- கடந்த மூன்று மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகளை வங்க அரசு விடுவித்திருக்கிறது. மிகவும் குறைவான காலகட்டத்தில் இவ்வளவு பேர் இதற்கு முன் விடுவிக்கப்பட்டதில்லை. தண்டனையின் நோக்கம் குற்றச்செயலில் ஈடுபட்டவரைப் பழிவாங்குவது அல்ல; மாறாக, அவர்களைச் சீர்திருத்துவதே என்ற நிலைப்பாட்டை வங்க அரசு எடுத்திருப்பதன் வெளிப்பாடாகவே இந்தத் தண்டனைக் குறைப்பைப் பார்க்க வேண்டும்.
- நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 432 மற்றும் 433 ஆகியவற்றின் கீழ், சிறைத் தண்டனையை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. குறிப்பிட்ட அந்தச் சிறைவாசி, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்திருக்க வேண்டும் என்பதே அதற்கான நிபந்தனை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- எனினும், 2012-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பானது, ஆயுள் தண்டனை தொடர்பான மாநில அரசுகளின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்தது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதற்குமானது;
- 14 அல்லது 20 ஆண்டுகளோடு அது முடிவுக்கு வராது என்று அந்த அமர்வு தீர்ப்பளித்தது. கூடவே, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்கும்போது நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது. அதைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய அரசு அனுப்பிவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறைந்துவிட்டது.
- வங்கத்தைப் பொறுத்தவரையில் 2013-18 வரையில் ஏழு பேர் மட்டுமே முன்கூட்டி விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைந்து செயல்படுத்திவருகிறது. வங்கத்தில் முன்கூட்டியே சிறைவாசிகளை விடுவிப்பதற்கு உள்துறைச் செயலரின் தலைமையிலான மாநில தண்டனைச் சீராய்வுக் குழு அரசுக்குப் பரிந்துரைக்கிறது.
நடவடிக்கைகள்
- இந்தக் குழுவில் மாநில காவல் துறைத் தலைவரும், கொல்கத்தா நகரின் காவல் துறை ஆணையரும் இடம்பெற்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்தச் சிறைவாசி மனம் திருந்தியிருக்கிறாரா, அவரது நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கின்றனவா என்பதன் அடிப்படையிலேயே இந்தத் தண்டனைக் குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
- வங்கத்தில், 2019 டிசம்பரில் 46 ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2020 ஜனவரியில் 28 பேரும், பிப்ரவரியில் 27 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 75 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- காவல் துறை மேற்கொண்டுவரும் பரிந்துரை நடைமுறைகளும், மாநில அரசும் உயர் நீதிமன்றமும் இவ்விஷயத்தில் காட்டும் அக்கறையும் மற்ற மாநிலங்களைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றன.
- குற்றங்களுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதன் மூலம், மக்களிடம் அச்சுறுத்தும் மனோபாவத்தை உருவாக்குவது என்ற காலனியாதிக்கக் காலகட்டத்துத் தண்டனை முறைகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. தண்டனையின் நோக்கம் சீர்திருத்தம் ஒன்றே என்று இன்றைய நீதிக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. வங்கத்தின் முன்னுதாரணத்தை ஏனைய மாநிலங்களும் பின்பற்றட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05-03-2020)