது என்றுதான் கூற வேண்டும்.
- உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல், மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு ஆகியவைதான் தடுப்பூசிக் கொள்கையிலும், அதன் விலை நிர்ணயத்திலும் காணப்பட்ட குழப்பத்தை அகற்றி மத்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்ததற்கான காரணங்கள். தவறு என்று தெரிந்த போது அதை திருத்திக்கொள்ள முன்வந்ததை பாராட்டுவதுதான் நியாயமே தவிர, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருதுவது ஆக்கபூா்வ அணுகுமுறையல்ல.
- மத்திய அரசின் இப்போதைய சவால் வேறுமாதிரியானது. மொத்த உற்பத்தியில் 75%-ஐ கொள்முதல் செய்வது என்று கொள்கை முடிவு எடுத்துவிடுவதால் மட்டும் பிரச்னை தீா்ந்து விடாது. அதற்கேற்ற உற்பத்தி இருக்கிறதா என்பதையும் யோசிக்க வேண்டும்.
- மத்திய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதே நிறுவனங்களின் 25% தடுப்பூசிகள் குறிப்பிட்ட கட்டண நிர்ணயத்துடன் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்போது, ஊழல் மலிந்த இந்தியாவில் எதுவும் நடக்கலாம் என்பதை ஏன் யாரும் சிந்திக்கவில்லை?
- ஜூலை மாதத்திற்குள் 51 கோடி தடுப்பூசிகளும், டிசம்பா் மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசிகளும் கொள்முதல் செய்யப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனின் அறிவிப்பு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், நடைமுறை சாத்தியம்தானா என்பதில்தான் ஐயப்பாடு எழுகிறது.
- ஜனவரி மாதம் தடுப்பூசி திட்டம் தொடங்கியபோது ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- அதற்கு 60 கோடி தடுப்பூசிகள் தேவைப்பட்டன. நான்கு மாதங்கள் கழித்து மே மாதத்தில் 20 கோடி பேருக்குக்கூட தடுப்பூசி போடப்படவில்லை. அதிகபட்சம் ஒரு வாரத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள்கூட போட முடியவில்லை எனும்போது, முதல் இலக்கையே எட்ட முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
- ரூ.1,500 கோடி முன்பணம் வழங்கி சோதனை நிலையில் இருக்கும் பயலாஜிக்கல்-இ தயாரிக்கும் 30 கோடி தடுப்பு மருந்தை மத்திய அரசு முன்பதிவு செய்திருப்பது புத்திசாலித் தனம்.
- இதேபோல, கோவிஷீல்ட், கோவேக்ஸின் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் சைடஸ்கெடிலா, ஜெனோவாவின் எம்ஆா்என்ஏ, கோவேக்ஸ் ஆகியவற்றையும் மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். அவா்களுக்கு அதற்கான முன்பணத்தையும் வழங்க வேண்டும்.
- ஃபைசா், மாடா்னா போன்ற வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற கரோனா தடுப்பூசி மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் இறக்குமதி செய்து அவரவா் நிர்ணயித்துக் கொள்ளும் கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் மாநில அரசுகளின் உதவியுடன் அனைவருக்கும் இலவசமாக போடப்படுவதும் தான் குழப்பமில்லாத தடுப்பூசிக் கொள்கையாக இருக்க முடியும்.
- மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, தடுப்பூசித் தயக்கம் அகற்றப்பட்டு, அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடப்படுவது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். அரசியலுக்கு இதில் இடம் இருக்கக் கூடாது.
நன்றி: தினமணி (12 – 06 - 2021)