TNPSC Thervupettagam

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை வேடிக்கை பார்ப்பதா?

December 20 , 2024 4 days 30 0

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை வேடிக்கை பார்ப்பதா?

  • கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்தில் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொட்டிவிட்டுச் செல்லும் விவகாரம் வேதனைக்குரியதாக மாறியுள்ளது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள திருநெல்வேலி, தேனி, கோவை மாவட்டங்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்துள்ளனர். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, கேரளஅரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது முதல்முறை நடக்கும் சம்பவமல்ல என்பதால் இதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது.
  • மருத்துவக் கழிவுகளை தரம்பிரித்து பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டிய பொறுப்பு, அந்த கழிவுகளை உற்பத்தி செய்யும் மருத்துவமனைகளுக்கே உரியது. மருத்துவக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 1998-ன் படி கழிவுகளை பாதுகாப்பாக அழிக்க உரிய மருத்துவமனைகள் கடமைப்பட்டுள்ளன. இந்த விதிப்படி, மருத்துவக் கழிவுகளை, சாதாரண கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என தரம்பிரித்து, சிலவற்றை எரித்து அழிக்க வேண்டும். சிலவற்றை கிருமிகளை நீக்கி அழிக்க வேண்டும். சிலவற்றை மண்ணில் புதைத்து அழிக்க வேண்டும். இதைச்செய்ய வேண்டிய பொறுப்பை கொண்டுள்ள மருத்துவமனைகள், திருட்டுத்தனமாக லாரிகளில் ஏற்றி அண்டை மாநிலத்துக்கு அனுப்பி வைப்பது சட்டவிரோதம் மட்டுமின்றி, சமூகநலன்மீது அக்கறையில்லாத பொறுப்பற்ற செயல்.
  • நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கும்போது, மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான கட்டமைப்புகளை சரிபார்த்த பின்னரே அனுமதி அளிக்கின்றன. அந்த விதிகளை மீறும்போது முதலில் தலையிட்டு கல்லூரி அல்லது மருத்துவமனை நடத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. விதிகளை வகுப்பது மட்டுமே மத்திய அரசின் கடமையல்ல. அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறிந்து, மீறும்போது நடவடிக்கை எடுப்பதும் மத்திய அரசின் கடமை. அதேபோல, கேரள அரசும் இது அண்டை மாநிலத்தின் பிரச்சினை என்பதைப்போல, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டும் காணாமல் இருப்பது பொறுப்பற்ற செயலாகும். தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் விதிகளை மீறும்போது உடனடியாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதுபோன்ற அபாயகரமான, தொற்றுகளை உருவாக்கக்கூடிய மருத்துவக் கழிவுகள் மாநிலத்துக்குள் ஊடுருவுவதை கண்காணிக்கத் தவறும் தமிழக அரசும் குற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் எதற்கு இருக்கின்றன? அவர்கள் கடமையை செய்தார்களா? கடமை தவறியிருந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் உண்டு.

நன்றி: தினமணி (20 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்