TNPSC Thervupettagam

தனியார் கல்வி நிறுவனங்கள் கஷ்டத்தில் இருக்கின்றனவா

January 30 , 2022 918 days 557 0
  • கரானோ மூன்றாவது அலை காரணமாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அதையொட்டி நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனக் கூட்டமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் பேசும்போது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்னும் கவலையை வெளிப்படுத்தினார். அப்போது அவர் வலியுறுத்திய கோரிக்கைகள் இரண்டு. ஒன்று,  ‘எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடக் கூடாது’; இரண்டாவது, ‘மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது!’
  • தனியார் (சுயநிதி) கல்வி நிறுவனங்கள் பெரும் கஷ்டத்தில் இருப்பதாகப் புலம்பிய அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பாவனை, தர்க்கம், சொல்லாட்சி எல்லாம் ஒருசேர இணைந்து அவர் மீதும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீதும் இரக்கத்தை உருவாக்கின. உண்மையிலேயே தனியார் கல்வி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றனவா? இந்தப் பொது முடக்கத்தைச் சமாளிக்க முடியாத அளவு திண்டாட்டத்தில் இருக்கின்றனவா?
  • அரசுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இவ்வாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தனியார் நிறுவனங்களில் கற்றவர்கள் பலர் அரசு நிறுவனங்களை நோக்கி வந்துள்ளனர். அந்த வகையில் தனியார் நிறுவனங்களுக்கு இலேசான பாதிப்புத்தான். ஆனால் அவர்கள் லாபத்தில் எந்தக் குறையும் இல்லை. லாபத்தில் குறை வராத அளவுக்குத் தனியார் நிறுவனச் செயல்பாடுகள் பல கைகளை விரித்திருக்கின்றன.
  • மாணவர்களிடம் பெறும் கட்டணத்தைக் குறைத்து எழுபத்தைந்து விழுக்காடு பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தபோதும், எந்தத் தனியார் நிறுவனமும் அதைப் பின்பற்றவில்லை. முழுக் கட்டணம் வசூலிக்க எல்லாவிதமான தந்திரோபாயங்களையும் கையாண்டனர். பெருந்தொற்று காரணமாக வேலையும் வருமானமும் இழந்த பெற்றோர் பலர் கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல்தான் அரசு நிறுவனங்களை நாடினர். அப்படியும் கட்டணச் சலுகை வழங்கவோ, கால அவகாசம் தரவோ, தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லை. எந்த வழியிலாவது பணத்தைப் பிடுங்கிவிட வேண்டும் என்றே முயன்றனர். பண விஷயத்தில் மனிதாபிமானப் பேச்சுக்கே இடமில்லை.
  • எத்தனையோ கல்வி நிறுவனங்கள் வருமான வரித் துறையின் சோதனைக்கு ஆளானதும் கணக்கில் வராத  பணம் கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்டதுமான செய்திகளைக் கண்டிருக்கிறோம். என்ன நடந்தாலும் சரி, இந்நிறுவனங்கள் மக்களுக்கு எந்தச் சலுகையும் காட்டுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றன.

ஊதியக் குறைப்பு

  • முதல் பொதுமுடக்கத்தின்போது அச்சத்தின் காரணமாக ஆசிரியர்களுக்கும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை விட்டன. பின்னர் வலைவழி வகுப்பு முறை வந்தவுடன் ஆசிரியர்களை அவ்வகுப்பு எடுக்கச் செய்தன. ஆனால், ஊதியத்தைப் பாதியாகக் குறைத்தன. சில நிறுவனங்கள் இருபத்தைந்து, முப்பது விழுக்காடு ஊதியமே வழங்கின. சொந்த ஊர்களுக்குச் செல்வதன் மூலம் குறை ஊதியத்தில் வாழ முயன்ற ஆசிரியர்களைத் வீட்டிலிருந்து தொடர்ந்து வகுப்பு நடத்தவும் இந்நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை.
  • நிறுவனத்திற்கு நேரில் வந்து அங்கிருந்தே வகுப்பு எடுக்க வேண்டும் என விதித்தன. நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருந்தால்தான் ஆசிரியர்கள் சரியாகச் செயல்படுவர் என்னும் எண்ணம் ஒருபுறம்; வகுப்பெடுக்கும் நேரம் போக மீத நேரத்தில் ஆசிரியர்கள் ‘சும்மாதானே இருப்பார்கள், அப்போது வேறு வேலை கொடுக்கலாம்’ என்பது இன்னொரு புறம்.
  • மூளை உழைப்பை உயர்வாகவும் உடல் உழைப்பைத் தாழ்வாகவும் கருதும் நிலை இருக்கும் நம் சமூகத்தில் இரண்டுக்குமான வேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாத நிலையும் உள்ளது. ஒருமணி நேரம் வகுப்பெடுக்கத் தயாரிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்பதையும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் தொடர்ந்து வகுப்பெடுப்பதற்கு ஆற்றல் தேவை என்பதையும் தனியார் நிறுவனங்கள் பொருட்படுத்துவதே இல்லை. வகுப்பெடுக்காத ஓய்வு நேரமெல்லாம் ஆசிரியர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதே ஆழமான எண்ணம். சரி, வகுப்பில்லாத நேரத்தில் ஆசிரியர்களுக்கு என்ன வேலை?
  • ஓர் ஆசிரியருக்கு இத்தனை மாணவர்கள் என்று நிர்வாகம் பிரித்துவிடும். அந்த மாணவர்களின் கற்றலைப் பரிசோதிப்பதுதான் ஆசிரியர்களின் வேலை என்று மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றும். மாணவரின் கற்றலைப் பற்றி விசாரிப்பது போலப் பெற்றோரிடம் ஆசிரியர் பேசுவார். அத்துடன் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் குறித்தும் ஆசிரியர் பேச வேண்டும். பெற்றோரின் மனதைக் கரைத்து, கவர்ந்து, வலியுறுத்தி, அச்சுறுத்தி எப்படியாவது கல்விக் கட்டணத்தைப் பெற்றுவிட வேண்டும். எத்தனை மாணவரது கட்டணத்தை ஆசிரியர் பெற்றுத் தருகிறார் என்பதைப் பொருத்தே அவருக்கு வழங்கும் ஊதியத்தின் அளவு இருக்கும்.
  • ஒதுக்கப்பட்ட அனைவரிடமும் கட்டணம் வசூலித்துத் தந்துவிடும் ஆசிரியருக்கு முழுமையான ஊதியம். பாதிதான் வசூலிக்க முடிந்தது என்றால், அவருக்குப் பாதி ஊதியம்தான். வசூலிக்கத் திறனில்லாத ஆசிரியர் பாடம் கற்பிப்பதில் எத்தனை சிறந்தவராக இருப்பினும் ஊதியம் இல்லாமல் இருக்க வேண்டியதுதான். அல்லது வேலையை விட்டு நின்றுவிடலாம். தனியார் வங்கிகள் கடனை வசூலிக்கவென்று தனியாக ஆட்களை நியமிக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களோ ஆசிரியர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வேலையை விட்டுவிடுகின்றன.

பிள்ளை பிடிக்கும் ஆசிரியர்கள்

  • வலைவழித் தேர்வுகளைத் தனியார் நிறுவனங்கள் கடுமையான எதிர்த்தன. அதன் காரணம் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தால் கட்டணம் செலுத்தினால்தான் தேர்வு நுழைவுச்சீட்டு எனச் சொல்லிக் கட்டணத்தைப் பெறலாம் என்பதுதான். கல்லூரிக்கு வராமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம் என்ற போதும் நுழைவுச்சீட்டைப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு நேரடியாக அனுப்பக் கூடாது, தங்களிடமே கொடுக்க வேண்டும், தாங்களே மாணவர்களுக்கு அனுப்பி விடுவோம் எனக் கல்லூரிகள் கேட்டுப் பெற்றன.
  • தேர்வு நுழைவுச்சீட்டை ஒரு பொறியாகப் பயன்படுத்திக் கட்டணத்தை வசூலிப்பதுதான் நோக்கம். மாணவர் கல்லூரிக்கு வரக் கூடாது என்பதால் ஆசிரியரே நேரடியாக மாணவர் வீட்டுக்குச் சென்று கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு நுழைவுச்சீட்டை வழங்கும் வேலையும் நடந்தது.
  • ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் மற்றொரு வேலை, புதிய மாணவர்களைப் பிடித்து வந்து தம் நிறுவனங்களில் சேர்ப்பது. குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று தம் பள்ளியைப் பற்றியோ கல்லூரியைப் பற்றியோ பெற்றோரிடமும் மாணவரிடமும் பேச வேண்டும். துண்டறிக்கை வழங்க வேண்டும்.
  • தம் நிறுவனம் பிள்ளைகளுக்கு எத்தகைய வசதிகளைச் செய்து கொடுக்கின்றது என்பதை விளக்க வேண்டும். கட்டணச் சலுகை பற்றி விவரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை நடக்கும் காலத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளின் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திரளாக வந்து நின்றுகொண்டு மாணவர்களைப் பிடிப்பார்கள். அரசு நிறுவனத்தில் இடம் கிடைக்காதவர்கள், தாம் விரும்பும் படிப்புக்கு வாய்ப்பில்லாதவர்கள் எல்லாம் தனியார் நிறுவன ஆசிரியர்களின் இலக்கு.
  • தம் நிறுவனம் எப்படிச் சிறப்பாக நடக்கிறது, ஒழுக்கமும் ஒழுங்கும் பின்பற்றப்படுகிறது என்றெல்லாம் சொல்வதோடு கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டியதில்லை, அரசு தரும் கல்வி உதவித்தொகையில் ஒரு பருவக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளலாம் எனவும் ஆசை காட்டி ஈர்ப்பது ஆசிரியர்களின் வேலை.
  • சிக்கும் மாணவர்களையும் பெற்றோர்களையும் உடனே தம் நிறுவன வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். எந்தச் சான்றிதழும் இல்லை என்றாலும் பணம் கட்டினால் போதும், சேர்க்கை உறுதி. ஓர் ஆசிரியர் எத்தனை மாணவரைச் சேர்க்கிறாரோ அதற்கேற்ப ஊதிய உயர்வு கிடைக்கும். தொற்றுக் காலமாகிய இப்போது மாணவர் சேர்க்கையைப் பொருத்துத்தான் ஊதியமே வழங்கப்படுகிறது.
  • கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் பிள்ளை பிடிப்பவர்களாக மாறுகிறார்கள். வீடு வீடாகச் சென்று பிள்ளைகள் இருக்கும் வீடுகளைக் கணக்கெடுப்பதும் பெற்றோரிடம் பேசுவதும் பள்ளி ஆசிரியர்களின் வேலை. அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தம் கல்வி நிறுவனத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பது கல்லூரி ஆசிரியர்களின் வேலை.
  • ஒரு கல்வி நிறுவனமே ஒரே வளாகத்திற்குள் பள்ளி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி உள்ளிட்டவற்றை நடத்துகின்றன. அந்த வளாகத்திற்குள் ஒரு மாணவர் நுழைந்துவிட்டால் உயர்கல்வி வரைக்கும் அதே நிறுவனத்தில் பயில்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியதும் ஆசிரியரின் பொறுப்பாகிறது. ஆசிரியத் தொழிலை அவர்கள் செய்ய வேண்டிய கடமை இரண்டாம் பட்சம். சேர்க்கைக்கு ஆள் பிடிப்பது, பணம் வசூலிப்பது முதலிய முகவர் வேலைதான் முதல் கடமை.
  • இளநிலை படிக்கும் மாணவர் அதை முடித்ததும் மாற்றுச் சான்றிதழைப் பெற முடியாது. அதே நிறுவனத்தில் முதுநிலைப் படிப்புக்குச் சேர நிர்ப்பந்திக்கப்படுவார். அல்லது கல்வியியல் பயில அங்கேயே சேர வேண்டும். விவரமான பெற்றோராக இருந்தாலும் போராடித்தான் மாற்றுச் சான்றிதழைப் பெற முடியும். இப்படிப் பல வழிகளைப் பயன்படுத்தித் தமக்கு வர வேண்டிய கட்டணத்தைத் தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கின்றன. மாணவர்களாகிய வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்கின்றன.

செலவு குறைவு - வரவு மிக அதிகம்

  • இந்தத் தொற்றுக் காலத்தில் தனியார் நிறுவனங்களுக்குச் செலவோ மிகவும் குறைவு. ஆசிரியர்கள் பலரை வேலையைவிட்டு நிறுத்தின. பிறருக்கு ஊதியத்தைக் குறைத்தன. ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டன. குறிப்பாகத் துப்புரவாளர்கள், விடுதிகளில் சமையல் செய்வோர், பாத்திரம் துலக்குவோர், பரிமாறுவோர், சுத்தம் செய்வோர், பேருந்து ஓட்டுநர்கள் எனக் கணிசமானோரை ஊதியம் கொடுத்துத் தக்க வைக்கும் தேவை இல்லை எனக் கருதி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன.
  • மாணவர்கள் விடுதியில் இல்லை, அவர்களிடம் விடுதிக் கட்டணம் பெற முடியாது, ஆகவே ஊதியம் வழங்க முடியாது என்பதுதான் தர்க்கம். தொற்றுக் காலத்தைக் குறைந்த ஊழியர்களைக் கொண்டே கடக்க முடியும் என நிறுவனங்கள் கருதியதால் ஊதியம் வழங்கும் பெருஞ்செலவு குறைந்தது. வகுப்புகள் நடைபெறாத காரணத்தால் மின்கட்டணம், தண்ணீர்த் தேவை உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளும் பராமரிப்புச் செலவுகளும் இல்லை.
  • கணக்கிட்டுப் பார்த்தால் தனியார் நிறுவனங்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வரவு மிகுதி; செலவு குறைவு. தனியார் கல்வி நிறுவனம் என்பது தொழிலாகத்தான் பார்க்கப்படுகிறது. ‘கல்விச் சேவை’ என்றெல்லாம் வாய் வார்த்தைக்காகச் சொன்னாலும் அதைத் தொழிலாகப் பார்த்துத்தான் முதலீடு செய்கின்றனர். தொடக்க முதலீடு குறைவு; வரும் வருமானத்தைக் கொண்டு வளர்ச்சி பெற்றுவிடலாம் என்பது இந்தக் கல்வித் தொழிலின் அடிப்படைச் சூத்திரம். இன்று சில கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டிடங்களாக எழும்பி நிற்கும் பல கல்வி நிறுவனங்களின் தொடக்க முதலீடு மிகமிகக் குறைவு.
  • மாணவர்களிடம் பெறும் கட்டணத்தைக் கொண்டே ஆண்டாண்டுதோறும் கட்டிடங்களும் வசதிகளும் செய்யப்பட்டன. ஓரளவுக்கு வளர்ந்த பிறகு வரும் வருமானத்தில் பெரும்பகுதி லாபமாக எஞ்சுகிறது. எந்தத் தொழிலை விடவும் லாப உறுதி கொண்டது கல்வித் தொழில். ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் படித்துத்தான் ஆக வேண்டும். வருமானம் தரும் வாடிக்கையாளர் இருந்துகொண்டே இருப்பது உறுதி. லாபகரமாக நடக்கும் தொழில் இது என்பதில் ஐயமே இல்லை.

எடுத்தவன் கொடுக்கவில்லை...

  • ஆனால் பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கைகள் கொடுப்பதற்கு நீளவேயில்லை. பிடுங்குவதற்கு முரட்டுக் கரங்கள் குவிந்தன. பெற்றோர்களுக்கு வேலை இல்லை; போதுமான வருமானம் இல்லை என்பது இந்நிறுவனங்களுக்குத் தெரியாதா விஷயமா? நினைத்தால் மாணவர்களுக்கு ஓராண்டுக் கட்டணமே வேண்டாம் என்றோ பாதிக் கட்டணம் போதுமென்றோ சலுகை தந்திருக்கலாம். அல்லது இயலாத பெற்றோரின் பிள்ளைகளுக்காவது கட்டணச் சலுகை கொடுத்திருக்கலாம். அத்தகைய மனிதாபிமானம் இந்த நிறுவனங்களுக்கு வரவே இல்லை.
  • ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஏற்கனவே கொடுத்த ஊதியத்தையாவது குறைக்காமல் முழுமையாகக் கொடுத்திருக்கலாம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். எந்தச் சாதியிலிருந்து வந்தவர்கள் என்றாலும் பெரும்பாலனவர்களுக்கு உடைமைப் பின்புலம் ஏதும் கிடையாது. மாத ஊதியத்தைக் கொண்டே குடும்பம் நடத்த வேண்டிய நிலைதான்.
  • கொடுங்காலத்தில் தம் ஊழியர்களைக் காக்க வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு இல்லையா? கடமையை விடவும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை விடவும் லாபம் ஒன்றே இவற்றின் குறிக்கோள். தனியார் நிறுவனங்களிலும் அரிதாகச் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. நிறுவனப் பாரம்பரியத்தைக் காக்கும் நோக்கிலோ கல்வியைச் சேவை என்று உண்மையாகவே கருதுவதாலோ தம் ஊழியரது வாழ்வாதாரம் தம்மைச் சார்ந்தது என்னும் பொறுப்புணர்வின் காரணமாகவோ சில நிறுவனங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கும் கடமையை மேற்கொண்டும் மாணவர்களைச் சிரமப்படுத்தாமலும் இருந்திருக்கலாம். அவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு.
  • வரலாற்றைப் பார்த்தால் பஞ்சம், வெள்ளம், தொற்று நோய் முதலிய பேரிடர்கள் வந்த காலத்தில் எல்லாம் மனிதாபிமானம் மருந்துக்கும் செயல்படவில்லை என்பது தெரிகிறது. குறிப்பாக வணிகர்கள், முதலாளிகள், உடைமையாளர்கள் முதலியோர் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் சம்பாதிக்க முனைந்தனர். பொருள்களைப் பதுக்கி வைத்தனர்; செயற்கையான கிராக்கியை உருவாக்கினர். மக்களிடம் இருந்து விலைமதிப்பான பொருள்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினர். நிலம், வீடு ஆகியவற்றை எழுதி வாங்கி அபகரித்தனர். பெண்டு பிள்ளைகளை அடிமை கொண்டனர். பேரிடர் என்பது இவர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டக் காலம்.
  • இன்று உலகம் மாறிவிட்டது. போக்குவரத்து பெருகியிருக்கிறது. ஒருபகுதியில் விளையும் பொருள்களை இன்னொரு பகுதிக்குக் கொண்டு சென்று தேவையைத் தீர்க்கும் நடைமுறை வந்திருக்கிறது. ஒருபகுதி மக்களுக்கு இன்னொரு பகுதி மக்கள் உதவுவதற்கான செய்தித் தொடர்புகளும் வாய்ப்புகளும் கூடியிருக்கின்றன. எனினும் குறுமுதலாளிகள், சிறுமுதலாளிகள், பெருமுதலாளிகள் அனைவருக்கும் எத்தகைய நெருக்கடியிலும் லாபம் சம்பாதிக்கும் மனநிலை மட்டும் மாறவில்லை. அந்த மனநிலைதான் கல்வியிலும் வெளிப்படுகிறது.

பணிப் பாதுகாப்பு

  • தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதைத் தவிர்க்க இயலாத நிலையில் உள்ளோம். ஆனால் அவற்றை முறைப்படுத்தவும் வழிகாட்டவும் மனிதாபிமான நடைமுறைகளைக் கைக்கொள்ளவும் அரசு வலியுறுத்த முடியும். ஆசிரியர்களும் பணியாளர்களும் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ள இயலும். தொற்றுக் காலத்தில் ஒருவரையும் பணியிலிருந்து வெளியேற்றக் கூடாது என்பதைக் கட்டாயமாக்கலாம்; கண்காணிக்கலாம்.
  • தனியார் நிறுவனங்கள் எந்த நேரத்திலும் தம் ஊழியர்களை வெளியேற்றலாம், புதியவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிற நடைமுறை ஆசிரியர்களையும் பிற பணியாளர்களையும் எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. அரசு நினைத்தால் அவர்களுக்குக் குறைந்தபட்சப் பணிப் பாதுகாப்பை வழங்க முடியும். அதே போலப் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம். தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
  • அரசைத் தவிர மக்கள் யாரிடம் அடைக்கலம் கோர முடியும்?

நன்றி: அருஞ்சொல் (30 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்