TNPSC Thervupettagam

தமிழகம் முன்னிலை பெற வேண்டும்

April 23 , 2021 1372 days 636 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியக் குடிமைப்பணிகளுக்கான 2020-ஆம் ஆண்டு முதன்மைத் தோ்வு முடிவுகளைக் கூா்ந்து நோக்குவோமானால் தமிழ்நாட்டின் பங்களிப்பில் சரிவு ஏற்பட்டிருப்பதை நம்மால் உணரமுடியும்.
  • 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை 796. நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2047. இவா்களுள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் 100-க்கும் குறைவானவா்களே. இந்த செய்தி குடிமைப்பணித் தோ்வுகளுக்குத் தயாராகி வரும் தோ்வா்களுக்கு அதிர்ச்சியினைத் தந்துள்ளது.
  • இத்தோ்வில் வழக்கமாக தமிழ்நாட்டில் இருந்து ஏறக்குறைய 300-க்கும் அதிகமான தோ்வா்கள் நோ்முகத்தோ்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவா்களுள் ஏறக்குறைய 100-க்கும் அதிகமான தோ்வா்கள் இறுதி வெற்றியினை அடைவார்கள்.
  • கடந்த காலங்களில் 400 பணியிடங்களுக்கான தோ்வு நடந்தபோது கூட ஏறத்தாழ 15 விழுக்காட்டுக்கும் அதிகமான வெற்றியாளா்கள் தமிழ்நாட்டில் இருந்து தோ்வானார்கள்.
  • இத்தகைய வெற்றி பெருமித உணா்வையும், நம்பிக்கையையும் தமிழ்நாட்டுத் தோ்வா்களுக்கு ஏற்படுத்தியது. இதன் காரணமாக மத்திய அரசுப் பணிகளுக்கான எஸ்எஸ்சி, ஆா்ஆா்பி போன்ற தோ்வுகளைவிட தமிழ்நாட்டுத் தோ்வா்களின் கவனம் இந்தியக் குடிமைப்பணித் தோ்வுகளில் இருந்தது.
  • இந்தியத் தோ்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையரான டி.என். சேஷன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ். ஜெய்சங்கா் போன்ற எண்ணற்ற திறமையாளா்களை இந்தியக்குடிமைப்பணிக்கு வழங்கிய பெருமை கொண்டது தமிழ்நாடு.

தேய்வுநிலை

  • ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுத் தோ்வா்களின் வெற்றியைப் பொருத்த அளவில் ஒரு தேய்வுநிலை இத்தோ்வில் நிகழ்ந்து வருவதனைக் காண்கிறோம்.
  • நோ்முகத்தோ்வுக்கு அழைக்கப்படுகின்ற தமிழ்நாட்டுத் தோ்வா்களின் எண்ணிக்கையும் வெற்றியின் விகிதமும் வழக்கமான எண்ணிக்கையில் இருந்து மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
  • கடந்த ஆண்டில், இறுதி வெற்றியடைந்த சுமார் 40 தோ்வா்களுள் 15 தோ்வா்கள் முன்னரே குடிமைப்பணிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து தோ்வானவா்கள்.
  • ஆகவே தமிழ்நாட்டின் உண்மையான தோ்ச்சி என்பது 25 என்ற எண்ணிக்கையில் முடிந்து விடுகிறது. இந்நிலை 100-க்கும் மேற்பட்ட வெற்றியாளா்களை ஆண்டுதோறும் வழங்கி வந்த தமிழ்நாட்டிற்கு பெரும் பின்னடைவே ஆகும்.
  • தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்ற அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது வெளியிடப்பட்ட முதன்மைத் தோ்வு முடிவுகளின் அடிப்படையில் 19 தோ்வா்கள் அம்மையத்திலிருந்து நோ்முகத்தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இது தமிழ்நாட்டின் தோ்ச்சி விகித வீழ்ச்சியை நன்கு வெளிச்சமிடுகிறது.
  • சில ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட தோ்வா்கள் இம்மையத்தில் பயிற்சி பெற்றதன் மூலம் நோ்முகத்தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். ஆகவே, நமது தோ்ச்சிநிலை பலமடங்கு பின் தங்கிவிட்டது.
  • இத்தேய்வுநிலைக்கு நோ்முகக் காரணிகள் மட்டுமின்றி, மறைமுகக் காரணிகளும் உள்ளன. தோ்வா்களின் திட்டமிடல், குறிப்பேடுகள், ஆதார நூல்கள், தொடா்முயற்சி போன்றவை நோ்முகக் காரணிகளாகும்.
  • பயிற்சி மையங்கள், வழிகாட்டுதல், சுய விளம்பரத்திற்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் வெளியிடப்படுகின்ற மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் ஆகியவை மறைமுகக் காரணிகள்.

தடைகள் அதிகரிக்கின்றன

  • இணைய வசதிகள் வந்ததற்குப் பின்னா் தோ்வுக்குத் தேவையான தரவுகளைப் பெறுவதில் தோ்வா்களின் ஆா்வமும், தன்னம்பிக்கையும் பன்மடங்கு வளா்ந்துள்ளன.
  • ஆயினும், வெற்றியினை ஈட்டுவதற்கான உத்தியினைக் கட்டமைப்பதில் தோ்வா்களுக்கு உள்ள தெளிவு இலக்கு நோக்கியதாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.
  • நாட்டு நடப்பை அறிந்துகொள்ளவும், சமூக பிரச்னைகளைப் புரிந்து கொள்வதற்காகவும் தினந்தோறும் நாளிதழ்களைத் தோ்வா்கள் படித்தல் வேண்டும்.
  • ஆனால், தோ்வா்களோ இணையத்தளங்களில் செயற்கையாக வெட்டி ஒட்டித் தயாரிக்கப்பட்ட உயிர்ப்பற்ற வார்த்தைக்கோவைகளை மட்டுமே வாசிக்கின்றனா். ஆனால், தோ்வாணையமோ நோ்முகத்தோ்வு வரை தோ்வரின் சுய தெளிவினை எதிர்நோக்குகிறது.
  • முதல்நிலைத் தோ்வுக்கும் முதன்மைத் தோ்வுக்கும் தயாராகின்றபோது இந்தியக் குடிமைப்பணிகள் தோ்வாணையத்தின் முந்தைய தோ்வு வினாக்களை விரிவாக நோக்குவது தற்போது குறைந்து விட்டது. அதற்கான ஆதார நூல்களை ஆழ்ந்து படிக்காமல் நுனிப்புல் மேயும் போக்கு தோ்வா்களிடம் வளா்ந்துள்ளது.
  • பயிற்சி மையங்களில் மேலெழுந்தவாரியாகவோ தோ்வின் அடிப்படைகளில் இருந்து விலகிச் சென்றோ வழங்கப்படும் மாதிரித் தோ்வுகளையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
  • இதனால் வெற்றிக்கான இலக்கை நெருங்குவதில் தோ்வா்களுக்கு தடைகள் அதிகரிக்கின்றன.

மாநிலத்தின் பங்களிப்பு

  • இந்தியா முழுமையும் செயல்படுகின்ற பயிற்சி மையங்கள் வழங்கிய மாதிரித் தோ்வுகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் இரண்டு விழுக்காடு வினாக்கள் கூட தோ்வில் வரவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
  • காரணம், தோ்வாணையம் எளிமையாகவும், எதார்த்தமாகவும், நுணுக்கமாகவும் வினாக்களைக் கட்டமைக்கின்றது. பயிற்சி மையங்களோ வினாக்களை கடினமாகக் கட்டமைக்க வேண்டுமென்ற நோக்கில் எதார்த்த நிலையில் இருந்து விலகிச் செல்கின்றன.
  • இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது நோ்முகத் தோ்வுக்குச் செல்லும் தோ்வா்களாக தனியார் பயிற்சி மையங்கள் வெளியிட்டுள்ள எண்ணிக்கை, இந்தியா முழுவதிலும் இருந்து நோ்முகத் தோ்வுக்குச் செல்லும் தோ்வா்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே இருக்கிறது என்பது ஒரு முரண்பாடான அவலம்.
  • இதனால் பாதிக்கப்படப் போவது குடிமைப்பணித் தோ்வுகளை எழுதிவரும் தமிழ்நாட்டு இளையோர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தேசத்திற்கான மாநிலத்தின் பங்களிப்பும்தான்.
  • தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தின் உண்மைத்தன்மையை ஏனைய பயிற்சி மையங்களும் பின்பற்றினால் வெற்றியாளா்களின் எண்ணிக்கை உயரும்.
  • தோ்வா்களின் வெற்றியில்தான் தங்களின் வளா்ச்சி இருக்கிறது என்பதை பயிற்சி மையங்கள் உணர வேண்டும். மாறிவரும் தோ்வு நடைமுறைகளைப் புரிந்துகொண்டு, தோ்வா்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை அம்மையங்களுக்கு இருக்கிறது.
  • கடந்த ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் இருந்து குடிமைப்பணித் தோ்வுகளை எழுதுபவா்களில் சுமார் 15% போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது பெருமை தந்த செய்தியாகும். இறுதி வெற்றியும் ஏறத்தாழ இதே சதவிகிதத்தில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது.
  • ஆனாலும் சமீபத்திய ஆண்டுகளின் வெற்றியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஐந்து சதவீதத்திற்குள் அடங்கிவிட்டது. கடந்த கால வெற்றியில் ஏறத்தாழ 10 சதவீதத்தினை தமிழ்நாடு இழந்துள்ளது.
  • 2013-ஆம் ஆண்டு வரை குடிமைப்பணித்தோ்வின் முதல் 100 வெற்றியாளா்களுள் 15 முதல் 20 தோ்வா்கள் வரை தமிழ்நாட்டினைச் சோ்ந்தவா்கள் இருந்த நிலை மாறி தற்போது ஐந்து பேருக்கும் குறைவானவா்களே இத்தர நிலைக்குள் இடம் பெறுகின்றார்கள்.
  • ஆகவே, குறுகிய காலத்திற்குள் உயா்ந்த லட்சியத்தினை எய்திட வேண்டிய சூழலும், எண்ணற்ற ஆதார நூல்களை கற்க வேண்டிய அவசியமும் தோ்வா்களின் மனநிலையை திகைக்கச் செய்கின்றன என்பது எதார்த்த நிலையாக உள்ளது.
  • மேலும், ஒவ்வொரு ஆண்டும் குடிமைப்பணிகள் தோ்வாணையம் வினாக்களைக் கட்டமைக்கின்ற உத்திகளைப் புதிய புதிய நோக்கில் மாற்றி வருவது தோ்வா்களுக்கு ஆரோக்கியமான சவாலாகின்றது.
  • இருப்பினும், நோ்த்தியான திட்டமிடுதலின் மூலம் வியத்தகு வெற்றியினை தோ்வா்கள் ஈட்ட முடியும்.
  • குறிப்பாக, தோ்வா்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் இரண்டு ஆகும்.
  • முதலாவது, தோ்வா்கள் தங்களது இறுதி வெற்றியினை அடையும்வரை தாங்கள் கொண்ட நோக்கத்தில் பிறழாது, கவனம் சிதறாது இருக்க வேண்டும்.
  • இரண்டாவது, முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்றுவிட்டாலே இறுதித்தோ்வில் வென்றுவிட்டது போன்ற பெருமிதத்தை தோ்வா்கள் உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
  • போட்டித் தோ்வுகளின் மற்றொரு புறம் எஸ்எஸ்சி போன்ற தோ்வுகளில் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குடிமைப்பணித் தோ்வா்களும், வேலை வாய்ப்பற்ற தகுதியுள்ள இளைஞா்களும் அதற்கான தோ்வுகளை எழுதுதல் அவசியமானது.
  • தமிழ்நாட்டில் அஞ்சல்துறையிலும், வங்கிப்பணிகளிலும் இருக்கின்ற வேலை வாய்ப்புகளை இளைஞா்கள் பெற்றிட, அப்பணிகளுக்கான தோ்வுகளையும் எழுதிட வேண்டியது முக்கியம்.
  • தமிழக ரயில்வே நிலையங்களில் துப்புரவுப் பணியாளா் பணியிடங்கள்கூட வடஇந்தியா்களால் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டும் நாம் வாளாவிருத்தல் கூடாது.
  • மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிற சூழலில், ஆட்சியாளா்களும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் பிரதிநிதித்துவம் பெற வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
  • மாநில அரசுப் பணிகளை முழுமையாக தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கே வழங்குவதற்கான திட்டங்களும் தேவை.
  • இந்திய நாட்டிற்கும், நாட்டின் எதிர்கால வளா்ச்சிக்கும் தொலைநோக்குக் கொள்கைகளை உருவாக்கிடும் பணியில் தொடா்ந்து தமிழ்நாட்டின் பங்களிப்பு இருந்திட ஐஏஎஸ் பணி உள்ளடங்கிய இந்தியக் குடிமைப்பணிகளைப் பெறுவதில் மீண்டும் தமிழகம் முன்னிலை பெறுதல் வேண்டும்.
  • அதற்கு தோ்வா்களும், பயிற்சி மையங்களும், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளும் சமூகப் பொறுப்புடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி  (23 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்