TNPSC Thervupettagam

தப்பிக்க முடியாத வாழ்நாள் தண்டனை?

June 23 , 2024 8 days 31 0
  • நாம் உலக அளவில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கு இன்னும் 134 ஆண்டுகள் ஆகும் என உலகப் பொருளாதார மன்றம் அறிவித்திருக்கிறது. ஆணுக்கு நிகராகக் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டுவிட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் இந்நாளில் பாலின இடைவெளியை 64.1% மட்டுமே கடந்திருக்கிறோம். இந்த நிதர்சனத்தின் பின்னணியில் இருந்து பார்த்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? அதன் சிறுதுளியை பிரிட்டன் எழுத்தாளர் மோனிகா ஃபெல்டன் பதிவுசெய்திருக்கிறார்.
  • அன்றைய மதராஸ் மாகாணத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்த அவர், ஆர்.எஸ். சுப்பலட்சுமியைச் சந்தித்து அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்திருக்கிறார். ‘A child widow’s story’ என்கிற தலைப்பில் 1967இல் வெளியான அந்தப் புத்தகம், அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுச் சமையலறைக்குள் முடக்கப்படுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கொண்ட இளம் கைம்பெண், சமூகச் சீர்திருத்தவாதியாக பரிணமித்த நெடும்பயணத்தைச் சொல்கிறது.

முதல் மாணவி

  • சுப்புலட்சுமி என்றதுமே இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியை நினைத்துக்கொள்ளும் பலரும் ஆர்.எஸ். சுப்பலட்சுமியை அறிந்திருக்கச் சாத்தியமில்லை. ஆனால், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அசாத்திய வாழ்க்கை அவருடையது. ‘சகோதரி’ சுப்பலட்சுமி என்கிற அடையாளத்தை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை. சுப்பலட்சுமியின் பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் ரிஷியூர் என்றாலும் அவர் மதராஸ் மாகாணத்தில் 1886ஆம் ஆண்டு பிறந்தார். சுப்பலட்சுமியின் அம்மா விலாலாட்சி தலைப் பிரசவத்துக்காகத் தன் தாய்வீடான மயிலாப்பூருக்கு வந்தார். பிரசவத்தில் சிக்கல். மருத்துவரை அழைப்பதற்கு விசாலாட்சி சம்மதிக்கவில்லை. அந்நிய ஆண் ஒருவர் தன்னைத் தொட்டு சிகிச்சையளிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவரது நல்ல நேரம் அப்போது மதராஸில் மருத்துவராக இருந்த ஐரோப்பியப் பெண் மருத்துவரான ஷார்லீப் விசாலாட்சிக்குப் பிரசவம் பார்த்தார். மருத்துவக் கருவி உதவியோடு சுப்பலட்சுமி பிறந்து அவர்களது வீடுகளில் அன்றைக்குப் பெரிதாகப் பேசப்பட்டது.
  • சுப்பலட்சுமியின் அப்பா சுப்பிர மணிய ஐயர், மதராஸ் மாகாணத்தில் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். மூன்று வயது சுப்பலட்சுமியைச் சுற்றத்தாரின் ஏச்சையும் பேச்சையும் மீறிப் பள்ளியில் சேர்த் தார். அங்கே இரண்டு ஆண்டுகள் படித்த சுப்பலட்சுமி பிறகு தங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். ஒன்பது வயதில் நான்காம் வகுப்புப் பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேறினார்.

சிறுமிக்கு நேர்ந்த துயரம்

  • முதல் மதிப்பெண் எடுத்தவருக்குத் திருமணமே பரிசாகக் காத்திருந்தது. வரதட்சிணைக்கு ஏற்ற வரன் தேட இரண்டு ஆண்டுகள் ஓடின. யாரென்றே அறியாத சிறுவனுடன் 11 வயதில் சுப்பலட்சுமிக்குத் திருமணம். தன்னை மணக்கவிருக்கிறவன் உயரமா – குள்ளமா, கறுப்பா – சிவப்பா என எதையும் சுப்பலட்சுமி கவனிக்கவில்லை. தான் உடுத்தியிருந்த பனாரஸ் பட்டுப்புடவை மட்டுமே அந்தச் சிறுமியின் மகிழ்ச்சிக்குக் காரணம். இனி விழாக்களுக்குச் செல்லும்போது அதை உடுத்திச் செல்லலாமே! ஆனால், காலம் வேறொரு கணக்கை வைத்திருந்தது.
  • திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே அந்தச் செய்தி சுப்பலட்சுமியின் குடும்பத்தை எட்டியது. மாப்பிள்ளை மாண்டுபோன துயரச் செய்தியை மகளிடமிருந்து மறைக்க நினைத்தனர் சுப்பலட்சுமியின் குடும்பத்தினர். இந்தத் துயரை அந்தச் சிறு குழந்தை எப்படித் தாங்குவாள் என்பதுதான் அவர்களது கவலை. 11 வயதில் கைம்மைக்கோலமா என அவர்கள் கலங்கினர். பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்த சிறுமிக்குக் கிடைத்த தப்பிக்கவே முடியாத தண்டனை அது. அந்நாளில் கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு வேறொரு திருமணம் கிடையாது. அவர்களால் மனைவியாக முடியாது, தயாக முடியாது. வாழ்க்கையின் மிகச் சாதாரண மகிழ்ச்சிகூட அவர்களுக்கு மறுக்கப்படும். எந்தவொரு விழாவிலும் பங்கேற்க முடியாது. சுப்பலட்சுமிக்கும் அந்த நிலை நேர்ந்துவிடுமோ எனக் குடும்பமே கலங்கியது. அவள் சிறுபெண்ணாக இருப்பதால் எந்தச் சடங்கையும் செய்ய வில்லை. அவள் பருவமடைந்த பிறகு அவளது கூந்தல் மழிக்கப்பட்டுப் பருத்திப் புடவைக்குள் அந்தச் சிறுமி சிறைபுகுவதைக் கல்வியறிவு பெற்றிருந்த அந்தத் தம்பதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சித்திக்கு என்ன ஆச்சு?

  • அந்த வீட்டில் சுப்பலட்சுமி குறித்து அவளுடைய பெற்றோரைப் போலவே அக்கறை கொண்ட இன்னொரு உறவும் இருந்தது. அவர் சுப்பலட்சுமியின் சித்தி. மதுரையில் உறவினர் வீட்டில் தங்கி சில மாதங்கள் படித்துவிட்டு அப்போதுதான் சென்னை திரும்பியிருந்தாள் சிறுமி சுப்பலட்சுமி. சைதாப்பேட்டையில் வழக்கறிஞர் சதாசிவத்தின் திருமணத்துக்குச் சென்றிந்தபோதுதான் சுப்பலட்சுமிக்கு முதல் முறையாக அந்தக் கேள்வி தோன்றியது. சதாசிவத்தின் மனைவி உடுத்தியிருந்த புடவையின் அழகில் லயித்திருந்த அவர், பலரும் தன் சித்தியைப் பார்ப்பதையே தவிர்ப்பதைக் கவனித்தார். அம்மாவும் மற்ற உறவினர்களும் பல வண்ணப் பட்டுப்புடவைகளை உடுத்தியிருக்க சித்தி மட்டும் ஏன் வெள்ளைநிறப் புடவையை அணிந்திருக்கிறார் எனத் தோன்றியது. பாட்டியும் அப்படித்தான் உடுத்தியிருந்தார் என்றாலும் அவருக்கு வயதாகிவிட்டது. ஆனால், சித்தி அப்படியில்லையே. இளமையும் அழகும் நிறைந்த அந்த முகம் ஏன் முக்காடு அணிந்திருக்க வேண்டும்? தன் நீண்ட கூந்தலை அம்மா கொண்டைபோட்டு பூ வைத்திருக்கிறாரே, சித்திக்குத் தலைமுடி இருக்குமா? அடுக்கடுக்கான கேள்விகள். அவற்றை அம்மாவிடம் கேட்டபோது அதுவரை ஒருமுறைகூட அழுது பார்த்திராத அம்மா அன்று வெடித்து அழுதுவிட்டார். ஏன்?

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்