TNPSC Thervupettagam

தண்டனையால் விளையும் தகுதியிழப்பு

April 1 , 2023 484 days 253 0
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
  • அந்தத் தீர்ப்பு வெளியான தேதியிலிருந்தே (மார்ச் 23) ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழந்துவிட்டதாக மக்களவைச் செயலரின் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து உறுப்பினர் தகுதியிழப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.

தகுதியிழப்புக்கான அடிப்படைகள்

  • இந்திய அரசமைப்பின் 102(1), 191(1) ஆகிய இரண்டு கூறுகளும் முறையே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தச் சூழல்களில் எல்லாம் தகுதியிழந்தவராக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை விவரிக்கின்றன. மூன்று வகையான சூழல்களில் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதியிழக்கிறார்கள்: 1.
  • லாபம் தரும் பதவி வகிப்பது (உறுப்பினர்/அமைச்சர் பதவியைத் தவிர, வேறொரு அரசுப் பதவியில் இருப்பது); 2. மனநல பாதிப்புக்குள்ளானவர் அல்லது திவாலானவராக அறிவிக்கப்படுவது; 3. உரிய இந்தியக் குடியுரிமை இல்லாதவர் அல்லது குடியுரிமையை இழந்தவராக இருப்பது.
  • மேலும், உறுப்பினர்களின் தகுதியிழந்தவராக அறிவிப்பதற்கு தேவையான சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பின் பத்தாம் அட்டவணை, கட்சித்தாவல் செய்யும் உறுப்பினர்கள் (கொறடா உத்தரவை மீறுகிறவர்கள்) பதவி இழப்பதற்கு வழிவகுக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951

  • இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல்களை நடத்துவது, தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளை நிர்ணயிப்பது, தகுதியிழக்கும் சூழல்களை வரையறுப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இல் அமலுக்கு வந்தது.
  • இச்சட்டத்தின் பிரிவு 8, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதியிழப்பது தொடர்பானது. குற்றக்கறை படிந்தவர்கள் சட்டம் இயற்றும் அவைகளில் இருக்கக் கூடாது என்பதற்காகவும்; அரசியல், குற்றமயமாவதைத் தடுப்பதற்காகவும் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டது.
  • இதன் முதல் இரண்டு உட்பிரிவுகளின்படி இரண்டு குழுக்களுக்கிடையே வன்முறையைத் தூண்டுதல், லஞ்சம் வாங்குதல், உணவு அல்லது மருந்துக் கலப்படத்தில் ஈடுபடுதல், வரதட்சிணைக் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலான காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படுதல் ஆகிய குறிப்பிட்ட காரணங்களுக்கா உறுப்பினர்கள் தகுதியிழந்தவர்களாகிறார்கள்.
  • உட்பிரிவு (3), ‘உட்பிரிவுகள் (1), (2)இல் குறிப்பிடப்படாத குற்றங்களில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் தீர்ப்பளிக்கப்பட்ட தேதியிலிருந்து தகுதியிழக்கிறார்.
  • அதோடு, தண்டனைக் காலத்திலும் அதற்குப் பிந்தைய ஆறு ஆண்டுகளிலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியையும் இழக்கிறார்’ என்கிறது. அவதூறு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, உட்பிரிவு (3)இன் அடிப்படையில்தான் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழந்திருக்கிறார்.
  • உட்பிரிவு (4), குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உறுப்பினர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு மூன்று மாத அவகாசம் கொடுக்கப்பட்டு, அதற்குப் பின்னரே அவர்கள் தகுதியிழந்ததாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால் 2013இல் ‘லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் மற்றும் பிறர்’ என்னும் வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) அரசமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட உறுப்பினர்கள் உடனடியாகத் தகுதியிழப்பதைத் தடுக்கும் வகையில், 2013இல் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவர முயன்றது. ஆனால், அது கைவிடப்பட்டது. அதற்கு ராகுலின் தலையீடு முக்கியமான காரணமாக இருந்தது.

தகுதியிழப்பு எப்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது?

  • குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உறுப்பினர்கள், அந்தத் தீர்ப்பின் விளைவாக உடனடியாகத் தகுதியிழந்துவிடுகின்றனர். இதை சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிப்பதற்கு மட்டுமே சட்டமன்றம் அல்லது மக்களவையின் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
  • தகுதியிழந்தவர்கள் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடர முடியாது. உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட வீடு உள்பட அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்படும். தகுதியிழந்துவிட்ட உறுப்பினரின் இருக்கை காலியானதாக அறிவிக்கப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்படும். உறுப்பினர் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டாலோ தீர்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டாலோ அதன் அடிப்படையிலான உறுப்பினர் தகுதியிழப்பும் ரத்தாகிவிடும்.
  • லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் பி.பி.முகமது ஃபைசல், கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என்று லட்சத்தீவு நீதிமன்றம் கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டில் கேரள உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்குத் தடை விதித்ததோடு, அவரது தகுதியிழப்பையும் ரத்துசெய்தது.
  1. நன்றி: தி இந்து (02 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்