TNPSC Thervupettagam

தமிழகம் பேசியது! 2019

December 31 , 2019 1839 days 977 0
  • 2019 இன்றுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அந்த ஆண்டு முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மைல்கல்: கீழடி அகழாய்வு

  • தமிழகத்தில் மிக விரிவான அளவில், ஏறக்குறைய 100 கி.மீ. சுற்றளவில் விரிந்து பரந்த வாழ்விடப் பகுதியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட கீழடி ஆய்வில், தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவந்தன. ‘கீழடி குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற வாழ்விடப் பகுதியாக விளங்கியிருக்கிறது’ என்று கருத இடம் தந்தன இந்தக் கண்டுபிடிப்புகள்.
  • மத்திய தொல்லியல் துறை கைவிட்ட பிறகு மாநில அரசு கையில் எடுத்து வென்று காட்டிய விஷயம் இது என்பது முக்கியமானது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனும், தொல்லியல் துறை ஆணையர் த.உதயசந்திரனும் காட்டிய ஈடுபாடும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டன. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்தும் பார்க்க வேண்டும் என்ற குரல் வலுப்பட கீழடி மேலும் ஆதாரமானது.

ஒரு நெடிய எதிர்ப்பு: இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்

  • இந்தித் திணிப்பை எதிர்த்து இடைவிடாத போராட்டங்கள் நடந்த ஆண்டு இது. புதிய கல்விக் கொள்கை வரைவில் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தி கொண்டுவரப்பட்டது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் எதிர்க்குரல் உயர... மூன்றாவது மொழி என்ற இடத்தில் இந்தி என்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என்பதாக வரைவில் திருத்தம் கொண்டுவந்தது அரசு.
  • அஞ்சல் துறைப் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் மட்டுமே வினாத்தாள் அமையும்; மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படாது என்ற அறிவிப்பு வந்தபோதும் தமிழகம் கடும் எதிர்வினையாற்றியது. தேர்வை ரத்துசெய்வதாக அறிவித்த மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியளித்தது. வருகைப் பதிவுக் கருவிகளில் தகவல்கள் இந்தியில் இடம்பெற்றிருந்தது, செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் முத்திரையில் இந்தி இடம்பெற்றிருப்பது என வெவ்வேறு விஷயங்களில் மொழித் திணிப்புக்கு எதிராகத் தன்னைத் தொடர்ந்து முன்னிறுத்திக்கொண்டது தமிழகம்.

ஒரு சர்ச்சை: திருவள்ளுவர்

  • உலகப் பொதுமறையை வகுத்தளித்தவர் என்று தமிழ் மக்கள் கொண்டாடும் திருவள்ளுவரைக் காவி உடை, நெற்றிப் பட்டை, கழுத்தில் ருத்ராட்சத்தோடு வடிவமைத்து ‘ட்விட்டர்’ படமாக வெளியிட்டு சர்ச்சைத் தீயைக் கொளுத்திப்போட்டது தமிழக பாஜக.
  • வள்ளுவருக்கு மத அடையாளம் ஏன் என்று விமர்சனங்கள் கிளம்ப திராவிட இயக்கத்தினர் – அம்பேத்கரியர்கள் – பொதுவுடைமை இயக்கத்தினர் ஒருபுறமும், இந்துத்துவர்கள் மறுபுறமும் வரிந்து கட்ட பெரும் சர்ச்சை வெடித்தது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளோடு சமணம், பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாமியக் கருத்துகள் ஒப்பிடப்பட்டன.
  • சமயங்களைக் கடந்த உலகப் பொதுமறை திருக்குறள் என்று தமிழறிஞர்கள் வாதிட்டார்கள். இதனூடாகவே ஓரிடத்தில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட அசிங்கமும் நடந்தது. எல்லாம் தாண்டி தமிழகத்தின் அறிவடையாளமாகத் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டார் பேராசான்.

ஒரு பெரும் சவால்: தண்ணீர்ப் பஞ்சம்

  • தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள் தண்ணீரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் அனைத்தும் நீரின்றி வறண்டுபோயின. சென்னையில் மக்கள் குடிநீர் லாரிகளுக்காக இரவும் பகலும் நீண்ட வரிசையில் கால்கடுக்கக் காத்திருந்தார்கள்.
  • ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டன. தமிழக முதல்வரே, இரண்டு வாளித் தண்ணீரில்தான் குளிக்கிறேன் என்று தன்னிலை விளக்கம் அளிக்கிற நிலைக்குத் தள்ளியது தண்ணீர்ப் பஞ்சம். பெருவெள்ளத்தைச் சந்தித்த சில மாதங்களில் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்வது, நீர்ச் சேமிப்பில் அரசுக்குப் பொறுப்பும் மக்களுக்கு விழிப்புணர்வும் இல்லாத நிலையை எடுத்துக்காட்டின. பருவமழையின் வரவால், தற்காலிகமாகத் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்திருக்கிறது. தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோமா? அடுத்துவரவிருக்கும் கோடையில்தான் பதில் தெரியும்.

ஒரு பேரிழப்பு: மகேந்திரன்

  • தமிழ்த் திரைப்படங்களின் உள்ளடக்கம், போக்கில் பெரும் பாய்ச்சலை உண்டாக்கிய இயக்குநர் மகேந்திரன் மறைந்தார். கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என்று பல துறைகளிலும் தனது அழுத்தமான முத்திரைகளைப் பதித்தவர். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ இவரது இயக்கத்தில் ‘உதிரிப்பூக்கள்’ ஆனபோது, தமிழின் தலைசிறந்த படங்களின் வரிசையில் தன்னை அமர்த்திக்கொண்டது.
  • ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ படங்களின் மூலம் ரஜினிக்குள் இருந்த அற்புதமான நடிகரை வெளிக்கொணர்ந்தார். இலக்கியத்துக்கு அப்படியே கலை வடிவம் கொடுக்காமல் திரைத்தன்மைக்கேற்ப அதை மறு-உருவாக்குவதில் வல்லவர் மகேந்திரன். அதேநேரத்தில், தான் உத்வேகம் பெற்ற இலக்கியங்களையும் அவற்றைப் படைத்த எழுத்தாளர்களையும் உரிய கௌரவத்தோடு பெருந்திரளான சினிமா ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
  • உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களும் நிதானமான காட்சி மொழியும் மகேந்திரனின் பலம். தமிழில் இலக்கியமும் சினிமாவும் இணையும் ஆழமான மரபை உருவாக்கிச் சென்றிருப்பவர்.

ஒரு எழுத்தாளுமை: இரா.முத்துநாகு

  • எழுதிய முதல் நாவலிலேயே தமிழ் வாசகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்தார் முத்துநாகு. 18-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைக் கதை நிகழும் களமாகக் கொண்ட அவருடைய ‘சுளுந்தீ’ நாவல், தமிழ் நிலத்தின் பூர்வகுடிகள் வெளியேற்றப்பட்ட கதையை இங்குள்ள பல இனக் குழுக்களின் பண்பாட்டுக் கதைகளுடனும் அவர்கள் கொண்டிருந்த பாரம்பரிய அறிவுடனும் விவரித்தது.
  • தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துநாகு அடிப்படையில் ஒரு தமிழ் ஊடகர். பத்திரிகைப் புகைப்படக்காரராகவும் புலனாய்வுச் செய்தியாளராகவும் பணியாற்றியவர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்த கஞ்சா சாகுபடியை இவர் அம்பலப்படுத்தியபோது கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி, மயிரிழையில் உயிர் பிழைத்தவர். அரசியல் புலனாய்வுச் செய்திகளுக்காகவும் இத்தகையை தாக்குதல்களைப் பல முறை எதிர்கொண்டவர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவர் மேற்கொண்ட விரிவான கள ஆய்வுகளும் வரலாற்று மறுவாசிப்பும் ‘சுளுந்தீ’ நாவலைத் தமிழின் குறிப்பிடத்தக்க புனைவுகளில் ஒன்றாக்கியிருக்கிறது.

ஒரு வைபவம்: அத்திவரதர்

  • காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வைபவம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை தமிழ்நாட்டு பக்தர்களை ஈர்த்திழுத்தது. தொடக்க நாட்களில் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை திரண்ட பக்தர்களின் எண்ணிக்கை, நிறைவு நாட்களில் நான்கு முதல் ஐந்து லட்சம் வரை உயர்ந்தது.
  • வெங்கடாஜலபதிக்கு அத்திவரதர் விட்ட சவாலில் திருப்பதியை மிஞ்சிய கூட்டத்தால் திணறியது காஞ்சிபுரம்.

ஒரு விகடகவி: அலெக்ஸாண்டர்

  • ஸ்டான்ட்-அப் காமெடியில் புதிய வகைமையை உருவாக்கியிருக்கிறார் அலெக்ஸாண்டர். சமூக வலைதளங்களில் அவர் அவ்வப்போது வெளியிட்டுவந்த காமெடிக் காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, ‘அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட்’ என்ற தலைப்பில் முழு நீள காமெடி நிகழ்ச்சியொன்றையும் நடத்தினார்.
  • வெப் சீரியல்களுக்கு இணையாக, இந்த காமெடி நிகழ்ச்சியும் முன்னணியில் இடம்வகித்தது அலெக்ஸின் நகைச்சுவைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.

ஒரு பெருஞ்சாவு: சுஜித்

  • தமிழ்நாட்டின் வீடுகளில் 2019 தீபாவளி இனிப்பிழந்ததாக இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு வீட்டிலும் இரவும் பகலுமாக செய்தித் தொலைக்காட்சி மூலம் கவலையோடு ஆழ்ந்திருந்தார்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டு வயதுச் சிறுவன் சுஜித், மூடப்படாமல் கைவிடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்டதும் அவனை மீட்க நடத்தப்பட்ட முயற்சிகளும் நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டு மக்களைப் பதைபதைப்பில் வைத்திருந்தது.
  • நம்முடைய விபத்து கால மீட்புப் படை போதிய கட்டமைப்புப் பலத்தைப் பெற்றிருக்கவும் இல்லை; ஒரு இடர் சூழலில் எப்படி ஒருங்கிணைந்து செயலாற்றுவது என்பதை இன்னமும் நாம் கற்கவுமில்லை என்பதை நம்முடைய செவிட்டில் அடித்துச் சொல்லியது சுஜித்தின் மரணம். தமிழ்நாடே அஞ்சலி செலுத்தியது.

தங்க வேட்டையாடிய தமிழக மங்கை: இளவேனில் வாலறிவன்

  • அகமதாபாதில் வசித்துவரும் இளவேனில் வாலறிவன் அடிப்படையில் கடலூர் பெண். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான உலகக் கோப்பைப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றவர் கூடவே தமிழ் மக்களின் இதயங்களையும் வென்றார். இவர் ஏற்கெனவே ஜூனியர் பிரிவில் பதக்கங்கள் வாங்கிக் குவித்திருந்தாலும் சீனியர் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.
  • அபூர்வி சண்டேலா, அஞ்சலி பக்வத் இருவருக்குப் பிறகு இந்தப் பிரிவில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன். இதே ஆண்டில் சீனாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார்.
  • இவர், இளையோர் பிரிவுக்கான சர்வதேச உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்றில் 631.4 புள்ளிகள் எடுத்தது உலக சாதனை. சீனியர் அளவிலும் யாரும் தொட்டிராத புள்ளி அது. இந்திய அளவில் ஆண்களில் ஒருவர்கூட எட்டிடாத உயரம் அது!

ஒரு எழுத்துப் படை: படைப்பாளிகள் ஐவர்

  • தமிழ்நாட்டிலிருந்து இந்த முறை முதல் முறையாக மக்களவைக்கு ஐந்து படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாகித்ய விருது பெற்ற சு.வெங்கடேசன், எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ரவிக்குமார், கவிஞர் கனிமொழி, கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் ஜோதிமணி. ஐவருமே விவாத நேரத்தை நன்றாகப் பயன்படுத்தி அசரடித்தார்கள்.
  • தனது பேச்சுகளைத் தாண்டி எழுத்துபூர்வமான கேள்விகளாலும் மத்திய அரசைத் திணறடித்தார் ரவிக்குமார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் கீழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என்ற அவர் கேள்வியால், இவ்விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்தது.
  • அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கியக் கோரிக்கைகளை மக்களவையில் வைத்திருக்கிறார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றிய ரவிக்குமாரின் ‘அபராதிகளின் காலம்’ என்ற குறுநூல் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே இரண்டாயிரம் பிரதிகள் விற்றது.

நன்றி: இந்து தமிழ் திசை (31-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்