TNPSC Thervupettagam

தந்தைக்காக சாகசப் பயணம்!

September 13 , 2024 124 days 138 0

தந்தைக்காக சாகசப் பயணம்!

  • தந்தை கண்ட கனவை நனவாக்கப் பாடுபடும் வாரிசுகளைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். சொந்த ஊரில் ஒரு பணப் பிரச்சினையால் கலங்கி நின்ற தந்தையைத் தலைநிமிர வைத்திருக்கிறார் ஒரு மகன். ரஷ்யாவில் உள்ள மவுன்ட் எல்பிரஸ் பனி மலையின் சிகரத்தில் ஏறியதன் மூலம் தந்தைக்குப் பரிசளித்திருக்கிறார், கழுகுமலையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (25). வெங்கடசுப்பிரமணியன் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியியல், எம்.எஸ்.டபிள்யூ படித்தவர். கடந்த ஆண்டு ஊரில் ஏற்பட்ட ஒரு பணப் பிரச்சினையில் தந்தை நல்லசாமி கண்கலங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
  • அதைப் பார்த்து வேதனை அடைந்த வெங்கடசுப்பிரமணியன், பணத்தைவிட மேலான பரிசு ஒன்றைத் தந்தைக்குத் தர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஐரோப்பா கண்டத்தில் உயரமான மலையான, ரஷ்யாவின் மவுன்ட் எல்பிரஸ் சிகரத்தை 24 மணி நேரத்துக்குள் அடைந்து சாதனை படைத்திருக்கிறார்! இதன் மூலம் தன் குடும்பத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

மலையேற்றப் பயிற்சி:

  • “சென்னையைச் சேர்ந்த முத்துதமிழ்ச் செல்வி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த செய்தியைப் பார்த்தேன். அந்தக் கணத்தில் நாமும் இதுபோல உயரமான மலையில் ஏறிச் சாதனை படைத்து, அந்தப் புகழைத் தந்தைக்கு அர்ப்பணிக்க வேண்டுமென முடிவு எடுத்தேன். 2023 ஆகஸ்ட்டில் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் எனக்கு மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் வேலை கிடைத்தது. அங்கு சென்றதும் ஏஜென்சி மூலம் மலையேறும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன்” என்கிறார் வெங்கடசுப்பிரமணியன்.
  • இந்தப் பயிற்சி முடிந்த பிறகு டெல்லியில் உள்ள ஏஜென்சி மூலம் எல்பிரஸ் மலையில் ஏறும் முயற்சிகளை வெங்கடசுப்பிரமணியன் மேற்கொண்டிருக்கிறார். அந்த ஏஜென்சி மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 13 பேருடன் ஆகஸ்ட் 10 அன்று வெங்கடசுப்பிரமணியன் 5,632 மீ.உயரம் கொண்ட மலையில் ஏற ஆரம்பித்தார்.
  • 4,800 மீட்டர் உயரத்தில் இருந்தபோது பனிக்காற்று அதிகமாக வீசியதால் பயணத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல், நிலைமை சரியான பிறகு ஒய்வே இல்லாமல் மலையேறி ஆகஸ்ட் 16 அன்று சிகரத்தை அடைந்து, இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார்கள். மலையேறிய 14 பேரில் 8 பேர் மட்டுமே சிகரத்தை அடைந்து புகழைத் தேடிக் கொண்டார்கள். அவர்களில் வெங்கடசுப்பிரமணியனும் ஒருவர்.

எல்லாம் தந்தைக்காக...

  • “இந்த மலையேற்றத்தை என் தந்தைக்காகச் செய்தேன். அவர்தான் என் வழிகாட்டி, குரு எல்லாம். காசு, பணம் அனைத்தையும் தந்து விடாது. எனக்குக் கிடைத்த இந்தப் புகழை என் தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். நான் மலை ஏறுவதற்காக எடுத்த பயிற்சியோ முயற்சியோ எதுவும் வீட்டுக்குத் தெரியாது. அவர்களிடம் வெற்றியை மட்டுமே சொல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
  • என் தந்தை ஒரு விவசாயி. இன்று மிகப் பெரிய சிகரத்தை அடைந்ததன் மூலம், விவசாயி மகனாக நான் மட்டும் உயரவில்லை. என்னைப் போன்ற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் உயர்த்தி உள்ளதாக உணர்கிறேன். இன்னும் 6 கண்டங்களில் 6 உயரமான மலைகள் உள்ளன. எல்லா மலைகளிலும் ஏறிச் சாதனை படைத்து, அந்த வெற்றியை என் தந்தைக்குச் சமர்பிக்க விரும்புகிறேன்” என்கிறார் வெங்கடசுப்பிரமணியன்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்