- நாற்பதாண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் முதன்முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் என்பது எந்த அளவுக்குப் பெருமையாகப் பேசப்பட்டதோ அதே அளவுக்கு அமைச்சரவையை அடியோடு மாற்றியது பினராயி விஜயன் மீது கடுமையான விமர்சனங்களையும் பெற்றுத்தந்திருக்கிறது.
- தனது அமைச்சரவை சகாக்கள் அனைவரையும் ஏறக்குறைய தவிர்த்துவிட்டுப் பெரும்பாலும் புதியவர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார் அவர்.
- 1997 தொடங்கி 2015 வரையிலும் சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர் பினராயி விஜயன்.
- வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராகப் பொறுப்பு வகிக்கையில் அவருக்கும் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயனுக்கும் இடையிலான அதிகார மோதல்களில், விஜயனின் கையே ஓங்கியிருந்தது.
- கட்சியின் பெயரைச் சொல்லி ஆட்சியில் அதிகாரம் செலுத்திய அவரே இன்று கட்சியின் மாநிலச் செயலாளரைக் காட்டிலும் மாநில முதல்வராகக் கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகப் படுத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
- ஆகையால், புதியவர்களுக்கான வாய்ப்புகளும்கூட மக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள் கட்சிப் பொறுப்புகளில் நீடித்திருப்பதைத் தவிர்ப்பதற்கான உத்தியோ என்று சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.
- முதல்வர் உள்ளிட்ட மூவரைத் தவிர்த்துக் கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவரும் புதியவர்கள்.
- புதியவர்களுக்கே போட்டியிடும் வாய்ப்பு என்ற தேர்தலுக்கு முந்தைய முடிவால் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிபிஐ(எம்) கட்சியின் மூத்த நிர்வாகிகளான தாமஸ் ஐசாக், ஜி.சுதாகரன், ஏ.கே.பாலன் ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.
- அடுத்து, நிபா, கரோனா பெருந்தொற்றுகளை வெற்றிகரமாக கேரளம் எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா தேர்தலில் வென்றும் புதிய அமைச்சரவையில் இடம்பெறாதது கேரளத்துக்கு உள்ளே மட்டுமின்றி உலக அளவிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
- கேரளம் கரோனாவின் பாதிப்புகளிலிருந்து இன்னும் முழுதாக வெளியே வந்துவிடவில்லை. இரண்டாவது அலையில் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறது.
- இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் பணியனுபவம் நிறைந்த மூத்த அமைச்சரின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன என்பதோடு அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை அளிப்பது என்பது அவர்களுக்கான அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது. இது பலருக்கும் பொருந்தும்.
- கேரளத்தைப் பொறுத்தவரையில் வேட்பாளர் நியமனம் தொடங்கி முதல்வரைத் தேர்ந்தெடுப்பது வரையிலும் அனைத்து முடிவுகளையும் கட்சிதான் முடிவெடுக்கும் என்ற ஜனநாயகப் பெருமிதங்கள் முன்வைக்கப்படுவது இயல்பு. தற்போது அந்தப் பெருமிதம் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.
- எந்தவொரு தனிநபரும் முக்கியமானவர் அல்ல; கட்சியின் முடிவுகளே உறுப்பினர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பது சிபிஐ(எம்) உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கலாம்.
- ஆனால், வாக்களிக்கிறவர்கள் தங்களுக்குச் சிறப்பாக சேவையாற்றிய பிரதிநிதிகளையும் மனதில் கொண்டுதான் ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- புதியவர்களாலான அமைச்சரவைக்கு வழக்கத்தைக் காட்டிலும் பெரும் பொறுப்புகள் காத்திருக்கின்றன. வாழ்த்துகள்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 - 05 – 2021)