TNPSC Thervupettagam

தமிழகத்தின் பிஹார் உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்

March 20 , 2022 870 days 492 0
  • நமது சிந்தனைகளும் கனவுகளும் குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நாம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் மனநிலையைத் தவிர்ப்போம். வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக நம்முடைய இலக்குகளை நிர்ணயித்துப் பயணிக்க வேண்டும்! - இது சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துத் துறைச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய உரையில் ஒரு முக்கியமான பகுதி. 
  • முதல்வரின் பேச்சு உண்மை, பேசிய இடமும் மிகச் சரியானது. ஆனால், இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் வளர்ந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே ஐரோப்பாவோடு ஒப்பிடத்தக்க மாவட்டங்களும் ஆப்பிரிக்காவோடு ஒப்பிடத்தக்க மாவட்டங்களும் இருக்கின்றன.  

இருவேறு தமிழகம்

  • ஐக்கிய நாடுகளின் அவையினால் ஏற்படுத்தப்பட்ட மனித வள மேம்பாட்டு குறியீட்டின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரமானது அளவிடப்படுகிறது. இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மனித உரிமைகள் (முக்கியமாக பெண்கள், குழந்தைகள் உரிமை), முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்கிக் கணிக்கப்படுகின்றது.  
  • அதனடிப்படையில் தமிழகத்தின் சராசரி மனித வள மேம்பாட்டு குறியீடு 0.708 என்று தமிழகத் திட்டக் குழு 2017ஆம் ஆண்டு கணக்கிட்டுள்ளது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால்அபாயகரமான ஓர் ஏற்றத்தாழ்வு நம்  தமிழகத்துக்குள்ளேயே இருப்பது இந்த ஆய்வின் வழி மேலும் ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகிறது.
  • இந்தக் குறியீட்டில் கன்னியாகுமரி (0.944), விருதுநகர் (0.855), தூத்துக்குடி (0.852), சென்னை (0.847), காஞ்சிபுரம் (0.845), கோயம்புத்தூர் (0.844), திருநெல்வேலி (0.802), திருவள்ளூர் (0.801) போன்ற மாவட்டங்கள் ஐரோப்பிய மற்றும் வளர்ந்த நாடுகளின் அளவுக்குச் சிறந்து விளங்குகின்றன. சென்னை, கோயம்புத்தூரில் வாழ்பவர்கள் அதிக தனி நபர் வருமானமும், நீண்ட ஆயுளும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எழுத்தறிவும் நீண்ட ஆயுளும் இருக்கிறது. 
  • நாகப்பட்டினம் (0.601), திருவண்ணாமலை (0.596), திருவாரூர் (0.568), விழுப்புரம் (0.561), தேனி (0.539), பெரம்பலூர் (0.447), அரியலூர் (0.282) போன்ற மாவட்டங்களின் மனிதவளக் குறியீடு பாகிஸ்தான், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இணையாக மட்டுமே உள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி, வாழ்க்கைத்தரம், தனி நபர் வருமானம் எல்லாமே ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்பு வந்த அறிக்கையின்படி புதுக்கோட்டையும் தர்மபுரியும்கூட பின்தங்கிய நிலையிலேயே இருந்தன.
  • பாலினச் சமத்துவ குறியீட்டிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சிறப்பாகவும், தருமபுரி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்கள் பின்தங்கியும் உள்ளதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் குழந்தைகள் வளர்ச்சிக் குறியீட்டில் சிறந்து விளங்குகின்றன. ராமநாதபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.
  • பல பரிமாண வறுமைக் குறியீட்டு எண்ணின்படி காஞ்சிபுரம், சென்னை, கடலூர், கோவை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் வளமாகவும் (தமிழகத்தின் முதல் 5 இடங்களில் உள்ள மாவட்டங்கள்), அரியலூர், விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், தர்மபுரி மாவட்டங்கள் வறுமையிலும் (பட்டியலில் கடைசி 5 மாவட்டங்கள்) உள்ளன. ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்கள் சில பிஹார் மாவட்டங்களைவிடவும் பின்தங்கியுள்ளன.
  • தேனி, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களின் மனிதவளக் குறியீடு பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாகவே மட்டுமே இருக்கிறது. சில மாவட்டங்களோ வளர்ச்சியில் உத்தர பிரதேசம், பிஹார் அளவுக்குப் பின்தங்கியிருக்கின்றன. 

புறக்கணிக்கப்படும் விவகாரம்

  • பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டுவந்தாலும், இந்த விவகாரம் உரிய கவனம் அளிக்கப்படாமல்  புறக்கணிக்கப்பட்டேவருகிறது. 
  • தமிழகத்தின் சில மாவட்டங்கள் மட்டும் தொழில் துறை சார்ந்தவையாகவும், பல மாவட்டங்கள் இன்னும் வேளாண்மையை மட்டுமே நம்பியிருப்பவையாகவும் இருக்கின்றன. வெளிநாட்டு முதலீடுகளை நாம் எவ்வளவு ஈர்த்தாலும், அந்த மூலதனமானது தொழில் துறையில் வளர்ச்சியடைந்த மாவட்டங்களுக்கே மீண்டும் செல்கின்றன.
  • வேலைவாய்ப்பும் சமூக வளர்ச்சியும் அங்கு மேலும் அதிகரிக்கின்றது. சேவைகள் சார்ந்த துறையும் அங்கு சிறப்பாக வளர்கின்றது. குறிப்பாக மனிதவள மேம்பாடு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, வங்கி, நிதி சேவைகள் போன்றவையும் சிறந்து விளங்குகின்றன. அங்குள்ள கிராமங்களும் நகரங்களும் சாலைப் போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. இது வறுமையை ஒழித்து பொருளாதார வளர்ச்சியில் அந்த மாவட்டங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னிறுத்தியுள்ளது.
  • இங்கே அழுகிற குழந்தைகளுக்குத்தான் பால் கிடைக்கிறது. பலவீனமான குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எப்படி அரசின் கடமையோ, அதேபோல வளர்ச்சியில்லா பகுதியின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதுவும் அரசின் வேலைதான்.
  • நாட்டின் வளங்களைத் தேவைக்கேற்ப பங்கிட்டு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தொழில், கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, அனைவரும் சமமாக வளர்வதற்கான பொருளாதார வாய்ப்புகளைப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலும் உருவாக்கித்தருவது நல்லாட்சியின் கூறுகளில் ஒன்று. பின்தங்கிய மாநிலமும், மாவட்டங்களும் சீரான வளர்ச்சியடைய அரசின் போதுமான நிதி ஒதுக்கீடும் சரியான கொள்கை முடிவும் தேவை. 

சீரான வளர்ச்சியின் முக்கியத்துவம்

  • சீரான பொருளாதார வளர்ச்சியே சமூகநீதியை நிலைநாட்டும். இல்லையெனில், சில மாவட்டங்கள் பொருளாதார, சமூகக் கட்டமைப்பு வசதிகளில் ஏற்றம் பெறும், பல மாவட்டங்கள் வீழ்ச்சியடையும்; அப்பகுதி மக்களின் வளர்ச்சியும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதனால் உள்நாட்டு புலம்பெயர்தலும் நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதுவும் அதிகரிக்கும். இறுதியில் மாநிலத்திற்குள்ளேயே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் அமைதியின்மையை உண்டாக்கக்கூடும்.
  • மாவட்டங்களுக்கிடையே சமச்சீரற்ற வளர்ச்சி ஏற்படுவதற்கு வரலாற்றுரீதியான ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அமைப்பு சார்ந்த காரணங்கள், கனிம வளம், மாவட்டம் அமைந்துள்ள இடம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேகம், மக்களின் ஒத்துழைப்பு, கல்வி, சுகாதார வசதிகள், தொழில் முதலீடுகள் போன்றவை காரணிகளாக அமைகின்றன.
  • இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அரசு திட்டமிட வேண்டும். வளர்ச்சிக்கான திட்ட ஒதுக்கீடுகளும் அவ்வாறே அமைய வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை. 
  • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும்கூட தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இடையில் சமச்சீரான வளர்ச்சி இல்லை. இந்தியாவின் நிலையைப் பார்த்து அன்று அண்ணா சொன்னாரே, “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!” என்று அதேபோல இன்று தமிழகத்தில், “மேற்கு வாழ்கிறது; ஏனையவை தேய்கின்றன.”

குழுமிய விளைவுக் கோட்பாடு சொல்வது என்ன?

  • குழுமிய விளைவுக் கோட்பாட்டின்படி (Cumulative causation theory-Gunnar Myrdal -1956 Swedish economist), ஒரு பகுதியில் ஒரு நிறுவனத்தில் ஏற்படும் மாற்றமானது தொடர்ந்து பல நிறுவனங்களிலும் ஏற்படும். இந்த மாற்றங்கள் தொடர் நிகழ்வுகளாகவும் சுழற்சி முறையிலும் இருக்கும். இந்த மாற்றங்கள் மிக வேகமாக எதிர்மறை விளைவுகளையும் குழப்பங்களையும் உண்டாக்கும். இதனால் வளர்ச்சியடைந்த பகுதிகள் மீண்டும் வளர்ச்சிப்பெறும் பின்தங்கிய பகுதிகள் தொடர்ந்து வீழ்ச்சிக்குள்ளாகும்.
  • ஓர் எடுத்துக்காட்டாக, புதிய இடத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலையானது மற்ற தொழிற்சாலைகள் வளரவும் வேலைவாய்ப்பு பெருகவும் கல்வி சுகாதார வசதிகள் அப்பகுதிகளில் அதிகரிக்கவும் வழிவகுக்கும். பிறகு அங்கும் முதலீடு வரத்தொடங்கும். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பகுதி வளர்ச்சியடைய உதவும். தொழிற்சாலை இல்லாத இடம் மேலும் தேக்கத்தை அடையும்.
  • சந்தைப் பொருளாதார வளர்ச்சியை, அரசின் கொள்கைகள் சரியான முறையில் ஒழுங்குப்படுத்த வேண்டும். இல்லையெனில், வளரும் பொருளாதாரத்தில் தொழிற்சாலை உற்பத்தி, வணிகம், வங்கிகள், காப்பீடு, ஏற்றுமதி-இறக்குமதி போன்ற நடவடிக்கைகள் குறிப்பிட்ட மாவட்டங்களிலேயே அதிக லாபத்தை ஈட்டித்தரும். அத்துடன் அறிவியல், கலை, இலக்கியம், உயர்கல்வி போன்றவையும் அங்கு வளர்ச்சி பெறும். மற்ற மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்துவிடும்.
  • வேளாண்மை சார்ந்திருக்கும் மக்கள் வறுமையில் இருப்பார்கள் என தியோடர் சுல்ட்ஸ் (Theodore Schultz-1971) எனும் நோபல் பரிசுப்பெற்ற விஞ்ஞானி கூறுகிறார். வறுமையும் வேளாண்மையும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். வேளாண் வளர்ச்சியானது உரம், பூச்சி மருந்து, விதை உற்பத்திக்கு மட்டுமே வழிவகை செய்கிறது. தமிழகத்தில் வேளாண்மையையும் வேளாண் சார்ந்த தொழில்களையும் மட்டுமே நம்பி டெல்டா மாவட்டங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியும் சேவைகள் சார்ந்த வளர்ச்சியும் கிடையாது. தனி நபர் ஆண்டு வருமானமும் மிகக் குறைவு.
  • தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் வறட்சியினால் தொடர்ந்து வறுமையில் உள்ளன. இங்கு நீர்ப்பாசன வசதிகள் அதிகம் இல்லை. இப்பகுதியில் வேளாண்மையைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு வேறு தொழில் வருமானங்களும் இல்லை. எனவே இப்பகுதியின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்கு அரசின் தனிக்கவனமும் திட்டங்களும் தேவைப்படுகின்றன. இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க வேண்டும் என்கிறார் மதராஸ் பொருளாதார பள்ளியின் இயக்குநர் சண்முகம் (6 மே 2016). இந்த மாவட்டங்களுக்கு வரலாற்றுரீதியாகவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைகளில் வளர்ச்சிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
  • தமிழகம் சமச்சீரான வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், அதற்கான பிரத்யேக முயற்சியை அரசு எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களை வாக்கு வங்கிகளாகவும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் அரசியலுக்காக மீண்டும் அதிக முதலீடுகளின் மூலம் சமாதானப்படுத்த முயல்வதுவும் பிரிவினையையும் அமைதியின்மையையும் உருவாக்கவே வழிவகுக்கும்.  

என்னவெல்லாம் பிரச்சினைகள்?

  • முதலாவதாக, தொழில் துறை வளர்ச்சிக்காக பொருளாதார, புவியியல் எல்லைகளை அரசு மாற்றியமைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த மாவட்டங்கள் புதிய முதலீடுகளையும் திறன் மிக்க தொழிலாளர்களையும் தொடர்ந்து இழுத்துக்கொண்டிருப்பதால், இளைஞர்களும் படித்தவர்களும் மூளை வலிமையுள்ளவர்களும் அங்கே குடியேறுகிறார்கள்.
  • இதனால் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மனிதவளம் குறைந்துகொண்டேவருகிறது. வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் கச்சாப் பொருட்களை மட்டுமே வழங்குகின்றன. அவை அதிலிருந்து முழுப்பொருட்களையும் உற்பத்தி செய்யவும் முனைவது இல்லை. பிற்படுத்தப்பட்ட மாவட்டங்கள் தொழில், பொருளாதார, சுகாதார, கல்வி குறியீடுகளில் தேக்கமடைகின்றன.
  • வளர்ச்சி அடைந்த பகுதியானது சமூக, அரசியல், பொருளாதார, கல்வி அறிவில் தொடர்ந்து வேகமாக முன்னேறுகின்றது. இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மாவட்டங்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்குகின்றது. ராமநாதபுரம், சிவகங்கையில் முதலீடுகள் அதிகமில்லை. தமிழக அரசின் அறிக்கையின்படி (2010-11) தமிழகத்தில் திருவண்ணாமலை, தேனி, அரியலூர் மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இம்மாவட்டங்கள் மாநில அளவில் 4% நிகர மாவட்ட உள்நாட்டு உற்பத்தியையே (Net District Domestic Product) பங்களிக்கின்றன்.
  • இம்மாவட்டங்களில் தனிநபர் ஆண்டு வருமானமும் மிகக் குறைவாக உள்ளது. இம்மாவட்டங்களில் வங்கிகள் இருந்தாலும் அவைகளிலிருந்து வேளாண்மைக்கு மட்டுமே கடன் பெறப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கோ மற்ற சேவை சார்ந்த பணிகளுக்கும் எவ்விதக் கடன் பெறவும் வாய்ப்பில்லை. பின்தங்கிய மாவட்டங்களில் கல்வி, தனிநபர் வருமானமும் குறைவு. முதலீடுகள் செய்ய வாய்ப்பில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். எனவே அங்குள்ள மக்கள் புலம்பெயர்கிறார்கள். இல்லையெனில் அவர்களின் எதிர்காலமும் மனிதவளம் திறமைகளும் குன்றி வறுமையின் பிடியிலிருந்து வெளிவருவது இயலாத ஒன்றாகும்.
  • இம்மாவட்டங்களில் சிறு குறு தொழில்களின் வளர்ச்சியும் முதலீடுகளும் குறைவாகவே உள்ளது. 2012-13ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் தொழில் தொடங்க பெறப்பட்ட 2139 முன்மொழிவுகளில் இம்மாவட்டங்களிலிருந்து 61 முன்மொழிவுகள் மட்டுமே வந்திருக்கின்றன. அதுவும் வேளாண் சார்ந்த முன்மொழிவுகள்தான். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
  • புதிய தொழில் முதலீட்டு மண்டலங்கள் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை நோக்கி இன்னும் நகரவில்லை. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துவருகின்றன. சென்னை-பெங்களூரூ தொழில் முதலீட்டு மண்டலம் முன்பே நன்கு வளர்ந்துவிட்டது. இங்கு போக்குவரத்து வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், தோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ளன.
  • இங்கு முதலீடுகள் மேலும் அதிகரிப்பது தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து ராணுவப் பாதுகாப்புத் தளவாட தொழில் வளாகம். இது சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு தற்போது ரூ.3,123 கோடி முதலீடுசெய்யப்பட உள்ளது. பெரும்பாலான முதலீடுகள் முன்பே தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நடைபெறுகின்றது. அந்தத் தொழிற்சாலைகளை பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல போதிய முயற்சிகள் இல்லையென்றே தோன்றுகிறது.
  • அடுத்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் முதலீட்டு மண்டலம். இதிலுள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, தென்காசி, தர்மபுரி போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் கிழக்குக் கடற்கரைப் பொருளாதார வளர்ச்சி மண்டலங்களை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு முதலீடுகள் அதிகம் வரவில்லை.
  • கடந்த பத்து ஆண்டுகளில் அரசு ஏறத்தாழ 6.59 லட்சம் கோடிக்கு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அது 18.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் கூறுகின்றது. ஆனால், இவையனைத்தும் சென்னை-பெங்களூரூ தொழில் முதலீட்டு மண்டலத்திற்கும் திருச்சி கரூர் நாமக்கல் சேலம் திருப்பூர் ஈரோடு கோயம்புத்தூர் விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மட்டுமே பயனளித்துக்கொண்டிருக்கிறது.
  • அடுத்ததாக, முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் வளர்ச்சியடைந்த மாவட்டங்களிலேயே புதிய தொழில்களையும் தொடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனை பரவலாக்குவதும், சீர்படுத்துவதுவும் அரசின் கடமையாகும். அது நடக்கவில்லை.
  • கோயம்புத்தூரில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்ட சிறு குறு, நடுத்தர, பெரிய என்று அனைத்துப் பிரிவு தொழில் நிறுவனங்களும் இயங்குகின்றன. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. இருப்பினும் மற்ற பகுதிகளுக்கும் முதலீட்டினை கொண்டு செல்வது அரசின் கடமையேயாகும்.
  • அதேபோல் சென்னையைச் சுற்றியே அனைத்து போக்குவரத்து வாகனங்களின் உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நடைபெறுகிறது. பருத்தி நெய்தலும் ஜவுளி உற்பத்தியும் திருப்பூரை டாலர் நகரமாக மாற்றியுள்ளது. பேருந்து லாரிகளின் கட்டமைப்பும், கொசுவலை உற்பத்தியும் கரூர், நாமக்கல் மாவட்டங்களிலேயே நடைபெறுகிறது.
  • கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நூற்பு ஆலைகள் திறம்பட செய்யப்படுகின்றன. அங்கு மக்கள் தொழில் முனைவோராகவும் இருக்கலாம். இந்த மண்டலங்களில் கடந்த 30-40 ஆண்டுகளாக வளர்ச்சி தெரிகிறது. வருடத்திற்கு 20,000 கோடிக்கு மேல் ஏற்றுமதியும் நடைபெறுகின்றது. முதலீடுகளும் இந்த பகுதிகளில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இது பரவலாக்கப்பட வேண்டும்.
  • அடுத்ததாக, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி மாவட்டங்களிலேயே கனரக வாகன உற்பத்தியும், ராணுவ தளவாடங்கள், விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியும் நடைபெறுகின்றன. ஓசூர், நாகர்கோவில் உறுதுணை உற்பத்தி மையங்களாக உருவெடுக்கின்றன. பிரெஞசு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் விண்வெளித் திட்டத்திற்காக 7,200 கோடிக்கு மேல் சென்னையில் முதலீடுசெய்துள்ளது. கோயம்புத்தூர், சேலம் உறுதுணை நகரங்களாகவும், ராணுவ பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கும் உதவுகின்றன.
  • டாட்டா (டிசிஎஸ்), விப்ரோ, இன்போசிஸ், காசினிசன்ட், அக்ஸ்சென்சர், வெரைசோன் போன்ற அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், மோட்டரோலா, பாக்ஸ்கான், சாம்சங், சோனி-எரிக்ஸன் போன்ற அனைத்து எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் சென்னை, காஞ்சிபுரம், வேலுர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தோல்பொருட்கள் உற்பத்தி ஆண்டிற்கு 30,000 கோடிக்கு மேல் இருக்கும். இதுவும் பரவலாக்கப்பட வேண்டும்.
  • அடுத்ததாக, சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு, தீப்பெட்டி தொழில்களில் சிறந்து விளங்குகின்றது. இதனை லிட்டில் ஜப்பான் என்று அன்றய பிரதமர் ஜவஹர்லால் நேரு அழைத்தார். தூத்துக்குடி உர உற்பத்தியிலும், வேதி பொருட்கள் உற்பத்திகளிலும் சிறந்துள்ளது. அங்குள்ள துறைமுகம் வெளிநாட்டு வணிகத்திற்கு உதவுகிறது. ஆனால் ஒன்றிய மாநில அமைச்சர்கள் பலரை ஆளாக்கிய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இன்னும் போதிய வளர்ச்சியைக் காணவில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

என்னவெல்லாம் செய்யப்பட வேண்டும்?

  • பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அதற்கேற்ப தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கு அரசு முன்னுரிமையும் நிதிநிலை அறிக்கைகளில் தனி நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும். தொழிற்சாலை சமூக பொருளாதார கல்வி சுகாதார வளர்ச்சி குழுமிய விளைவுக்கோட்பாட்டின்படியே அமைந்துள்ளது. அதனைத் தகர்ப்பது அரசின் கடமையாகும். பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், தொழில்முனைவோருக்கு வரி விலக்களித்தல், சிறந்த சாலைப் போக்குவரத்து வசதிகளையும், கல்வி & மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்துதல் போன்றவை அரசின் முக்கியமான கடமையாகும்.
  • கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமேஸ்வரம், திருவாரூர், தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், வேதாரண்யம், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாமலை, பழனி, அரியலூர், பெரம்பலூர் போன்ற இடங்கள் எவ்விதத் தொழில்வளர்ச்சியும் பெறவில்லை. மதச் சுற்றுலா தலங்களாகவே உள்ளன. அதுவும் அனைவருக்கும் பயனளிப்பதில்லை. தமிழகத்தின் தலைநகர் சார்ந்த பகுதிகளும், மேற்கு பகுதிகளும் மட்டுமே வளர்ச்சியடையும்போது, வடக்கு தெற்கு கடலோரப் பகுதிகளும் டெல்டா பகுதிகளும் கோவிலில் மணி அடிப்பதின் மூலம் மட்டுமே வளர்ந்துவிடாது.
  • மாவட்டங்களுக்கு இடையேயான பொருளாதார வளர்ச்சியை சரியாக திட்டமிடல் வேண்டும். அப்போதுதான் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் கட்டமைக்கப்படும். வளர்ச்சியடைந்த மாவட்டங்கள் தங்களின் வலிமையைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அரசின் கொள்கைகள் அழுகின்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அழத் தெரியாதக் குழந்தைகளுக்கும் பாலூட்டுவதாக அமைய வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (20 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்