TNPSC Thervupettagam

தமிழகமும் சதுரங்கமும் - சதுரங்க வல்லபநாதர் முதல் குகேஷ் வரை..!

December 29 , 2024 15 days 63 0

தமிழகமும் சதுரங்கமும் - சதுரங்க வல்லபநாதர் முதல் குகேஷ் வரை..!

  • சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது. குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
  • அதேபோன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது. பிரதமர் தொடங்கி சினிமாத்துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
  • உண்மையில் இதற்கான விதை எங்கிருந்து தொடங்கப்பட்டது? 2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அது. சென்னையில் வைத்துதான் போட்டி நடக்கிறது. விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக மாக்னஸ் கார்ல்சென் மோதினார். பரபரப்பாக சென்ற அந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான ஆனந்தை வீழ்த்தி கார்ல்சென் வெல்கிறார். முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் கார்ல்சன். இதைத் தொடந்து 5 முறை உலக சாம்பியன் ஆகிறார் மேக்னஸ் கார்ல்சன். இந்த போட்டியை தன் தந்தையுடன் சென்று குகேஷ் நேரில் பார்த்தபோது அவருக்கு 6 வயதுதான். அன்று நடந்த தோல்வியின்போது குகேஷ் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு 2024-ல் மருந்து கிடைத்துள்ளது.
  • 2013-ல் கார்ல்சனிடம் தோற்ற பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்தால் மீட்டெடுக்கவே முடியவில்லை. ஆனாலும் இந்தியாவில் ஆனந்த் விதைத்த விதை ஆலமரமாக விருட்சமடைந்தது. பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி என ஒரு தலைமுறையே உருவாகியது. அதில் முன்னிலையில் இருப்பது குகேஷ்.
  • 18 வயதில் ஒரு வீரர் உலக சாம்பியனாவது அத்தனை எளிதான விஷயமல்ல. 130 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இவ்வளவு இளம் வயதில் எந்த வீரரும் சாம்பியன் ஆனதில்லை. இதற்கு முன் ரஷியாவின் கேரி கேஸ்பரோவ் அனதோலி கார்போவை வீழ்த்தி 22 வயதில் சாம்பியனாகியிருக்கிறார். அந்த சாதனையை குகேஷ் இப்போது முறியடித்திருக்கிறார். ஆனந்த் உலக சாம்பியன் ஆனபோது அவருக்கு வயது 30.
  • குயின்ஸ் கேப்பிட் தொடரில் ஒரு வசனம் வரும் ‘இந்த 64 கட்டங்களுக்குள்தான் அடங்கியிருக்கிறது என் உலகம். என்னால் இந்த உலகத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். என்னால் இங்கே முழுமையாக ஆதிக்கம் செலுத்தவும் முடியும். இங்கே அடுத்து என்ன நடக்கும் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்’ என வரும் வசனத்திற்கு ஏற்ப குகேஷ் மொத்த ஆட்டத்தையும் கட்டுப்படுத்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • ஏனெனில், இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முதலில் கேண்டிடேட்ஸ் சுற்றுக்குத் தகுதிப்பெற்று அதில் வெல்ல வேண்டும். கேண்டிடேட்ஸ் சுற்றில் உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் ஆடுவார்கள். உலகக்கோப்பையை வென்றவர்கள், உலக செஸ் கூட்டமைப்புப் போட்டிகளில் வென்றவர்கள், தரவரிசையின் அடிப்படையில் என பல கூறுகளின் அடிப்படையில்தான் இந்த கேண்டிடேட்ஸில் ஆடும் 8 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குகேஷ் கேண்டிடேட்ஸில் ஆடியபோது அவரோடு ஃபாபியோனா கருணா, ஹிகரு நகமுரா, இயான் நெபோம்னியாச்சி என தலைசிறந்த வீரர்கள் போட்டியிட்டனர்.
  • இன்னொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தாவும் அந்த கேண்டிடேட்ஸில் கலந்துகொண்டிருந்தார். அந்த வீரர்கள் அத்தனை பேரையும்விட சிறப்பாக ஆடி முதலிடத்தை பிடித்துதான் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தார்.
  • இந்தியாவில் மூன்றில் ஒரு கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில்கூட சதுரங்கத்தில் தமிழகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது விஸ்வநாதன் ஆனந்த் காலத்தில் இருந்து தொடங்கியது என்று சிலரும், இமானுவேல் ஆரோன் காலத்திலேயே இந்த ஆதிக்கம் தொடங்கிவிட்டது என சிலரும் கூறுவர். உண்மையாதெனில் தமிழகத்திற்கும் சதுரங்கத்துக்குமான தொடர்பு ஆதி காலம் முதலே தொடங்கிவிட்டது.
  • உலகிலேயே சதுரங்கத்திற்கு கோயில் கட்டிய முதல் மக்கள் தமிழ் மக்கள்தான். அதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது பூவனூர் ‘சதுரங்க வல்லபநாதர்’ கோயில்.
  • முற்காலத்தில் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலியை வசுசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளார். சிவ பக்தனான அவருக்கு குழந்தை செல்வம் இன்றி வருந்தியதாகவும், அவருக்கு கடவுள் பார்வதி குழந்தையாக பிறந்ததாகவும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
  • இதைத்தொடர்ந்து அந்த குழந்தை சகல கலைகளிலும் வல்லவராக திகழ்ந்துள்ளார். குறிப்பாக சதுரங்க ஆட்டத்தில் தன்னை வெல்வார் எவரும் இல்லை என்ற அளவுக்கு திகழ்ந்தார்.
  • மன்னர் வசுசேனன் தன் மகளை சதுரங்கத்தில் வெல்பவர்க்கே மணம் முடிப்பேன் என்று அறிவிப்பை வெளியிட எவராலும் அப்பெண்ணை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. இதையடுத்து சிவபெருமானே, முனிவர் வேடம் பூண்டு சதுரங்கம் ஆடி வெற்றி பெற்று அப்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை நினைவு கூறும்விதமாக இந்த கோயிலைக் கட்டியுள்ளனர்.
  • இவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சதுரங்கத்திற்கும் தமிழர்களுக்குமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால், தமிழகமும், தமிழர்களும் சதுரங்கத்தில் கோலோச்சுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நன்றி: தினமணி (29 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்