தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: முடிவுக்கு வருவது எப்போது?
- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும் அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்கதையாகவே நீடிப்பது வேதனை அளிக்கிறது.
- தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் நீரிணையை ஒட்டி மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், சர்வதேசக் கடல் எல்லைக் கோட்டைத் தாண்டுவதாகவும், இலங்கைக்குரிய கடல் பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதாகவும் இலங்கை அரசால் குற்றம்சாட்டப்படுகின்றனர். இதன் பின்னே சிக்கலான வரலாறு இருப்பதை மறுக்க முடியாது.
- இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவு, 1974இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. அதேவேளையில், இரு நாட்டு மீனவர்களும் பாக் நீரிணை பகுதியில் அதுவரை அனுபவித்துவந்த பாரம்பரிய உரிமைகளைத் தொடரலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. எனினும், ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட தொடக்க நாள்களிலேயே, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டனர்.
- தமிழகம் முறையிட்டதையடுத்து, 1976இல் இன்னொரு ஒப்பந்தம் போடப்பட்டு, அதுவரை இலங்கை வசம் இருந்த வாட்ஜ் கடற்கரை இந்தியாவுக்கு உரியதாக ஆக்கப்பட்டது. இந்த வரலாற்றையெல்லாம் இலங்கை மறந்துவிட்டதோ என வருந்துமளவுக்கு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.
- அக்டோபர் 27 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை பகுதியில் கைது செய்யப்பட்டனர். அதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 2024இல் அக்டோபர் இறுதிவரைக்கும் 462 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 140 மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; 200 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் அடிக்கடி நிகழ்கிறது.
- இலங்கை அரசியல்நோக்கிலும் பொருளாதார நோக்கிலும் கடும் சவால்களைச் சந்தித்தபோதெல்லாம், இந்தியாவின் துணையுடன்தான் அவற்றிலிருந்து மீண்டுவந்தது. 2022இல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்தபோது, இந்தியா நிதியுதவி செய்தது. குறிப்பாகத் தமிழக அரசு அரிசி, மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்துத் தனது நட்பை உறுதிசெய்தது.
- இவ்வளவுக்குப் பிறகும், இலங்கை அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மிகக் கடுமையாக நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. அண்மையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் 5 பேர் அபராதம் செலுத்தத் தாமதமானதால், சிறை நிர்வாகம் தங்களது தலைமுடியை மழித்து அவமானப்படுத்தியதாக அவர்கள் கூறினர். வெளியில் சொல்ல முடியாத பல சித்திரவதைகள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.
- பாக் நீரிணை பகுதி, அளவுக்கு அதிகமான மீன்பிடிச் செயல்பாடுகளால் வளம் அற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுவதும் இந்த விவகாரத்தில் கவனிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதாகவும் இழுவை வலைகள் கடலின் தரைமட்டத்திலிருந்தே மீன்களைப் பிடிக்கும் திறனைக் கொண்டிருப்பதால், தங்கள் வாழ்வாதாரத்தைத் தமிழகம் பறிப்பதாக இலங்கை மீனவ அமைப்புகள் விமர்சித்துவருகின்றன. இதில் நியாயம் இருப்பின், தமிழக மீனவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.
- அக்டோபர் 29இல் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கான இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கொழும்பு நகரில் கூடிப் பேசியது. அப்போது, தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் மீன்பிடி படகுகள் உள்ளிட்ட உடைமைகளை ஒப்படைக்கவும் இந்தியத் தூதர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் உரிமைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார். மீனவர்களின் நலன்கள் காக்கப்படுவதை இந்நடவடிக்கைகள் உறுதி செய்யட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2024)