TNPSC Thervupettagam

தனியார்மயம் தவிர்ப்போம்

February 13 , 2023 546 days 341 0
  • மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றுடன் தற்போது புதிதாக இணைந்திருப்பது மின்சாரம். இனி வரும் காலங்களில் மனிதர்களால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
  • நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப் படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக தற்போது யூனியன் பிரதேசங்களில் மின்வாரியங்களை தனியார்மயமாக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தனியாரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தனியாருக்கு மின்துறையின் 100% பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
  • தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை யூனியன் பிரதேசத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மின்துறை தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, அந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மாநிலத்தில் வீடுகளுக்கு இப்போது முன்பணம் செலுத்தி செயல்படும் வகையிலான "பிரீபெய்டு' மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
  • பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் இழப்பு சுமார் 15 % என்ற அளவிலும், விற்று முதல் வசூல் 98 % என்ற அளவிலும் என நல்ல நிலையிலேயே உள்ளன. ஆனால், கடந்த கால அரசுகள் அறிவித்த மானிய விலை, இலவச மின் திட்டங்களால் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் சுமார் ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கியுள்ளது. 
  • நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் மின் உற்பத்தி, பகிர்மானக் கழகங்களுக்கு சுமார் 4.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு, அதாவது ரூ.1.34 கோடி அளவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்துக்கு கடன் உள்ளது. 
  • அதே நேரத்தில், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இலவச மின் திட்டங்களால் தமிழகம் தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
  • மாநில நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்துக்கு  2020-ஆம் ஆம் நிதியாண்டின் முடிவில் சுமார் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் கடன் நீங்கலாக மின்வாரியத்தின் மொத்தக் கடன் சுமார் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி. 
  • இந்த வெள்ளை அறிக்கையின்படி, ஒரு யூனிட் மின்சாரத்தை வழங்க மின்வாரியத்துக்கு ரூ.9.06 செலவாகும் நிலையில், சராசரியாக ஒரு யூனிட்டுக்கு 6.7 ரூபாய் மட்டுமே வசூக்க முடிகிறது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய் இழப்பைச் சந்திக்கிறது மின்வாரியம் என்று தெரிவிக்கப்பட்டது. 
  • இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு இலவச மின் திட்டங்களை அறிவித்து மாநில அரசுகளை கடனாளிகளாக்கிவிடுகின்றன. கடனுக்கு வட்டி, மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை செயல்படுத்தும்போது இந்தக் கடன் மேலும் அதிகமாகிறது.
  • இதனிடையே, மத்திய அரசு மின்வாரியம் உள்பட அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மின் உற்பத்தி - பகிர்மானக் கழக தளவாடங்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள தனியாருக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. இவற்றை பயன்படுத்தி தனியார் மின்சாரம் தயாரித்து விநியோகம் செய்யும் பட்சத்தில், அவர்கள் லாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுவார்கள் என்பதால், பொதுமக்களும், விவசாயிகள், தொழில் துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
  • மத்திய அரசு, மின்துறையை தனியார்மயமாக்க முயன்றால், அது நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத் துறையின் பங்களிப்பு சுமார் 20 %-ஆகவும், தொழில் துறையின் பங்களிப்பு சுமார் 30 %-ஆகவும் உள்ளது.
  • ஏற்கெனவே உர விலை உயர்வு, கூலி உயர்வு, விவசாயத்துக்கு போதிய ஆள்கள் கிடைக்காமை, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் என விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாகவோ, மானியமாகவோ வழங்கப்பட்டு வரும் மின்சாரமும் நிறுத்தப்பட்டுவிட்டால், இந்தத் தொழிலை பலர் முற்றிலுமாக கைவிடும் நிலை உருவாகிவிடும். 
  • இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி, உணவு உற்பத்தியிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதேபோல, தொழில் துறையும் சிக்கலுக்குள்ளாகும் நிலை உள்ளது.
  • மின் தேவைக்கு மத்திய அரசை நம்பியிருக்காமல், தமிழக அரசு சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யத் தேவையான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதால் மின் வாரியத்தின் கடன் அதகரிக்கிறது. இதனால், இயற்கை வழிகளில் மின்சாரம் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
  • பிரிட்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளதைப்போல, தமிழகத்தில் கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில மின்துறை அமைச்சர் அந்த நாடுகளில் பார்வையிட்டு வந்துள்ள நிலையில், அதற்கான திட்டங்களை தொடங்க வேண்டும்.
  • விவசாயிகளுக்கு சூரிய ஒளியிலிருந்து அவர்களே மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மின் தகடுகளை மானிய விலையிலோ, இலவசமாகவோ வழங்க வேண்டும். இதேபோல, வீடுகளிலும் பொதுமக்கள் தாங்களே மின்சாரத்தை தயாரித்துக்கொள்ளும் வகையில் மானிய விலையில்  சூரியஒளி மின்தகடுகளை வழங்குவதும் அவசியம்.

நன்றி: தினமணி (13 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்