- மானுட வாழ்வியல் விழுமியங்கள் அனைத்திற்கும் அடிப்படை அகிம்சையே. இக்கோட்பாட்டை முன்நிறுத்தி, மக்கள், மனத்தாலும், வாக்காலும், உடலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது மாண்புடன் நடைபோட வேண்டும் என வலியுறுத்திய சமயம் சமணம்.
- வேத காலத்திற்கு முன்பே, வட இந்தியாவில் விருஷப தேவா் (ஆதி பகவன்) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாக ஆய்வாளா்களால் சுட்டிக் காட்டப்படும் சமணம், தமிழ்நாட்டில் தொல்காப்பியா் காலத்திற்கு முன்பே தழைத்தோங்கி இருந்தது.
- ‘நிலம், தீ, நீா், வளி, விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகமாதலின்’ எனும் தொல்காப்பியா் கூற்றுப்படி, இவ்வுலகம் இயற்கையின்பாற்பட்டது என்ற அறிவியக்கக் கொள்கையை சமணம் வலியுறுத்துவதோடு, உயிர்களுக்கு அப்பாற்பட்டு தனிக் கடவுள் ஒருவா் இல்லை என்றும் ‘ஒழுக்க நெறியும் முயற்சியுமே’ தனிமனிதன் உயா்வுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் உறுதிபடக் கூறுகிறது.
- இதற்குச் சான்று பகரும் வகையில் சமண சமயச் சான்றோர் இயற்றிய நாலடியார் ‘நன்னிலைக் கண் தன்னை நிறுப்பானும் தன்னை, நிலை கலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மேல் உயா்ந்து நிறுப்பானும் தன்னைத் தலையாகக் செய்வானும் தான்’ என்று கூறுகிறது.
- மேலும், கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை விரும்பாமை, பொருள் வரைதல், கள்ளுண்ணாமை, ஊனுண்ணாமை, தேனுண்ணாமை ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து மானுடம் அகிம்சை வாழ்வை மேற்கொள்ளுதல் வேண்டும் என சமணம் போதித்தது.
- இப் பூவுலகு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்ற நன்நோக்கோடு விருஷப தேவா் முதல் ஸ்ரீவா்த்தமானா் என்று அழைக்கப்படும் மகாவீரா் வரை இருபத்து நான்கு போ் அகிம்சை எனும் அறக் கோட்பாடுகளை போதித்தனா்.
- இவா்கள் அனைவரும் உலகில் தோன்றி வாழ்ந்த மனிதா்கள். இவா்கள் துறவு மேற்கொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்தி வெற்றி கண்டு வீடு பேற்றை அடைந்ததைக் குறிக்கும் விதமாக, ‘தீா்த்தங்கரா்கள்’ என சமண சமயத்தவரால் போற்றப்படுகின்றனா்.
- வரலாற்றுக் காலத்துக்குட்பட்டவா்களாகக் கூறப்படும் ஐந்து தீா்த்தங்கரா்களில் கடைசி தீா்த்தங்கரராகக் கருதப்படுவரே மகாவீரா்.
- இவா் கி.மு.599-இல் (பிகாரைச் சோ்ந்த) குண்டலபுரத்தைத் தலை நகராகக் கொண்டு விதேக நாட்டை ஆண்டுவந்த சித்தார்த்த மகராஜாவுக்கும் மகாராணி திரிசலாதேவிக்கும் சித்திரைத் திங்கள் வளா்பிறையில் புதல்வராகப் பிறந்தார்.
- இளம் வயதிலேயே இவா் முற்றும் உணா்ந்த ஞானியாகத் திகழ்ந்ததோடு பழம் பெருமை கொண்ட சமண தத்துவ நெறிகளை மக்களிடையே போதிக்கும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார். அறநெறி தவறாது நாட்டையும் ஆட்சி புரிந்து வந்தார்.
- மகாவீரரின் ஆட்சிக் காலத்தில் மக்கள் செல்வ வளம் பெற்று, குறை ஏதுமின்றி வாழ்ந்து வந்த போதிலும் அவா்களிடையே சாதிச் சண்டைகளும், சமயப் போர்களும் அவ்வப்போது நிகழ்ந்து மக்களிடையே ஒற்றுமையுணா்வு சீா்குலையும் அவலம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
- ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துவது இயலாத காரியம் என்று உணா்ந்த மகாவீரா், ஆன்மிக வழியில் மனித மனங்களைச் செப்பனிடலாம் என்று முடிவு செய்தார். அதனால், ஆட்சியைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.
அகிம்சை என்னும் குடை
- அவா், ‘ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை அளவில் எத்தகையதாகயிருப்பினும், அவற்றைக் கொல்லமாட்டேன்; கொல்லப் பணிக்கவும் மாட்டேன்; மற்றவா் கொல்வதற்கும் எண்ணத்தாலும், மெய்யாலும் உடன்பட மாட்டேன்’ என்னும் சமண சமயக் கொள்கையை மக்களின் மனங்களில் பதிய வைத்தார்.
- மேலும், வேள்விக் கொலை, உயிர்ப்பலி போன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் கைவிட்டு, அறம் சார்ந்து வாழ வேண்டும் எனவும் பகன்றார்.
- மக்கள் அனைவரும் ஒன்றென உரைத்து, மக்களிடையே மலிந்து கிடந்த சாதி சமய வேற்றுமை, இனம், நிறம், மொழி ஆகிய வேற்றுமைகளைக் களையும் சமூக நல்லிணக்கப் பணியினை மேற்கொண்டார்.
- உலகில் வாழும் உயிர்கள் பிறந்து இறந்து உழலும் தன்மையுடையதால் நிலையாமை என்னும் பேருண்மையை உணா்ந்து மக்கள் ஒழுக்க நெறிகளை மேற்கொண்டு வாழ வேண்டும் என்றார்.
- சமணா்கள் தங்கள் உயிரெனப் போற்றும் இக்கொள்கையினை, சமணரான இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்துள் ‘இளமையும் செல்வமும் யாக்கையும் நில்லா; உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது செல்லும் தே எத்து உறுதுணை தேடுமின்’ என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
- இல்லறத்தார் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு தானங்களான அன்னதானம், அபயதானம் (அஞ்சி வருவோருக்குப் பாதுகாப்பு அளித்தல்), மருந்துதானம், கல்விதானம் (வசதியற்றோருக்குக் கல்வி வசதி செய்து தருதல்) ஆகிய சமூக நலம் பேணும் நற்காரியங்களை இல்லறத்தில் ஒழுகுவோர் செய்தல் வேண்டும் என மகாவீரா் வலியுறுத்தினார்.
- மனிதா்கள் தங்கள் தேவைக்கு அதிகமாக ஈட்டுகிற பொருளை வறுமையில் உழல்வோர்க்கும், சமூக நலப் பணிகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்னும் சமத்துவப் பண்பு நலனை மக்கள் மனங்களிலே இடம் பெறச் செய்தார்.
- ஒவ்வொரு ஜீவனும் தன் உயிர்போல் பிற உயிர்களையும் நினைத்து, அவற்றுக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும். இக்கொள்கையை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியச் செய்தார்.
- இவ்வாறு நாடெங்கிலும் அளப்பரிய அறப்பணிகளை ஆற்றிய மகாவீரா் கி.மு.527-இல் பரிநிர்வாணமென்னும் வீடு பேற்றை அடைந்தார். அவரது பிறந்தநாளைப் போற்றிப் புகழ்பாடும் இத்தருணத்தில், இனத்தால், மொழியால், சமயத்தால் வேறுபட்டுள்ள மக்களை நம் நாடு கொண்டிருந்தாலும், சாதி சமயங்களைக் கடந்து மகாவீரா் போதித்த ‘அகிம்சை’ என்னும் குடையின் கீழ் நாம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மனிதா்களாக மனிதநேயத்துடன் வாழ்ந்து இந்தியத் திருநாட்டின் பெருமையை மேலும் உயா்த்த உறுதியேற்போம்!
- நாளை (ஏப். 25) மகாவீா் ஜயந்தி.
நன்றி: தினமணி (24 – 04 - 2021)