TNPSC Thervupettagam

தனியார் துப்பறிதல் முறைப்படுத்தப்படுமா?

December 17 , 2020 1319 days 567 0
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமையான "அந்தரங்க உரிமை' மீறல் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்க முடியாமல் உயர்நீதிமன்றம் அவ்வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.
  • கருத்து வேறுபாடு காரணமாக மனைவியையும் பெண் குழந்தையையும் பிரிந்து வாழும் ஒருவர், தனது மனைவியின் தினசரி வாழ்க்கை குறித்த தகவல்களை ரகசியமாகத் திரட்ட தனியார் துப்பறிவாளர் ஒருவரின் உதவியை நாடியது தொடர்பான வழக்கு அது.
  • அந்தத் தனியார் துப்பறிவாளர், தன்னுடைய வாடிக்கையாளரின் மனைவி வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தினுள் அனுமதி பெறாமல் சென்று வாடிக்கையாளரின் மனைவி, பெண் குழந்தை குறித்த தகவல்களைத் திரட்டியதோடு, அவர்களை ரகசியமாக புகைப்படமும் எடுத்து வாடிக்கையாளருக்குக் கொடுத்துள்ளார்.
  • "தனியார் துப்பறிவாளர், அந்தப் பெண்ணையும் அவரது மகளையும் வேவு பார்த்ததும் ரகசியமாக அவர்களை புகைப்படம் எடுத்ததும் அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையை மீறியது ஆகாதா?' "எந்த சட்டத்தின்படி தனியார் துப்பறிவாளர் அப்படிச் செய்தார்?' "இது போன்ற அத்துமீறல்களைக் கண்காணிக்கும் அமைப்பு எது?' இது போன்ற கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பியது.
  • மன்னர்கள் நாட்டை ஆட்சி செய்து வந்த காலத்தில் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டுவந்தவர்கள் "ஒற்றர்கள்' என அழைக்கப்பட்டனர். அரசர்கள் திறம்பட ஆட்சி நடத்தத் தேவையான தகவல்களைத் திரட்டித் தருவதும், குற்றச் செயல் நிகழ்ந்தால் அது குறித்து துப்புத் துலக்கி குற்றவாளிகளை அடையாளம் காண்பதும் அவர்களின் பணிகளாகும்.
  • மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலரத் தொடங்கியதும் துப்பறியும் பணி காவல்துறையின் செயல்பாட்டின் கீழ் வந்தது. நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுபவர்கள் "உளவுத்துறையினர்' என்றும் நிகழ்ந்த குற்றங்கள் குறித்து துப்பு துலக்குபவர்கள் "புலனாய்வாளர்கள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். தாங்கள் சார்ந்துள்ள துறைகளின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நீதிமன்றத்தின் ஆய்வுக்கும் உட்பட்டு அவர்கள் செயல்படுகிறார்கள்.
  • காலப்போக்கில் காவல்துறையைச் சாராதவர்களும் துப்பறியும் செயலில் ஈடுபடத் தொடங்கினர். துப்புத் துலங்காத குற்ற நிகழ்வுகளில் தங்களின் தனித்திறமையின் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிவதே சமூகத்திற்குச் செய்யும் சேவை எனக் கருதி பல தனியார் துப்பறிவாளர்கள் செயல்பட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்களின் செயல்பாடுகள் மாறத் தொடங்கின. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் தனியார் துப்பறிவாளர்கள் சிலர் ஈடுபடத் தொடங்கினர்.
  • சமீப காலங்களில் பொதுமக்களில் சிலர் தங்களின் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக காவல்துறை, புலனாய்வுத்துறை போன்ற அரசு சார்ந்த அமைப்புகளை நாடிச் செல்லாமல் தனியார் துப்பறிவாளர்களைத் தேடிச் செல்லும் நிலைஉள்ளது.
  • இன்றைய கணினி உலகில் குடும்பத்தைக் கவனிக்கப் போதுமான நேரத்தைப் பலரால் ஒதுக்க முடிவதில்லை. விடுதியில் தங்கிப் படிக்கும் தன் மகன் சரியாக கல்லூரிக்குச் செல்கிறானா? தன் மகளுடன் பழகிவரும் இளைஞன் யார்? இவை போன்ற சந்தேகங்கள் பெற்றோர் பலருக்கும் உண்டு.
  • இம்மாதிரியான பிரச்னைகளுக்குத் தீர்வு தேடி காவல்துறையை அணுகினால் செய்தி கசிந்து சமூகத்தில் பரவி, அதனால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படுமோ என்ற அச்ச உணர்வு சமூகத்தில் பரவலாக நிலவுகிறது.
  • கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மெல்ல மெல்ல விலகிச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் திருமணம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கும், விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளும் தம்பதி தங்களது உறவினர்களின் உதவியின்றி வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டிக் கொள்வதற்கும் தனியார் துப்பறியும் நிறுவனங்களைத் தேடிச் செல்லும் நிலை அதிகரித்து வருகிறது.
  • பொதுமக்களின் புகார்களைக் கையாள்வதில் காவல்துறையினர் காட்டும் மெத்தனப் போக்கும் பொதுமக்கள் தனியார் துப்பறிவாளர்களின் உதவியை நாடிச் செல்ல ஒரு காரணமாகும். அதனால், ஒவ்வொரு நகரத்திலும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
  • தேநீர் கடை போன்ற சிறிய கடை நடத்துவதற்குக்கூட உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பது நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம். ஆனால், லட்சக்கணக்கான தனியார் துப்பறிவாளர்களுடன் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் ஆயிரக்கணக்கான தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை வரைமுறைப்படுத்த சட்டம் எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை. இதனால், தனியார் துப்பறிவாளர்கள் பலர் நெறியற்ற முறையில் செயல்பட்ட சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளன.
  • உலக நாடுகள் பலவற்றில் தனியார் துப்பறிவாளர்களின் செயல்பாடுகளை வரைமுறைபடுத்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்தந்த நாட்டின் சட்ட விதிமுறைகளின்படி உரிமம் பெற்றவர்கள்தான் தனியார் துப்பறிவாளர்களாகச் செயல்படமுடியும். சட்ட விதிமுறைகளுக்கு முரணாகச் செயல்படுவோருக்கு வழங்கப்பட்ட உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் நிலை உலக நாடுகளில் உள்ளது.
  • இந்தியாவில் தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை வரைமுறைபடுத்த வேண்டியதன் அவசியத்தை 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற "அனைத்திந்திய போலீஸ் அறிவியல் மாநாடு' வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காவல்துறையின் மேம்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பு, 1975-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் அடிப்படையில், தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை வரைமுறைப்படுத்துவதற்கான சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியப்படுத்தியது.
  • தனியார் துப்பறியும் நிறுவனங்களை வரைமுறைப்படுத்தும் மசோதாவை 2007-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவைப் பரிசீலனை செய்த நாடாளுமன்ற நிலைக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய உள்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விளக்கமளித்து அந்த அறிக்கையை 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்தது.
  • இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட அந்த மசோதாவின்படி, இந்தியர் மட்டும்தான் இந்தியாவில் தனியார் துப்பறிவாளராகச் செயல்பட முடியும். ஒவ்வொரு தனியார் துப்பறியும் நிறுவனமும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய - மாநில அரசுகளின் வரையறை செய்யப்பட்ட அமைப்புகளிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • விதிமுறைகளுக்கு முரணாகச் செயல்படும் தனியார் துப்பறிவாளர்களுக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்பவை உள்ளிட்ட விதிமுறைகள் அந்த மசோதாவில் இடம் பெற்றிருந்தன.
  • அந்த மசோதா மீதான ஆய்வு பல முறை நடத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டில் அந்த மசோதா இறுதி வடிவத்தை எட்டியது. அந்த மசோதாவைப் போன்று பல்வேறு மசோதாக்கள் சட்ட வடிவம் பெறாமல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
  • இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், "ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த 22 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும்' என்ற அறிவிப்பை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அப்படித் திரும்பப் பெறப்பட்ட மசோதாக்கள் பட்டியலில் தனியார் துப்பறியும் நிறுவனங்களை வரைமுறைபடுத்தும் மசோதாவும் இடம் பெற்றிருந்தது.
  • கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணையும் அவரின் குழந்தையையும் தனியார் துப்பறியும் நிறுவனம் ரகசியமாகக் கண்காணித்து புகைப்படம் எடுத்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தங்கள் வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவது தொடர்பாக சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை என்றும் அதனால் அவர்களை ரகசியமாகக் கண்காணித்ததும் புகைப்படங்கள் எடுத்ததும் சட்டத்திற்கு எதிரான செயல்களாகக் கருதமுடியாது என்றும் தனியார் துப்பறிவாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
  • எந்தெந்த நிகழ்வுகளில் தனியார் துப்பறிவாளர்கள் நம்நாட்டில் துப்பறியும் பணியில் ஈடுபடலாம்? அவர்களின் செயல்பாடுகள், குற்றப் புலன்விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை, புலனாய்வுத்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாற்றுகின்றனவா? நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார்களா? தேச விரோத சக்திகளுக்காக துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார்களா? இவை போன்ற ஐயங்கள் நீங்கி தெளிவு கிடைக்க வேண்டுமென்றால், தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கான சட்டம் அவசியம் தேவை.

நன்றி: தினமணி (17/12 2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்