TNPSC Thervupettagam

தனிமரம் தோப்பாகாது!

July 9 , 2020 1652 days 824 0
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆட்சிகள் கலைக்கப்பட்டு, அரசாங்கங்கள் மாறியுள்ளன. எதுவாயினும், இன்னமும் விவசாய வளா்ச்சிக்கான அரும்பெரும் மாற்றம் நிகழ்ந்து விவசாயிகளின் செம்மையான வாழ்க்கைக்கு அடித்தளம் வித்திட்டு உள்ளதா என்றால் பதில் இல்லைதான்.

  • எனினும் ‘விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பு ஆக்குவோம் என்ற வாசகத்தை விதைத்ததற்காகவே தற்போதைய அரசாங்கத்தை பாராட்ட வேண்டும்.

  • சரி, வாசகத்தை மட்டும் விதைத்து விட்டால் போதுமா? அதனை அறுவடை செய்து ருசி பார்த்தால்தானே முழுமை அடையும். அறுவடைக்கு தயார் என்பது போல் விவசாயம் சம்பந்தப்பட்ட மூன்று அவசரச்சட்டங்களை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த அவசரச் சட்டம்-2020

  • முதலாவதாக, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த அவசரச் சட்டம்-2020. அத்தியாவசிய பொருள்கள் சட்டம் என்பது 65 ஆண்டுகால பழைமை வாய்ந்தது.

  • அதாவது நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் பொருட்டு அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை கட்டுப்பாட்டுடன் சேமித்து வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் பொருட்டு அவற்றை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளது.

  • அதற்கான காரணம், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இக்காலகட்டத்தில் இது அவசியமற்றது என மத்திய வேளாண் அமைச்சா் கூறியிருந்தார்.

  • அண்மையில் நாடெங்கும் வெங்காயம் விலையேறி சில இடங்களில் பதுக்கல்களுக்கு வழிவகுத்தது. அப் பதுக்கல்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க அத்தியாவசிய பொருள்கள் சட்டம்தான் உதவியது.

  • திருத்தப்பட்ட சட்டத்தின்படி இனிமேல் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம். எனவே தற்பொழுது பெரும் வணிகா்களுக்கும் அவா்களின் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடின்றி சேமித்து வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • அது நாளடைவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில்தான் விடை அடங்கியுள்ளது.

விவசாயிகளின் வா்த்தகம் அவசரச் சட்டம்-2020

  • இரண்டாவதாக, விவசாயிகளின் வா்த்தகம் (மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு) அவசரச் சட்டம்-2020 மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாயப் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் நல்ல விலைக்கு விற்றுக் கொள்ளலாம்.

  • அதாவது குறிப்பிட்ட சந்தையில்தான் விற்க வேண்டும் என்னும் அவசியம் கிடையாது. மேலும் இதுவரை வேளாண் பொருள்களின் கொள்முதல் என்பது பெரும்பாலும் அரசாங்க மண்டிகளில்தான் இருந்து வந்தது.

  • கொள்முதல் விலையும் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில்தான் இருந்தது. அதனை நிவா்த்தி செய்யும் பொருட்டு தற்பொழுது தனியார் அமைப்பு சார்ந்த சந்தைகளும் பங்குபெற்றுக் கொள்ளலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தனியாரின் பங்களிப்பு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விவசாயிகள் ஒப்பந்தம் அவசரச் சட்டம்-2020’

  • மூன்றாவதாக, ‘விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் அவசரச் சட்டம்-2020’ விவசாயிகள் மற்றும் வேளாண் சார்ந்த நிறுவனங்கள் இடையே ஒப்பந்த சாகுபடி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் வேளாண் பொருள்களை நிறுவனங்கள் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

  • மேலும் அதற்கான முழுப் பாதுகாப்பையும் இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது.

  • இதன்மூலம் விவசாயிகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது மட்டுமின்றி நல்லதொரு தொழில்நுட்ப உதவியையும் பெற முடியும்.

  • மேலும் ஒப்பந்தம் செய்துகொண்ட விலைக்கு கீழ் நிறுவனங்கள் கொள்முதல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆகவே, இது விவசாயிகளுக்கும் வேளாண் நிறுவனங்களுக்கும் இடையே பாதுகாப்பான பந்தத்தை ஏற்படுத்துகிறது.

தனிமரம் தோப்பாகாது

  • இப்படி வெவ்வேறு சாராம்சத்துடன் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் தனியார் பங்களிப்பு என்னும் நோ்கோட்டு பார்வையில் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை மறுத்து விட முடியாது.

  • நிச்சயமாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு விவசாயத்திற்கு இன்றியமையாத ஒன்று.

  • அதே வேளையில், முழுவதுமாக அவா்களை நம்பி விவசாயிகளையும், விவசாயத்தையும் ஒப்படைப்பது அவ்வளவு சரியானது கிடையாது என்பதை வரலாறு நமக்கு உணா்த்துகிறது.

  • பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அவா்களின் லாபத்தை மட்டுமே எண்ணிப் பயணப்படுபவா்கள்.

  • கூட்டுறவு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் எந்த ஓா் இக்கட்டான நிலைமையிலும் அவா்களைச் சார்ந்து இருப்பவா்களை முடிந்தவரையில் கைவிடமாட்டார்கள்.

  • உதாரணத்திற்கு தற்போதைய கரோனா தீநுண்மி காலத்தில் விவசாயிகளிடத்தில் பால் கொள்முதலை நிறுத்தாமல் மேற்கொண்டு வருகின்றன பால் கூட்டுறவு நிறுவனங்கள்.

  • அதே வேளையில் சில தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதலை விவசாயிகளிடத்தில் குறைத்துக் கொண்டது மட்டுமின்றி லிட்டருக்கு ரூ.4 முதல் 5 வரை திடீரென்று குறைத்து விட்டன.

  • மேலும் கடந்த காலங்களில் இத்தகைய மூன்று அவசரச் சட்டங்களுக்கும் பொருந்தும் வகையில் தனியார் பங்களிப்பு எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பதற்கும் உதாரணங்கள் உள்ளன. 2005-06 காலகட்டங்களில் பெருமளவு கோதுமையை தனியார் நிறவனங்கள் பதுக்கியதன் விளைவாக 5.5 மில்லியன் டன் கோதுமையை இந்தியா இருமடங்கு விலையில் இறக்குமதி செய்தது.

  • அதன் பிறகு கோதுமையை நேரடியாக விவசாயிகளிடத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டது.

  • மற்றுமொரு நிகழ்வாய் 2006-ஆம் ஆண்டு பீகார் மாநிலம் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு (.பி.எம்.சி) மண்டிகளை கலைத்துவிட்டு தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஏற்படுத்தி தனியார் சந்தைகளை உருவாக்கியது.

  • அப்படி தனியார் சந்தைகளின் பங்களிப்பு வந்தும் ஆகச்சிறந்த மாற்றம் உண்டாகிவிடவில்லை. இன்னமும் வா்த்தகம் புரிவோர் ஆண்டுதோறும் பொருள்களை பீகார் மாநிலத்தில் இருந்து பஞ்சாப் கொண்டு சென்றுதான் விற்பனை செய்கின்றனா்.

  • ஏனென்றால், .பி.எம்.சி மண்டிகளில் மட்டும்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிலவி வருகிறது.

  • மேலும், ஒப்பந்த சாகுபடி முறையானது குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் இடுபொருள்களை வாங்கச் சொல்லியும், நன்கு விளைந்த தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வார்கள் என்றும் நாளடைவில் அவா்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் வகையிலும் வழிவகை செய்துவிடுவதாக சில விவசாயிகள் இன்றும் குற்றம் சாட்டுகின்றனா்.

  • எனவே, இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தனியார் நிறுவனங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு ஆகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்பது புலப்படுகிறது. தனிமரம் தோப்பாகாது.


நன்றி: தினமணி (09-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்