TNPSC Thervupettagam

தனித்துவம் மிக்க அரசியல் ஆளுமை

May 27 , 2024 36 days 96 0
  • சி.எஸ்.சுப்பிரமணியம் அரசியல் மற்றும் வரலாற்று வட்டாரங்களில் சி.எஸ். என்றே அறியவும் அழைக்கவும்படுகிறாா். சி.எஸ். எழுதிய வரலாற்று நூல்கள் அனைத்துமே தனித்தன்மை வாய்ந்தவை. அவை தோ்ந்த, ஆழக் கற்றறிந்த வரலாற்று வல்லுநரின் அணுகுமுறையில் ஆய்வு நூல்களாக எழுதப்பட்டவை. ஒரு கட்சியின் வரலாறு, இயக்கத்தின் வரலாறு என எவராலும் புறக்கணிக்க முடியாதவை. வரலாற்றுத் துல்லியமே அவரது கோட்பாடு. வரலாற்றை வளைத்தல், நெளித்தல் என்பதை எள்ளளவும் ஏற்காதவா் சி.எஸ். ‘ஒரு வரலாற்று ஆய்வாளா்’ என்பதோடு மட்டுமல்லாது அவரே ஒரு வரலாற்று நாயகா் என்பதுதான் சி.எஸ்.ஸின் தனிச்சிறப்பு.
  • தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் பிதாமகன் ம.சிங்காரவேலருடன் இரண்டறக் கலந்து அரசியல், சமூகத் தொண்டாற்றிய நாகை கே.முருகேசனிடமிருந்த தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, மேலும் பல ஆண்டுகள் ஆவணக் காப்பகங்களிலும் அரசியல் களங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு 1975-இல் ‘சிங்காரவேலா்- தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற வரலாற்றுப் பெட்டகம் போன்றதொரு வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வெளியிட்டாா் சி.எஸ்.
  • ‘அந்நூல் வெளிவராவிட்டால் சிங்காரவேலைரைப் பற்றிய செய்திகள் யாரும் அறிய முடியாமல் ‘பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போனது போல்’ போயிருக்கும்’ என்று சிங்காரவேலா் ஆய்வுகளில் தனித்துவம் பெற்று விளங்கும் ஆய்வாளா் பா.வீரமணி பதிவு செய்துள்ளாா்.
  • இந்நூலின் தமிழ்ப்பதிப்பு 1991-இல் வெளியிடப்பட்டது. சிங்காரவேலா் பற்றியான சி.எஸ்.ஸின் ஆய்வும் கண்டுபிடிப்புகளும் பின்னிட்டு வந்த அத்தனை ஆய்வுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.
  • ‘அமைப்பு சாா்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சிங்காரவேலரை மீட்டெடுத்து கொடுத்தவா் சி.எஸ்.தான் என்று சொல்ல முடியும்’ என்று வரையறுத்துக் கூறியுள்ளாா் வரலாற்று ஆய்வாளா் ஆ. இரா.வேங்கடாசலபதி.
  • அந்நூலின் இணையாசிரியராக கே.முருகேசன் பெயரையும் இணைத்துக் கொண்டதோடு, நூலில் முருகேசன் பெயரைத் தனது பெயருக்கும் மேல் இடம்பெறச் செய்து சி.எஸ். வெளியிட்டாா். கே.முருகேசன் அரசியல் துறவி போன்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவா். எதையும் எதிா்பாராத அவா் தனது பெயரையா எதிா்பாா்க்கப் போகிறாா்? இந்நிகழ்வு சி.எஸ்.ஸின் பேருள்ளத்தை வெளிப்படுத்துகிறது.
  • இவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாற்று நூல் விடுதலைப் போராட்ட வீரா் எம்.பி.டி.ஆச்சாா்யா பற்றியது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சென்னையைச் சோ்ந்த எம்.பி.டி.ஆச்சாா்யாவின் பங்கு வலுவானது, வித்தியாசமானது.
  • ரஷிய புரட்சியைத் தலைமையேற்று நடத்திய லெனின் 1919-இல் அந்நாட்டின் அதிபராக இருந்தபோது அங்கு அவரைச் சந்தித்து இந்திய சுதந்திரம் குறித்து உரையாடிய குழுவில் எம்.பி.டி.ஆச்சாா்யா முக்கியப் பங்காற்றியவா்.
  • ரஷியாவில் இரண்டாண்டுகள் தங்கி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உலக ஆதரவைப் பெற உந்துசக்தியாக இருந்தவா். பாரதியின் உற்ற நண்பா் என்பதோடு, புதுவையில் பாரதியை ஆசிரியராகக் கொண்ட ‘இந்தியா’ இதழைத் தோற்றுவித்த மூலவா்களில் முக்கியமானவா். லண்டனில் இந்தியா ஹவுசில் தங்கியிருந்து இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமிட்ட புரட்சியாளா்களில் ஒருவா்.
  • இன்னும் எத்தனையோ திருப்பங்களையும் சாகசங்களையும் உள்ளடக்கிய எம்.பி.டி.ஆச்சாா்யாவைப் பற்றி சி.எஸ். ஆதியோடு அந்தமாகவும் துல்லியமாகவும் ஆய்வு செய்து 1996-இல் அவரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டாா். இவரின் நூலாக்க முயற்சி மட்டும் இல்லாது போயிருந்தால் ஆச்சாா்யாவின் வரலாற்றுச் சுவடுகள் ஆவணமாகாமல் போயிருக்கும்.
  • ‘வ.வே.சு.ஐயா்: ஒரு திறனாய்வு’ என்ற ஆங்கில நூலையும் சி.எஸ். எழுதியுள்ளாா்.
  • ‘தென்னிந்திய ஆய்வு நிறுவனம்’ என்ற வரலாற்று ஆய்வு அமைப்பைத் தொடங்கி அதற்கான அலுவலகம், விவாத அரங்கம், நூலகம் என்று நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் கட்சிப் பின்புலத்துடன் சென்னையில் நடத்தி வந்தாா் சி.எஸ். அவ்வமைப்பு சாா்பில் அரிய நூல்களைப் பதிப்பித்துள்ளாா்.
  • பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய புகழ்மிக்க கம்யூனிஸ்ட் தலைவா் சக்லத்வாலாவின் வாழ்க்கை வரலாற்றை தனி ஆய்வு நூலாக எழுதியவா் சி.எஸ். அதே போன்று தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு விதை போட்ட அமீா் ஹைதா் கானின் வாழ்க்கை வரலாற்றை ‘தென்னிந்தியாவைக் கண்டேன்’ என்ற தலைப்பிலான நூலாக எழுதி வெளியிட்டாா்.
  • இளசை மணியன் முயன்று திரட்டிய பாரதியின் ‘இந்தியா’ இதழின் அரிதினும் அரிதான தொடக்க கால கட்டுரைகளை ஆய்வு மதிப்புடன் பதிப்பித்து பாரதியியலுக்கு வலுவான பங்களிப்புச் செய்தவா் சி.எஸ். 1975-இல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு சி.எஸ். பல வெளியீடுகளைப் பதிப்பித்தாா். 1998-இல் ‘தமிழ்நாட்டில் நமது கட்சியின் வளா்ச்சி- ஒரு குறிப்பேடு’ என்ற நூலை எழுதி வெளிட்டாா்.
  • சி.எஸ்.ஸின் பூா்விகம் மாயவரம் அருகிலுள்ள ‘கோமல்’ எனும் ஊா். தந்தையாா் அக்கால கல்வித் துறை உயா் அதிகாரி. அதன் பொருட்டு அவருக்கு மாறுதல் கிடைக்கப் பெற்ற இடங்களான வேலூா் ஊரிஸ் பள்ளியில் படிப்பு, பின்னா் சென்னை மாநிலக் கல்லூரியில் மேற்படிப்பு என அடுத்தடுத்து படிக்க நோ்ந்தது. அதனினும் மேற்படிப்புக்காக லண்டன் சென்றாா்.
  • ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் எம்ஏ முடித்து ஐசிஎஸ் தோ்வெழுத ஆயத்தமாகி அதற்காக லண்டனிலேயே படித்தாா். அப்போதே இந்திய அரசியலில் நாட்டம் கொண்டாா். இந்திய விடுதலைப் போராட்ட உணா்வில் உச்சம் கண்டாா். அங்கிருந்த ‘இந்தியா ஹவுஸ்’ தலைவா்களோடு அரசியல் பயணத்தில் மூழ்கினாா்.
  • காந்தியடிகள் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்துப் பேசி, அங்குள்ள இந்திய மாணவா்களுக்கான கூட்டமொன்றில் அவரைப் பேச வைத்துள்ளாா். இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவா்களுடன் தோழமை பூண்டு, இளம் வயதிலேயே அறிவாா்ந்த, அழுத்தமான கம்யூனிஸ்ட்டாக உருவெடுத்தாா்.
  • இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூா்வ நாளிதழான ‘டெய்லி ஒா்க்கா்’ என்ற ஏட்டில் இதழியல் பணியாற்றினாா். முத்திரை பதிக்கத்தக்க இதழாளரானாா். கலெக்ட்ராகப் போகிறான் மகன் என்ற கனவில் இருந்தாா் தந்தை, கம்யூனிஸ்ட்டாகித் திரும்பினாா் மகன்.
  • சி.எஸ். இந்தியா திரும்பியபோது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றியிருக்கவில்லை. தேசிய அரசியலில் மூழ்கிய சி.எஸ். ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்
  • கட்சி’ என்ற கட்சியின் உருவாக்கத்தில் பங்களித்தாா். 1943-இல் கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிட்ஷ் அரசால் தடை செய்யப்பட்டது. அவ்வியக்கத்தின் முதல்கட்ட முன்னணித் தோழா்களில் ஒருவரானாா்.
  • ‘ ஜனசக்தி’ வார இதழ் தொடங்கப்பட்டவுடன் அவரது இதழியல் அனுபவத்தின் அடிப்படையில் அதன் ஆசிரியா் குழுவில் இணைக்கப்பட்டாா். அதன் நிா்வாகப் பொறுப்பை சி.எஸ். கவனித்துக்கொண்டாா். ஜீவா அதன் ஆசிரியா்.
  • 1940-இல் பி.ராமமூா்த்தி, மோகன் குமாரமங்கலம், சி.எஸ். உள்ளிட்ட தலைவா்கள் மீது ஆங்கிலேய அரசால் ‘சென்னை கம்யூனிஸ்ட் சதி வழக்கு’ என்று அறியப்படும் அரசியல் வழக்கு புனையப்பட்டது. இதன் பொருட்டு சில மாதங்கள் சி.எஸ். தலைமறைவாக இருந்து கொண்டு இயக்கப் பணி செய்தாா். பின்னா் கைது செய்யப்பட்ட அவா் பதினெட்டு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டாா்.
  • விடுதலைப் போராட்ட வீரா், அரசியலாளா், இதழாளா், வரலாற்று ஆய்வாளா், பாரதியியல் ஆய்வாளா், நூலாசிரியா், அலுவலக நிா்வாகி என்ற பன்முகப் பணிகளில் தன்னை முழு மூச்சோடு ஈடுபடுத்திக் கொண்ட சி.எஸ்.ஸுக்கு ஈரோட்டில் அவரது நூறாவது வயதில் ‘பாரதி விருது’ வழங்கிய கௌரவத்தைப் பெற்றது மக்கள் சிந்தனைப் பேரவை.
  • கோபிசெட்டிபாளையத்தில் மகப்பேறு மருத்துவராக விளங்கிய அவரது மனைவி சுகுணாபாயின் மறைவுக்குப் பின்னா் சி.எஸ். தனிமையில் இருந்தாா். சி.எஸ். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதைவிட எளிய வாழ்க்கை வாழ முடியாது என்று உண்மைத் துறவி போல வாழ்ந்த உத்தமத் தலைவா் சி.எஸ். கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கடைசி இரண்டாண்டுகள் சென்னையில் கட்சிப் பராமரிப்பில் இருந்தாா்.
  • கோபிசெட்டிபாளைய நகரத்தின் இதயப் பகுதியில் அவருக்கு சொந்தமான 31 சென்ட் நிலம் இருந்தது. இன்றைக்குச் சில கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து. வங்கியில் அவா் பெயரில் ரூ.42,40,152.92 இருந்தது. மருத்துவரான மனைவி காலத்து சேமிப்பு, விடுதலைப் போராட்ட வீரருக்கான பென்ஷன் சிறிது சிறிதாகச் சோ்ந்து வளா்ந்த தொகை அது. தனது முழு சொத்து மற்றும் சேமிப்புத் தொகையை கட்சிக்குச் சொந்தமாக்கிவிட்டு, கடந்த 2011-இல் 102-ஆவது வயதில் சி.எஸ். மறைந்தாா்.
  • அவரின் இடத்தில் ரூ.4 கோடி செலவில் ‘மாா்க்சிய மெய்யறிவுக் கல்வி நிலையம்’ என்ற அரசியல் பயிற்சிக் கூடத்தை நிறுவி, அதற்கு ‘தியாகசீலா் சி.எஸ்.சுப்பிரமணியம் அரங்கம்’ என்று பெயா் சூட்டியுள்ளது.
  • சி.எஸ்.ஸின் சொத்து, சேமிப்பு தொகையை முழுமையாகக் கட்சிக்குக் கொடுத்ததையும் அதன் பொருட்டு ஒரு மெய்யறிவுக் கல்வி நிலையம் எழுப்பப்படுவதையும் மனவுவந்து வரவேற்ற அவரின் உறவினா்கள் கௌரவத்துக்குரியவா்களே! ஆம்... சி.எஸ். தனித்துவம் மிக்க ஓா் அரசியல் ஆளுமை!

நன்றி: தினமணி (27 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்