- ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன், அரசமைப்புக் கூறு 161-ன் கீழ் தமிழ்நாடு ஆளுநரிடம் தனது தண்டனைக் காலத்தைக் குறைத்து சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரியிருந்த கருணை மனு ஆளுநரின் குற்ற மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் சார்ந்து பல விவாதங்களை எழுப்பியிருந்தது.
- இந்நிலையில், இம்மனு தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு இவ்விவாதங்களில் மேலும் வெளிச்சத்தைத் துலங்கச் செய்துள்ளது. என்றாலும்கூட, குற்ற மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆளுநரின் அதிகாரம் குறித்த தெளிவின்மையும் தொடரவே செய்கிறது.
- கூறு 161, குறித்த சில நேர்வுகளில் குற்றங்களை மன்னிப்பதற்கும் தீர்ப்புத் தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கும் குறைப்பதற்கும் ஆளுநருக்கு அதிகாரங்களை அளிக்கிறது. இக்கூறின் கீழ் பேரறிவாளன் தனது தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டி ஆளுநரிடம் கருணை மனுவை அளித்திருந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்குமாறு தமிழ்நாடு அமைச்சரவையில் செப்.9, 2018-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தின்படி எழுவரையும் விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
தாமதத்துக்கான காரணங்கள்
- இந்தத் தாமதத்துக்கு இவ்வழக்கு தொடர்பான சில விசாரணைகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, பல்நோக்கு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்பது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுவந்த நிலையில், மேலும் காலம் தாமதிக்காமல் உரிய முடிவெடுக்கப்படும் என்ற தகவல் ஜனவரி 21, 2021-ல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
- ஆனால், அதற்கடுத்த நான்காவது நாளில், குடியரசுத் தலைவரே இம்மனுவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரம் பெற்றவர் என்று ஆளுநரால் தீர்மானிக்கப்பட்டு அம்மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
- ஆளுநர் தரப்பில் தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கக் காலதாமதமாகிறது என்று உச்ச நீதிமன்றம் உணர்ந்துகொண்ட பிறகு பேரறிவாளனின் நன்னடத்தை, சிறையிலிருந்தபடியே கல்வித் தகுதிகளை வளர்த்துக்கொண்டது, சிறையில் ஏற்பட்ட அவரது உடல்நலிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் பரோலில் வெளியே வர அனுமதித்தது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் அந்த பரோலை நீட்டித்துவந்தது. ஆனாலும், ஆளுநர் தரப்பிலிருந்து தமது தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தாமதம் தொடரவே செய்தது.
- மாநில அமைச்சரவையின் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்பதே உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முன்வைத்த வாதம். அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் தமது அதிகாரத்தை அவர் தம் விருப்பப்படி பயன்படுத்த முடியாது என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
- பேரறிவாளனின் இந்த வாதத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கிட்ட வழக்கறிஞர்களும் ஆதரித்து நின்றனர். மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று இந்திய அரசமைப்பின் எந்தக் கூறிலும் சொல்லப்படவில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், மத்திய அரசின் சார்பில் இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் அதற்கு நேரெதிரான வாதங்களையே எடுத்துவைத்தனர்.
அமைச்சரவைக்கே அதிகாரம்
- கூறு 161-ன் கீழ் ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி முடிவெடுக்க வேண்டுமா, குடியரசுத் தலைவரின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டுமா என்பதுதான் பேரறிவாளன் வழக்கின் முக்கிய வினா. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு, ‘மரு ராம் எதிர் ஒன்றிய அரசு’ என்ற வழக்கில் 1981-ல் வழங்கிய தீர்ப்பு ‘மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், அமைச்சரவையின் முடிவுகளுக்கு மாறாக அவர் தமது விருப்பதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. அவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை அடியொற்றியே தற்போது பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
- மரு ராம் வழக்கில், அதற்கு முந்தைய சாம்ஷேர் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் 1974-ல் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பே பின்பற்றப்பட்டது. சாம்ஷேர் சிங் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். குடியரசுத் தலைவர், ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் தெளிவான தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் அலுவலகம் அதன்படி நடக்கக் கடமைப்பட்டது.
- அரசமைப்பைப் பாதுகாக்க உறுதியெடுத்துக்கொள்ளும் ஆளுநர் அரசமைப்பின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியவராவார். அப்படியிருந்தும்கூட, வழக்கு விசாரணைகளைக் காட்டி கருணை மனுவின் மீதான முடிவெடுப்பு மேலும் மேலும் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
காலவரையறை எவ்வளவு?
- கருணை மனுவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் கருணை மனுவின் மீது ஆளுநரே முடிவெடுக்குமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கருணை மனுவின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கான கால வரையறை இவ்வழக்கில் தீர்மானிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், அது விடை கிடைக்காத கேள்வியாக நீடிக்கிறது. ஆளுநரின் நிர்வாக அதிகாரங்களில் தலையிடாமல் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டின்படி தனது எல்லைக்குள் நின்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது.
- பேரறிவாளனுக்குத் தண்டனை குறைக்கப்பட்டிருப்பது அரசமைப்பின் மற்றொரு கூறான 142-ன் கீழாகத்தான். அந்தக் கூறின்படி, உச்ச நீதிமன்றம் தன் முன்பு முடிவுறாத நிலையிலுள்ள வழக்கு அல்லது பொருட்பாடு எதிலும் நிறைவுறு நீதி நிலைபெறச் செய்வதற்குத் தேவையாகும் தீர்ப்பாணையை வழங்கலாம். ஆளுநருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு மீது முடிவெடுக்கக் காலதாமதமானால் நீதிமன்றத்தை நாடலாம் என்பதும் இத்தீர்ப்பின் வழி உறுதியாகியிருக்கிறது.
- அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் அதற்கும்கூட இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதும் அரசமைப்புக்கு முரணானது என்பதையும் உச்ச நீதிமன்றம் தமது முந்தைய தீர்ப்பை உதாரணம்காட்டி தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், ஆளுநர் தம் முன்னர் பரிசீலனைக்கு வரும் குற்ற மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு தொடர்பான கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால வரையறை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பேசவில்லை. ஆளுநரே அதற்கான உட்பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது நீதிமன்றத்தின் எண்ணமாக இருக்கலாம்.
- உச்ச நீதிமன்றம் தனது எல்லைக்குள் நின்று நீதி வழங்கிவிட்டது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநரும் தனது எல்லைக்குள் நின்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியும் நீதிமன்றத்தின் இடையீடுகள் எழுவதற்கு முன்பே நீதி வழங்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இன்னமும் அவர் முன்னே இருக்கின்றன. அதே கொலை வழக்கில் ஆளுநரின் பரிசீலனைக்காக இன்னும் அறுவரது கருணை மனுக்களும் காத்திருக்கின்றன. அதிலும் இதே சர்ச்சை தொடருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
- உச்ச நீதிமன்றம் தனது எல்லைக்குள் நின்று நீதி வழங்கிவிட்டது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநரும் தனது எல்லைக்குள் நின்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியும் நீதிமன்றத்தின் இடையீடுகள் எழுவதற்கு முன்பே நீதி வழங்க வேண்டும்!
நன்றி: தி இந்து (20 – 05 – 2022)