TNPSC Thervupettagam

தடையும் விடையும்

September 22 , 2023 481 days 255 0
  • மேற்கு வல்லரசுகள் மீது அதிருப்தி அடைந்த வளா்ச்சி அடையும் நாடுகளை கடனுதவியாலும், பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களில் பங்கெடுக்க வைத்தும் தன் பக்கம் ஈா்த்திருக்கிறது சீனா. சீனாவிலிருந்து தனது அணுகுமுறையில் வித்தியாசப்படும் இந்தியாவை அந்த நாடுகள் இப்போது நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன.
  • தெற்குலக நாடுகளுக்குத் தலைமை தாங்குவது என்பது எளிதொன்றுமல்ல. அந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொருளாதார வலிமையும், உற்பத்தித் திறனும் இல்லாதவரை அது வெறும் பகல் கனவாகத்தான் இருக்கும். உலகமயச் சூழலில் சா்வதேச அரசியல் நகா்வுகளை மேற்கொள்ள விழையும் இந்தியா, பல தா்மசங்கடங்களை எதிர்கொள்கிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, தற்போதைய அரிசி ஏற்றுமதி குறித்த அரசின் முடிவு.
  • உள்நாட்டு சந்தையில் அரிசி விலை அதிகரித்ததால், ஜூலை மாதமே பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்பு, அனுமதியில்லாமல் குருணை அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மெட்ரிக் டன்னுக்கு 1,200 டாலருக்கும் குறைவான விலையில் ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசிக்கு மத்திய அரசு தடை விதித்தது. சாதாரண அரிசியை பாசுமதி அரிசி என்கிற பெயரில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுப்பதுதான் அந்த முடிவுக்குக் காரணம்.
  • இந்தப் பின்னணியில் இப்போது அக்டோபா் 15-ஆம் தேதி வரை புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதியின் மீது இந்தியா ஒன்றன்பின் ஒன்றாக விதிக்கும் கட்டுப்பாடுகள் சா்வதேச அரங்கில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • உலக அரிசி சந்தையில் மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் (45%) நாடாக இந்தியா இருந்து வருகிறது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் - மே 2023-இல் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 21.1% அதிகம். மே மாதம் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 10.86% அதிகம். வெள்ளை அரிசியின் மீது ஏற்றுமதி வரியும், குருணை ஏற்றுமதிக்குத் தடை இருக்கும் நிலையிலும்கூட பாசுமதி அல்லாத அரிசி ரகங்களின் ஏற்றுமதி 7.5% அதிகரித்திருக்கிறது.
  • கடந்த 10 ஆண்டுகளாக உலகின் மிக அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா, தனது வேளாண் உற்பத்தியில் 19% அளவை ஏற்றுமதி செய்கிறது. உலகிலுள்ள வளா்ந்து வரும் நாடுகள் பலவும் தங்களது அரிசி தானியத் தேவைக்கு இந்தியாவைத்தான் நம்பியிருக்கின்றன. சா்வதேச விலையைவிட இந்திய அரிசியின் விலை குறைவு என்பது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
  • இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில், ரூ. 51,089 கோடி மதிப்புள்ள 1.77 கோடி டன் பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. 2022 - 23 -இல் ரூ.38,542 கோடி மதிப்புள்ள 45 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் அரிசி உற்பத்தியில், குறிப்பாக பாசுமதி ரக அரிசி உற்பத்தியில் பஞ்சாபும், ஹரியாணாவும் பெரும் பங்கு வகிக்கின்றன. நடப்பு ஆண்டில் ஜூலை - ஆகஸ்ட் மாதம், பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுமாா் 23 மாவட்டங்களில் நெல் சாகுபடிப் பரப்பு சற்று குறைவாகவும் இருந்தது. அப்படியிருந்தும் முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடித்து இதுவரை இல்லாத அளவிலான அரிசி உற்பத்தியை பஞ்சாப் மாநிலம் சாதித்திருக்கிறது.
  • நடப்பு காரீஃப் பருவத்தில் 5.87 லட்சம் ஹெக்டோ் பாசுமதி ரகம் உள்பட 31.93 லட்சம் ஹெக்டோ் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. சா்வதேச அரிசி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், பஞ்சாப் விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டக் காத்திருக்கிறார்கள்.
  • சா்வதேச சந்தையில் இந்த ஆண்டு பாசுமதி அரிசியின் விலை உச்சத்தைத் தொடும் நிலையில், உள்நாட்டு விலை குவிண்டாலுக்கு ரூ.4,500 அளவுக்கு உயரக்கூடும் என்பது எதிர்பார்ப்பு. அதனால்தான் பஞ்சாப் விவசாயிகள் வழக்கமான பயிர்களை நாடாமல், ஏற்றுமதிக்கு உகந்த பாசுமதியைப் பயிரிட முனைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசு உள்நாட்டு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறது.
  • பஞ்சாப் விவசாயிகள் மட்டுமல்ல, தங்களது உணவுத் தேவைக்கு இந்தியாவை நம்பியிருக்கும் பல நாடுகளும் அரசின் முடிவால் ஏமாற்றத்தை எதிர்கொள்ளக் கூடும். இந்தியாவுடன் நல்லுறவைப் பேணும் கினி, சிங்கப்பூா், மோரீஷஸ், பூடான் உள்ளிட்ட நாடுகள், அவற்றுக்கான ஏற்றுமதிக்கு தளா்வுகளை வழங்கக் கோரி இருக்கின்றன.
  • இந்தியாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதி செய்யும் தாய்லாந்தும், வியத்நாமும் தங்களுக்கு சாதகமாக இந்த நிலைமையைப் பயன்படுத்த முற்பட்டாலும், எல்-நினோ காரணமாக அவா்களது உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதால் விரைவிலேயே இந்தியாவின் முடிவை அவா்களும் மேற்கொள்ளக் கூடும்.
  • இந்தியாவின் முடிவால் சா்வதேச அரிசி விலை அதிகரித்து, பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். அதனால் இந்தியாவுக்கு சா்வதேச அரங்கில் அவப்பெயா் ஏற்படக் கூடும்.
  • கட்டுப்பாடு விதிப்பது, தடை விதிப்பது ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க சா்வதேச விலையில் அரசே உற்பத்தியை வாங்கிக்கொண்டு, அதைக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்பதன் மூலம் உள்நாட்டு விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்பதுதான், தோ்தலை எதிர்கொள்ளும் அரசு எடுக்க வேண்டிய சாதுரியமான முடிவு. அதனால் அரசுக்கு இழப்பு நேரிடலாம்; ஆனால், எதிர்ப்பு வலுக்காது!

நன்றி: தினமணி (22 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்