ததும்பும் நித்திய சோகம்
- திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் கோட்டோவியங்களை தொகுத்துப் பார்க்கும்போது, அவர் அடைந்திருக்கும் பரிணாமம் மெச்சத்தக்கது. அவரது பழைய ஓவியங்களில் வெளிப்பட்ட முக வார்ப்புகள், ஓவியர் புகழேந்தி வரைந்த மனிதர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டு வந்தன. ஆனால், விளிம்பு நிலை வாழ்வு வாய்த்தவர்களுக்கும், விளிம்பு நிலை அழகியலைக் கைக்கொள்ளும் கலைஞர்களுக்கும் இவை பொதுவான தன்மைகளே என்ற முடிவை பின்னர் அடைந்தேன்.
- மேலும், ஒவ்வொரு ஓவியரின் கோடுகளுக்கும், அவர்களது வண்ணங்களுக்கும் உள்ள தனித்துவம் என்னென்ன என்பதை நோக்கிய கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொள்ளத் தொடங்கினேன். அந்த வகையில், ஆர்கிலிக் ஓவியங்கள், சுவரோவியங்கள், சாக்பீஸ் ஓவியங்கள், முக வார்ப்புகள் (Portraits) எனப் பல வகைமைகளில் தடம் பதித்து வரும் தமிழ்ப்பித்தன் ஓர் ஆளுமையாக உருக்கொள்வது அவரது கோட்டோவியங்களிலும், அதை ஊடகமாகக் கொண்ட நிகரோவியங்களிலும்தான்(Illustrations).
- ஓவியத்தின் மிக முக்கிய அங்கமான வண்ணங்களைக் கைவிட்டுவிட்டு ஒருவர் வெறும் கோடுகளை நம்பி அதிலேயே பல ஆண்டுகள் ஈடுபடுவதும், திளைப்பதும் சாதாரணமானது அன்று. இப்படி அவர் பல காலம் ஈடுபட்டு வரைந்த கோட்டோவியங்களும் இலக்கியத்தின் பொருட்டு வரைந்த நிகரோவியங்களும் இன்று அசலான, தனித்த படைப்புகளாக நிலைத்திருக்கின்றன.
- தமிழ்ப்பித்தன், ஓவியக் கல்லூரியில் தொழில் பயின்றவர் அல்ல. தொடக்கத்தில் ஓவியர் யாக்கனின் பாதிப்பு தனக்கு இருந்ததை அவரே ஒரு நேர்காணலில் சொல்கிறார். ஓவியர்கள் ஆதிமூலம், சந்ரு, தனபால், இந்திரன் ஆகிய ஆளுமைகளுடன் ஏற்பட்ட தொடர்பும், அவர்களுடைய ஓவியங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவையும் அவரது தீவிரமான உழைப்புமே தமிழ்ப்பித்தனின் கோட்டோவியங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
- இவ்வாறு, அவருடைய ஓவியங்களை அடிக்கடிப் பார்த்து, உணர்ந்து, புரிந்துகொள்ள முயற்சித்து திரட்டிய ஓவியங்களை, யதார்த்தப் பாணி ஓவியங்கள் (கழுதை போன்ற மிருகங்களின் கோட்டோவியங்கள், சதுக்கபூதம், கருப்பசாமி போன்ற தெய்வ உருவங்கள்), சன்னக் கோடுகளாலான ஓவியங்கள் (நீண்ட ஒற்றைக் கம்பிகளை நெகிழ்த்தி வரையப்பட்டவை போன்ற வார்ப்புகள்), கருத்துப்படங்களை ஒத்த ஓவியங்கள் (இவை கதைகளுக்காக வரையப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கிறேன்.
- புத்தரையும் பெரியாரையும் ஒரே ஓவியத்தில் கதம்பாக்கிக் காட்டுவது, நாலடியார் என்ற பனுவலின் சுவடியானது அருகில் கிடக்க, புலவர் அல்லது அந்நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவர் அந்நூலைத் தட்டச்சு செய்வது போன்று வரைதல் உள்ளிட்ட படங்கள்), அரூபத்தன்மைக் கூடிய அவருடைய புதிய முயற்சிகள் (உருவ முயக்கங்கள் கொண்ட ஓவியங்கள்), நெருக்கக் கோட்டோவியங்கள் (பல்வேறு கோடுகள், முக, உடல் வார்ப்புகள், மிருக, மனிதக் கலப்புடல்கள், குறியீட்டர்த்தம் பொதிந்த ஓவியங்கள்) ஆகிய ஐந்தாக வகைப்படுத்திக் கொண்டேன். இந்தப் பகுப்பு அவருடைய ஓவியங்களை மிகவும் அணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், அவற்றின் பரிணாமத்தையும், பரிமாணங்களையும் புரிந்துகொள்ளவும் உதவும்.
- எல்லைக் கோடுகளையும், வெளிகளையும் கொண்ட நெருக்கக் கோட்டோவியங்கள் என்று நான் வசதி கருதி பெயரிட்டிருக்கும் ஓவியங்கள் முதல் பார்வையின் நிமித்தமே ஆச்சரியம் அளிக்கத் தக்கவையாக, அபாரமான வடிவ நேர்த்தியுடன் வரையப்பட்டவையாக உள்ளன.
- சில நேரங்களில் முகங்கள் இத்தகைய அடர்த்திக் கொண்டவையாகவும், வேறு சில சந்தர்ப்பங்களில், கோடுகளுக்குள் அகப்பட்ட முகங்களாகவும் பரிமாணம் கொள்கின்றன. ஒரே முகத்தில் இந்த இரண்டு தன்மைகளையும் கொண்ட முக வார்ப்புகளும்கூட அதிகமும் இடம்பெறுகின்றன. சில ஓவியங்களில், தலை, தலையைத் தாங்கும் உடம்பு என யாவும் சிறு சிறு கோடுகளால், கறுப்புக்கு நெருக்கமானவையாக வரையப்பட்ட உடல்களில், கண், மூக்கு, வாய், சன்னமான முதுகுத் தண்டு என இவை மட்டும் ஓரக் கோடுகளால் தனித்துக் காட்டி அழகாக்கப்பட்டுள்ளன. இவற்றுள், நித்தியமாய்த் ததும்பும் சோகத்தைக் கண்டு எனக்கு வருத்தமும், இந்த அழியாத சோகத்தைத் தன் கோடுகளைக் கொண்டு அழகாக்கிக் காட்டும் ஓவியரின் திறமையைக் கண்டு எனக்கு சந்தோஷமும் ஒருசேர மிகுதியாகின்றன.
- ஆயர்கள், வேட்டையாடிகள், பழங்குடிகள், கறுப்பின, விளிம்பு நிலை மக்களின் முக அமைப்பும், குறிப்பாக, பெரிய வாய் அமைப்பும் கொண்ட அவர் ஓவிய மனிதர்கள் இயற்கையோடு ஒன்றியவர்களாக, கால்நடைமையும், மனிதமையும் ஒருங்கே பெற்றவர்களாக, அவற்றின் கதம்ப தேகங்களாக, ஆழ்ந்த யோசனையில் இருப்பவர்களாக, உற்றுப் பார்ப்பவர்களாக, தம் நினைவில் வாதையைச் சுமந்தலைபவர்களாக, முள் முளைத்த உடம்பினர்களாக, முள்வேலியிலும், தேர்க்கால்களிலும் சிக்கிய தலைகளாக, நெரிசலில் சிக்கிய மனங்களாக, அண்ணாந்து பார்ப்பவர்களாக, அரிதாய்ச் சிரிப்பவர்களாக இருக்கிறார்கள்.
- உடம்பெல்லாம் காயத்துடன், தையலிட்டுத் தைக்கப்பட்ட ஜதை உடல்களாக இருக்கும் தமிழ்ப்பித்தனின் ஓவியங்கள் அரிதான அழகுடையவை. சாதாரணத்தில் நடக்காத ஒன்றைத் தன் சொற்களாலும், வண்ணத்தாலும், கோடுகளாலும் சாதித்துக் காட்டுபவை கலைப் பிரதிகள். அப்படி விநோத அ-யதார்த்தக் கலவையாக வெளிப்பட்டுள்ள ஓவியங்கள் பலவற்றையும் கூட தமிழ்ப்பித்தன் வரைந்துள்ளார். குறிப்பாக, பலவித முகபாவனைகள் உள்ள ஓவியங்களையும் மிருகத் தலைகள் உள்ள மனித உடல்களையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அந்தவகையில், ஆட்டுத்தலை கொண்ட, கைத்தடி ஏந்திய பெண், எருமை சுமக்கும் நபர், பண்டு நாட்டார் வழக்காற்றியல் கதையில் வருவதுபோலான பாம்புப் பெண்களை ஒத்த அழகிய ஜோடிப் பெண்களின் ஓவிம் என பல கலைப்பிரதிகளைக் கொண்டவை இவரது ஓவியங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)