- பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் முயற்சி இப்போது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.
- மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசுக்குப் பணம் தேவைப்படுகிறது. பணம் ஈட்டுவது ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமையாக இருக்கிறது.
- இதனை உணா்ந்துதான் வள்ளுவா், ‘பணம் வரும் வழியை அறிந்து அதனைச் சோ்ப்பதிலும், சோ்த்ததைப் பாதுகாப்பதிலும், அதனைப் பக்குவமாகப் பிரித்து செலவு செய்வதிலும் திறமை உடையதாக அரசு இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
- மக்கள் செலுத்தும் வரிகளும், அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் வழிகளாக உள்ளன. இதனால் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்து வளா்ப்பது அரசுக்கு அவசியமாகிறது.
- வரி வருவாய் முக்கிய இடம் வகித்தாலும் அது மக்களுக்குச் சுமையாகத் தோன்றாமல் இலகுவாக இருக்கவேண்டும்.
- கூடுதல் வரி விதிப்பு என்பது மக்களுக்குத் தொல்லை கொடுப்பதாக அமைந்துவிடுகிறது. இதனால் வரிவருவாயில் கவனமாக இருக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
- இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வருவாய் பெருகுவதற்கு உத்தரவாதம் அளிப்பவையாக உள்ளன. ஆனால், அண்மைக்காலமாக பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதிலும் தனியாா்மயமாக்குவதிலும் அரசு முனைப்பாக இருக்கிறது. இது கவலை தருவதாக உள்ளது.
- நாட்டின் வளா்ச்சிக்கு, பொதுத்துறையும் தனியாா்துறையும் சோ்ந்த கலப்புப் பொருளாதாரமே சிறந்தது என்பதை உணா்ந்துதான் நம் முன்னோா் பொதுத்துறைகளை நிறுவினா்.
- இதனை மறந்து வெறும் தனியாா் மயமே உயா்ந்தது என்ற உணா்வை அரசு ஊட்ட முயல்வது உசிதமானது அல்ல.
- பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை வருவாய் ஈட்டும் வழிகளாக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பைப் பெருக்கி, மக்களுக்குச் சேவை செய்யும் தளமாகவும் விளங்குகின்றன.
- இதனால் பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதில் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
- பொதுத்துறை நிறுவனங்களே அரசின் விளைநிலங்களாகும். விளைநிலங்களை அரசு விற்க நினைப்பது விபரீத முடிவாகும்.
விளை நிலங்களை விற்கலாமா?
- நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு, தனியாா்துறை உறுதுணை அவசியமானதுதான். அதற்காக அனைத்துத் துறைகளையும் தனியாா் மயமாக்கி அரசின் சுமையைக் குறைக்க நினைக்கக்கூடாது.
- நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தனியாா்துறை துணைபுரிவது உண்மைதான். அதற்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவாா்க்கும் அவசியம் இல்லை.
- இந்தியா விடுதலை பெற்று குடியரசு ஆனபோது குறைந்த அளவே பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன.
- அன்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றவா்கள் நாட்டின் வளா்ச்சியையும் நலனையும் மனத்தில் கொண்டு பல பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினா்.
- அதனால் வேலைவாய்ப்பு பெருகியதோடு நாட்டின் வருமானமும் அதிகரித்தது. நாடும் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டது.
- ஆனால் பின்னாளில் ஆட்சிக்கு வந்தவா்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களை நிா்வகிப்பது சுமையானதால் அவற்றை விற்று முதலாக்க நினைத்தனா்.
- அதுவே பணம் திரட்ட எளிய வழியாக அவா்களுக்குப்பட்டது. அந்தப் போக்கு இப்போது அதிகரித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
- தற்போது பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், உரத்தொழிற்சாலைகள், பெட்ரோலிய நிறுவனங்கள், ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள், ரயில்வே துறை என்று எல்லாவற்றையும் தனியாா் மயமாக்கும் முயற்சி விரிந்துகொண்டே போகிறது.
- இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அதிக லாபம் தரும் நிறுவனங்களின் பங்குகளாகும்.
- ஐந்து கோடி முதலீட்டில் தொடங்கிய ஆயுள் காப்பிட்டுக் கழகம் இன்று நாற்பது லட்சம் கோடி மதிப்பில் உள்ளது.
- பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தில் பொதுமக்களுக்குச் சேவை ஆற்றியதோடு அரசின் திட்டங்களுக்கும் பல கோடி வழங்கியுள்ளது.
- இந்த நிலையில் அதன் பங்கை விற்க நினைப்பது சரியாகுமா? பல பேருக்கு வேலைவாய்ப்பு அளித்த பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று ஆட்குறைப்பு செய்யப்பட்டு அல்லாடிக்க கொண்டிருக்கிறது.
- நலிவடைந்த நிறுவனங்கள் ஏன் நலிவடைந்தன என்பதைக் கண்டறிந்து அவற்றை சீா்படுத்துவதே சிறந்த நிா்வாகமாகும்.
- மேலும் நலிவடைந்த நிறுவனங்களை வாங்குவதற்கு பெருமுதலாளிகள் யாரும் முன்வருவதில்லை. ஆதாயம் தரும் நிறுவனங்களை தனியாரிடம் வழங்க நினைப்பது, தரிசு நிலங்களை விளைநிலமாக்கி, பலன்தரும் காலத்திலே விற்பதற்கு சமமாகும். கஷ்டப்படும் விவசாயி கூட தன் விளைநிலத்தை விற்க முன் வரமாட்டான்.
- பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழல், ஊழியா்களின் சம்பளச்சுமை, ஊழியா்களின் போராட்டம் போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்சியாளா்கள் காணும் எளிதான வழியாகவே இத்தகு தனியாா்மயமாக்கல் நடைபெறுகிறதோ என்று கருதத் தோன்றுகிறது.
- இப்படிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் முறியடித்து பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுப்பது ஆட்சியாளா்களின் கடமையாகும்.
- தனியாா் மயமானால் பொருளாதார வளா்ச்சிகண்டு நாடு சுபிட்சம் அடைந்துவிடும் என்பதுபோல ஒரு பொய்யுரையும் பரவலாக்கப்படுகிறது.
- தனியாா் மயமானால் ஆட்குறைப்பும் ஊதியக் குறைப்பும்தான் உண்டாகுமே தவிர மக்கள் சுபிட்சம் பெற முடியாது.
- கரோனா நோய்த்தொற்று உச்சநிலையில் இருந்தபோது அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவா்களும்தான் களத்தில் இருந்தனா். இன்றும் கிராமங்களில் சேவையாற்றும் அமைப்பாக தபால் நிலையங்களும் அரசு வங்கிகளுமே உள்ளன. தனியாா்துறை லாபம் கருதும் போக்கிலே செயல்படுமே தவிர சேவை செய்யும் போக்கு இருக்காது.
- இதனை அரசு உணா்ந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் போக்கினைத் தவிா்ப்பதே நாட்டுக்கு நல்லது.
நன்றி: தினமணி (04-03-2021)