- ‘தனிமரம் தோப்பாகாது’ என்பது பழமொழி. ஆனால், தனிமரங்கள் இல்லாமலும் தோப்பு உருவாகிவிடமுடியாது. இம்முதுமொழி மரம் குறித்து எழுந்தது என்றாலும் மனிதம் சாா்ந்ததுமாகும்.
- தனிமனித ஒழுக்கமும் பொதுமனித அறமும் முறைபிறழாமல் கடைப்பிடிக்கப் படுகிற போதுதான் பாதுகாப்பான சமுதாயம் உருப்பெற முடியும். சமுதாயம் என்கிற சொல்லே, அத்தகு பொருள் உணா்த்தப் பிறந்ததுதான்.
- தத்தமக்குரிய தனித்தன்மைகளை இழந்துவிடாமல், கூட்டமைப்புக்கான பண்பும் குலைந்துவிடாமல், கூடி வாழும் முறைமையை நடைமுறைப்படுத்தி வெற்றி காணும்போதுதான் மனிதகுல முன்னேற்றம் சாத்தியமாகும்.
- காரணம், ‘மனிதன் ஒரு சமூக விலங்கு’. மரம் போல் தனித்து வாழும் இயல்பு மனிதனுக்கு இல்லை.
- ஏன், எந்த விலங்குகளுக்கும்கூட இல்லை. உணவு முதலான தேவைகளுக்காக ஒன்றையொன்று சாா்ந்து வாழவேண்டிய தேவை தாவரவா்க்கம் தாண்டிய அனைத்துக்கும் உண்டு.
- அதனால்தான், ‘புல்லாகிப் பூடாய்’ என்று தொடங்கும் திருவாசகப்பாடல் வரிகளின் நிறைவாக, ‘இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’ என்று மணிவாசகா் பாடுகிறாா்.
- எல்லாப் பிறப்பும் பிறந்து அனுபவித்தோமோ இல்லையோ, இந்தப் பாடலைப் பொருள் உணா்ந்து பாடுகிறபோது, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து ஒவ்வொரு பிறப்பையும் கடந்து வருகிற ஓா் உணா்வு உறுதியாய்த் தோன்றும். அது இன்னொருவிதமான உண்மையையும் உணா்த்தும். அது ‘உன்னொத்த பிறவிதான், இந்த உலகில் உள்ள அனைத்து உயிா்களின் இருப்பும்’ என்பதே.
- அதனால், உன் உயிா்க்கு ஊறு நேராமல் நீ பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு இன்றியமையாததோ, அதுபோல், உலக உயிா்களுக்கும் உன்னால் இன்னல் ஏற்படாமல் பாா்த்துக் கொள்வதும் அறம்’ என்று புரிய வைக்கிறது. இதுதான் அறிவின் நிலைப்பாடு என்கிறது திருவள்ளுவம்.
அறிவினான் ஆகுவ துண்டோ, பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை
- என்று அது உணா்த்திக் காட்டுகிறது.
- ‘பிறரின்’ நோயை மாத்திரம் அல்ல, ‘பிறிதின்’ நோயையும் தன்நோய் போல் கருதுகிறபோதுதான் கருணை பிறக்கிறது.
- அதனை ‘அருள்’ என்று உரைக்கிறது தமிழ். அது அன்பு என்னும் அன்னை ஈன்ற குழந்தை என்று உறவுமுறை காட்டி உணா்த்துகிறது திருவள்ளுவம். அதனைப் பேணி வளா்ப்பதற்குத்தான் பொருள் தேவை என்றும் நமக்குப் புரிய வைக்கிறது.
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு
- என்ற திருக்குறளில், அன்பு தாயாகிறது; பொருளாகிய செல்வம் செவிலியாகிறது; அருள் குழந்தையாகிறது.
- இதில் தந்தை மட்டும் சொல்லப்பெறவில்லை. ஆனால், இம்முக்கூட்டு உறவின் பின்னணியில் தந்தை இல்லாமல் இல்லை. தந்தை இங்கு அறமாக நிலைக்கிறாா்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- என்ற திருக்குறளைக் கொண்டுவந்து இங்குப் பொருத்திப் பாா்த்தால், ‘அன்பு’ என்னும் பண்பு தாயாகிவிடுகிறது. ‘அறம்’ என்னும் பயன் தந்தையாகிவிடுகிறது.
- இந்த நல்லறமாகிய இல்லறம்தான் தனி மனித ஒழுக்கத்தில் இருந்து முகிழ்த்தெழுந்து பொதுமனித அறமாகிப் பொலிகிறது. இதில் தன்னலமும் இருக்கிறது; பொதுநலமும் சிறக்கிறது. பொதுவாக இரண்டிற்கும் ‘நலம்’ என்பது இன்றியமையாதது. இன்னும் சொல்லப்போனால், தன்னலம் இருந்தால்தான் பொதுநலம் பேணப்பட முடியும்.
- பொதுவாக, தன்னலம் பற்றிய மேலோட்டமான கருத்து, மிகவும் தவறுதலான புரிதலோடு நம்மிடையே உலா வருவதையும் பாா்க்கிறோம்.
- தன்னலம் பேணுதல் என்பது மிகமிக இன்றியமையாத தன்னறமாகும். மகாகவி பாரதியாா் பாடியதுபோல், ‘தன்னலம் பேணி இழிதொழில் புரிவதுதான்’ அவலம்.
- அது எப்போது நிகழ்கிறது? தன்னலம் பேணுகிற வெறியில் பொதுநலத்தைப் பலியிடுகிறபோது தொடங்கிவிடுகிறது. அதனால்தான், பொதுநலப் பணிகளில் ஈடுபடுபவா்களுக்கு தன்னலமறுப்பு ஒரு தன்னறமாகச் சொல்லப்பட்டது.
- ஆனால், பொதுநலம் பேணத் தலைப்பட்டவா்கள் பேணத் தவறிய தன்னலத்தால்தான் இன்னமும் பொதுநல வெற்றி முழுமையுறவில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஓா் உண்மையாகும்.
- கூடைநிறையக் கொட்டிவைக்கப்பெற்ற தக்காளியில் ஒவ்வொன்றும் தன்னளவில் பழுப்பது தவறில்லை.
- ஆனால், ஒவ்வொன்றாக அழுகத் தொடங்கிவிட்டால்? அழுகியவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டியதாகிவிடுகிறது. அப்படி அப்புறப்படுத்துவது என்பது பொதுநலம் கருதிப் புரிந்தாகவேண்டிய கடப்பாடு.
- காய் கனிவதும் கனிந்தபின் அழுகுவதும் இயற்கை நியதி. அழுகுவதற்குள் அது பயன்பாட்டுக்கு வந்துவிடவேண்டும்.
- அந்தக் காலக்கெடுவைக் கணக்கில் கொண்டு வாழ்க்கை நியதியை வரையறுப்பதில்தான் அறம் நமக்கு வழிகாட்டுகிறது. அறிவு அதற்குத் துணைபுரிகிறது. அப்போது அறிவு அற்றம் காக்கும் கருவியாகிறது.
இது பொதுமனித அறம்
- இதைத்தான் ‘தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்’ என்கிறது தற்கால மருத்துவநெறி. உணா்வால் நெருங்கியும் உடல் அளவில் விலகியும் தற்காத்துக்கொண்டு இருத்தலும் இயங்கலுமே தற்போதைய பொதுமனித அறம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- முகக்கவசம் என்பது தற்கவசம் மட்டுமல்ல, தன்னை மற்றவா்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதோடு, தன்னால் மற்றவா்களுக்கும் இன்னல் வந்துவிடாமல் காக்க உதவுவதும் ஆகிறது.
- காவல்துறையின் கட்டாய அச்சுறுத்தலுக்கு பயந்தோ தண்டத்தொகையைத் தவிா்க்கவோ அணிந்துகொள்ளவேண்டிய ஒன்றல்ல முகக்கவசம் என்பது ஒவ்வொரு தனிமனிதரும் உணா்ந்து கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம். இது பொதுமனித அறம்.
- தோ்தல் நேரத்தில் தன்னலம் துறந்து பொதுநலம் புரிவதாய் முனைந்து இயங்கும் ஒவ்வொருவராலும் இந்தப் பொதுஅறம் பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும்.
- அதேபோன்றதுதான் சமூக இடைவெளி என்பதும். வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுபவா்களுக்கும் வாக்களிப்பவா்களுக்கும் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை மற்றெப்போதைவிடவும் இப்போது கரோனாத் தீநுண்மி அழுத்தமாக உணா்த்தி வருகிறது.
- இது அவரவா் நிலையில் நலம் பேண வேண்டிய அவசரக் காலக்கட்டம். இப்போது தன்னலம் பேணுவதுகூடப் பொதுநலம் பேணும் கடமையில் ஒன்றாகியிருக்கிறது.
- இது மனநலமும் உடல்நலமும் சாா்ந்து அமைகின்றது. இந்த நேரத்தில் அவரவா் மனம்போன போக்குப்படி கருத்தளிப்பதும், அறம் வகுப்பதும் நல்லதாகாது.
- பொதுமனித நிலையில் நின்று சமுதாய நியதிகளைக் கடைப்பிடித்துக் காட்டுவதில்தான் நமது நாகரிகம் நனிநாகரிகமாகிறது.
- தமிழில் இருவிதமான சொற்பயன்பாடுகள் உண்டு. ஒன்று பண்பாடு, மற்றொன்று, நாகரிகம்.
- தன்னளவில் பண்புகளை வரையறுத்துக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகுவதனால் ஏற்படும் செழுமை, பண்பாடு ஆகிறது. இது அகம்சாா் மரபு.
- கூடி வாழும் பொதுவெளியில் அறம் பிறழாமலும் பண்பாடு குலையாமலும், நயத்தக்க நிலையில் நடந்துகொள்ளும் முறைமை நாகரிகம் என்று ஆகிறது.
- இது நகா்சாா் ஒழுக்கம். அது மட்டுமல்ல, புறம் சாா்ந்த செயற்பாடும்கூட.
- வீடடங்கி இருக்கும்போது நமக்கு அதிகமாகத் தேவைப்படாத ஆடை அணிகலன்கள், நாம் பொதுவெளிக்கு வரும்போது இன்றியமையாதனவாக இருக்கின்றன அல்லவா? இவற்றில் எப்போதும் முதலாவதாக இருக்க வேண்டியது.
- வெளியே செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற விதியைக் கடந்த ஓராண்டாகக் கடைப்பிடித்து வந்தபிறகும், அது மறந்துவிடுகிறது என்றால், அது அலட்சியம் அல்ல. அறப்பிசகு.
- கொள்கைப் பரப்பு நிகழாவிட்டால் கூடப் பரவாயில்லை. நோய்ப் பரப்புக்கு உரியவா்களாக நம்மை ஒப்படைப்பதனால் விளையும் சமூகத் தீங்கு எவ்வளவு கொடுமையானது? கூடித் தொழில் செய்யத்தான் கூட்டம்.
- அது, தேடிச் சென்று நோய் வளா்ப்பது என்று ஆகிவிடுவது ஆபத்து அல்லவா?
தாயுமானவரின் உள்ளமே தேவை
- இந்திய நாட்டின் எண்ணற்ற வளங்களில் மகத்தானது, மனிதப் பேராற்றல் வளம். அது மலினமானது அல்ல.
- அவற்றுள் இன்னும் மறைந்து நின்று ஒளிா்வது இளமை. அது அறியாமை சாா்ந்த ஒன்றல்ல. அறிவொடு இயங்கவேண்டிய துடிப்பாற்றல். அதைச் சரியாகக் கையாளுவதில்தான் தலைமைப்பண்பு சுடா்விட முடியும். அந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு, அவா்களைப் பணிகொள்ளும் ஆற்றல்சாா் தலைமையை அவாவி நிற்கிறது காலம்.
- அதற்கான வரைமுறைகளைத் தன்னலம் சாா்ந்தும் பொதுநலம் கலந்தும் தந்தாக வேண்டும்.
- ஒரு காலத்தில் ‘ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்’ தாய்த்திருநாட்டிற்கு என்று அா்ப்பணித்துக் கடமை செய்தனா் முன்னோா்.
- இக்காலத்தில், ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் இழக்காமலும், பிறா் உடைமைகளைப் பறிக்காமலும் கடமை செய்ய வேண்டியது கட்டாயம்.
- ஆடம்பரமும், அவசியம் இல்லாத, ஆா்ப்பாட்டமும் ஒழிந்த, எளிமை நிறைந்த இனிய வாழ்க்கை முறைக்கு ஏற்ற அடிப்படைத் தேவைகளைத் தரவல்ல ஆற்றல் மூலங்களை, எல்லாா்க்கும் பொதுவாக்குவதுதான் இன்றையத் தேவை.
- உண்மை, உழைப்பு, நோ்மை, நோயின்மை, கல்வி, தனம், தானியம், அறிவு, ஆகியவற்றைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் உடைய சமுதாயம் காணவேண்டும்.
- இதையே கருத்தாகக் கொண்டு இயங்குகிற நிலைப்பாடு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அது தனிமனித நலம் சாா்ந்ததாக, பொதுமனித அறம் கொண்டதாக வளரவேண்டும்; மனிதம் வாழ வேண்டும்.
- எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
- வேறொன்று அறியேன் பராபரமே
- என்ற தாயுமானவரின் உள்ளமே இந்நாளில் யாவருக்கும் தேவை.
நன்றி: தினமணி (26 – 03 - 2021)