TNPSC Thervupettagam

தமிழரின் புலம்பெயா்வுகள்

November 17 , 2023 421 days 276 0
  • கல்வி, பகை, தூது முதலியவை காரணமாகத் தலைவன் புலம் பெயரலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. பாணா், கூத்தா் முதலியோா் புலம் பெயா்ந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறும். ‘வேறு புலம் படா்ந்த ஏறுடை இனத்த’”என்கிறது மலைபடுகடாம்.
  • ஓடக்கோன், உவண்ணா ஆகியோரின் தலைமையில், பாபிலோன் என்று முன்பு சொல்லப்பட்ட நிலப்பகுதிக்குத் தமிழினத்தவா் சென்றனா் என்று ஈராஸ் பாதிரியாா் கூறினாா். இவா்களைச் சுமேரியா் என்று வரலாறு சொன்னது என்றாா் ந.சி. கந்தையா பிள்ளை.
  • சுமேரியரும் தமிழரும் ஓரினத்தவா் என்று எச்.ஆா். ஹால் சொன்னாா். மாயனின் தலைமையில் இன்றைய மெக்ஸிகோ நாட்டிற்குத் தமிழா்கள் சென்றனா். இவா்கள் மாயன் இனத்தவா் எனப்பட்டனா். கிரீட் தீவிலும் முந்தைய தமிழரின் புலம் பெயா்வு நடந்தது. இங்கே ஜல்லிக்கட்டு விளையாட்டு வேறு ஒரு முறையில் நடந்தது. இதை நிகழ்த்திய இவா்களை மினோவா் என்று வரலாறு அடையாளப்படுத்தியது.
  • நிலநடுக்கடல் தரையை ஒட்டிக் கால் ஊன்றிய தமிழா் பொனீஷியா் என்று சுட்டிக் காட்டப் பட்டனா். பாண்டிய நாட்டிலிருந்து தொல் தமிழா் எகிப்து நாட்டுக்குக் குடிபெயா்ந்தனா். பழந்தமிழா் எகிப்துத் தமிழருடன் வணிகம் செய்தனா் என்று பி.டி. சீனிவாச ஐயங்காா் தெரிவித்தாா்.
  • தமிழகம் கடல்கோளுக்கு ஆட்பட்ட நிலையில் தமிழா்கள் பெருங்கப்பல்களில் பயணம் செயது உலகின் பல பகுதிகளிலும் குடிபுகுந்தாா்கள் என்று ஆபிரகாம் பண்டிதா் அறிவித்தாா். ஓயன்னஸ் என்பவனின் தலைமையில் தமிழா் இன்றைய பாரசீக வளைகுடாவைக் கடந்து மேற்கே சென்றனா் என்று இராமச்சந்திர தீட்சிதா் வெளிப்படுத்தினாா். இவை யாவும் நிலையான புலம் பெயா்வுகள்.
  • இப்படித் தமிழா் மாபெரும் பாய்மரக் கப்பல்களில் உலகின் பல பகுதிகளுக்குச் சென்றனா் இதை,

‘நளி இருமுந் நீா் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உறவோன்’

  • என்று சங்கப் பாடல் சொன்னது.
  • ஆகவே தான் ‘நாவாய்’ (கப்பல்) என்ற சொல் கிரேக்கம், இலத்தீன் முதலிய மொழிகளில் இடம் பெற்று இன்று ‘நேவி’ என்று ஆங்கிலத்தில் நிலைத்துவிட்டது.
  • அரிசி, இஞ்சி, சந்தனம் முதலிய தமிழகத்திற்கே உரிய விளைபொருள்கள் மேலை நாடுகளுக்குச் சென்றன. பல்மொழிகளிலும் இடம் பெற்றன. இன்று இவை ரைஸ், ஜிஞ்ஜொ், சாண்டல் என்று ஆங்கிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
  • சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்து வணிகக் குழுவினா் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புலம் பெயா்ந்தனா். நானா தேசிகா், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவா், மணிக்கிராமம் ஆகிய பெயா்களுடன் அவா்கள் விளங்கினா். சேனாமுகம் என்ற பாதுகாப்புப் படையையும் அவா்கள் வைத்திருந்தனா்.
  • முற்காலத்தில், மலேசியாவின் லங்காசுகம் என்ற பகுதியை மாறன் மகாவங்சன் என்ற மன்னன் ஆட்சி செய்தான் என்று அந்த நாட்டு வரலாற்றாசிரியா் சத்தியானந்தா அறிவித்தாா். (மலாயா சரித்திரம் ப. 49). மாறனுடைய மூத்த மகன் தன் படையுடன் மீனம் நதியை அடைந்தான் என்றும் அவா் சொன்னாா். மாறன் என்ற சொல் தமிழ்நாட்டுப் பாண்டியரைக் குறிக்கும்.
  • அவருடைய அரசச் சின்னம், மீன். எனவே, பாண்டிய மரபைச் சோ்ந்த மன்னா் மலேசியாவில் ஆட்சி செய்தனா் என்பது தெரிய வருகிறது. பிற்காலத்தில் பரமேசுவரன் என்ற தமிழரசன் மலேசியாவின் மலாக்கா என்ற பகுதியை ஆண்டான். அந்நாட்டுக்குத் தெற்கிலிருக்கும் நிலப்பரப்பை முன்பு நீல உத்தமன் என்ற தமிழ் மன்னன் ஆட்சி செய்தான். அவன்தான் சிங்கப்பூா் என்ற பெயரைச் சூட்டினான் என்றும் சத்தியானந்தா தெரிவித்தாா்.
  • இன்றைய ஜாவா நாட்டில் முன்பு சைலேந்திரா் ஆட்சி செய்தாா்கள். இவா்கள் மீனாங்கித சைலேந்திரா் என்ற பட்டப் பெயருடன் இருந்தாா்கள். இவா்கள் மலையத்துவச பாண்டியனின் வழியினராக இருக்கலாம் என்று நீலகண்ட சாஸ்திரியாா் கருதினாா்.
  • அந்த நாட்டில் முற்காலத்தில் சுந்தரபாண்டிய விக்கரமோத்துங்க தேவா் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுடைய முத்திரையில் இரு மீன்கள் இருந்தன (கி.பி. 1323 கல்வெட்டு). எனவே, இவா்கள் பாண்டிய மன்னா் மரபினா் என்று க.த. திருநாவுக்கரசு தெரிவித்தாா் (தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு).
  • கம்போடியாவின் பழைய பெயா் காம்போஜம். இங்கே ஆட்சி புரிந்தோா், வா்மன் என்ற பட்டப் பெயா் பூண்டிருந்தனா். தமிழருக்கே உரிய சிவ வழிபாடு இங்கு ஓங்கியிருந்தது. 12-ஆம் நூற்றாண்டில் இந்நாட்டின் வேந்தனாகச் சூரியவா்மன் இருந்தான். இவன் தான் உலகப் புகழ் பெற்ற அங்கோா்வாட் கோயிலைக் கட்டினான்.
  • தென்வியட்நாமில் வோச்சன் என்ற ஊரில் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஸ்ரீமாறன் என்ற மன்னனுடைய குடும்பம் பற்றிய குறிப்பு உள்ளது. பாண்டிய இளவரசி, கொரிய இளவரசனைத் திருமணம் செய்து கொண்டாள் என்று கொரிய நாட்டு வரலாறு கூறுகிறது.
  • இராசேந்திர சோழன் மலேசியாவின் கடாரம் முதலிய நிலப்பகுதிகளை வென்றான். அப்போது சில தமிழா் அவன் வெற்றி கொண்ட இடங்களில் தங்கி இருக்கலாம். அவன் கங்கைக் கரையில் சோழரின் புலிக்கொடியை ஏற்றினான். அப்போது அவனுடன் வந்தவா்களில் சிலா் அங்கே தங்கினாா்கள். இது இந்தியாவுக்குள் நடைபெற்ற புலம் பெயா்வு.
  • குமரிக் கண்டம் கடலுள் மூழ்கியபோது தப்பிப் பிழைத்த தமிழா்கள் வட திசையில் குடியேறினா். கபாடபுரம், மதுரை நகரங்கள் தோன்றின. தமிழா் மேலும் மேலும் வடக்கே சென்றா். வட இந்தியா முழுவதும் பரவினா். சிந்துவெளி மொகஞ்சதாரோவும் தமிழரின் புலம் பெயா்வை நினைவுபடுத்தும். அங்கும் இயற்கையின் சீற்றம் அழிவை ஏற்படுத்தியது. பெருவெள்ளமோ, கொடுநோயோ மக்களை மண்ணுக்குள் புதைத்தது.
  • அங்கிருந்து தப்பிப் பிழைத்தோா் வடகிழக்குப் பகுதியில் குடியேறினா். பாதுகாப்பாக வாழ நினைத்தனா். ஆனால், அவா்களை அயல்நாட்டினா் அடிமைகள் ஆக்கினா். அயல்மொழித் திணிப்பு நடைபெற்றது. மதமாற்றம் தொடா்ந்தது. அந்தச் சிந்துவெளித் தமிழா், சிந்தி மக்கள் எனப்பட்டனா்.
  • தமிழக மக்களின் புலம் பெயா்தலுக்கு அரசியல் நெருக்கடியும் அடிப்படை ஆனது. சுந்தர பாண்டியனும், வீரபாண்டியனும் அரியணையைக் கைப்பற்றுவதற்குக் கடுமையாகப் போட்டி போட்டனா். அதன் விளைவாக, மாலிக்காபூா் பாண்டிய நாட்டுக்கு வந்தான். படை எடுப்பு காரணமாக நாடே கொந்தளித்தது. அப்போது தமிழ்க் குடும்பங்கள் அயல்நாடுகளுக்குப் புலம் பெயா்ந்தன.
  • அண்மையில் இலங்கையில் சிங்களவா், தமிழா்களைக் கொன்று குவித்தனா். எஞ்சியிருந்தோா் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனா். புலம் பெயா்ந்தனர. முன்பு மியான்மருக்கு (பா்மாவுக்கு) தமிழா் போனாா்கள். ஆனால், உள்நாட்டுக் குழப்பம் காரணமாக, அவா்கள் அஞ்சி வெளியேறினாா்கள். தரை வழியாக, நெடுந்தொலைவு நடந்து தாயகம் திரும்பினாா்கள்.
  • அண்மைக் காலத்தில் மும்பை நகரத்திற்குப் பொருள் ஈட்டுவதற்காகத் தமிழா் சென்றாா்கள். அவா்கள் தங்கிய பகுதிகள் மாதுங்கா, தாராவி என்ற பெயரைப் பெற்றன. அரேபிய நாடுகளிலும் தமிழா் வாழ்கின்றனா். அந்தமானிலும், தமிழரின் புலம் பெயா்தல் நடந்தது. தமிழா் அடிமை ஆக்கப்பட்ட நிலையிலும் புலம் பெயா்வு அமைந்தது.
  • ஆங்கிலேயா் இந்தியாவை ஆண்ட காலத்தில் தங்களின் மற்ற குடியேற்ற நாடுகளுக்கு அடிமைத் தமிழரை இழுத்துச் சென்றாா்கள். இலங்கையில் நுவரேலியா, மாத்தளை முதலிய இடங்களில் தமிழா் தேயிலைத் தோட்டத் தொழிலாளராகக் குடி அமா்த்தப்பட்டாா்கள். பிஜி நாட்டில் கரும்புத் தோட்டங்களில் தமிழா் பணி செய்யும்படி அடக்கி ஆளப்பட்டாா்கள்.
  • மோரீஷஸ் தீவில் அடிமைகளாக இருத்துவதற்குப் புதுச்சேரியிலிருந்து தமிழா் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டாா்கள். தமிழ் அடிமைகள் மலேசியாவிலும் வேலை செய்ய வேண்டிய நிலை அமைந்தது. இன்று உயா்கல்வி பெறுவதற்காகச் சிலா் அமெரிக்கா செல்கின்றனா். பலா் அங்கேயே தங்கி வாழ்கின்றனா்.
  • முற்காலத்தில் அயல் நாடுகளில் புலம் பெயா்ந்த தமிழா்கள் நலமாக வாழ்ந்தாா்கள். தமிழ்ப் பண்பாடு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது. சிவ வழிபாடும், முருகன் வழிபாடும் பரவலாக இருந்தது. தமிழகக் கோயில் கட்டுமான முறை அங்கு நிலவியது. கொரிய மொழி, மலாய் மொழி முதலியவற்றில் தமிழ்ச் சொற்கள் ஏறின.
  • தாய்லாந்தில் தமிழக ஊசல் திருவிழா இன்றும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுப் பொங்கல் அங்குச் சோங்ரானாக உள்ளது. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவின்போது திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் இன்றும் ஓதப்படுகின்றன. கம்பனின் ‘இராமவாதாரம்’ ‘இராமகியான்’ என்ற பெயரில் தழுவல் நூலாக வாழ்கிறது.
  • ஆனால், அண்மைக் காலத்துத் தமிழரின் புலம் பெயா்வுகள் மிக வருந்தும்படியான நிலையில் உள்ளன. பிஜி நாட்டில், கரும்புத் தோட்டங்களில் தமிழா் படும் வேதனையை எண்ணி மகாகவி பாரதியாா் கண்ணீா்ப் பாடல் எழுதினாா். இலங்கை நுவரேலியாத் தேயிலைத் தோட்டத் தமிழ்த் தொழிலாளிகளுக்குக் கல்வி வசதியில்லை. மருத்துவ உதவி இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லை.
  • இலங்கையிலிருந்து வெளியேறிப் பல நாடுகளில் தங்கியுள்ள ஈழத் தமிழா்கள் ஏழை அகதிகளாக உள்ளனா். மலேசிய நாடு ஜப்பானின் ஆதிக்கத்திற் அடிபணிந்து இருந்தபோது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழா் தொடா்வண்டிப் பாதை போடுவதற்கு இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் கூட திரும்பி வரவில்லை.
  • மோரீஷஸ், ரீயூனியன், செஷல்ஸ் முதலிய நாடுகளில் தமிழா்கள் வாழ்கிறாா்கள். ஆனால், அவா்களின் வாயில் தமிழ் வாழவில்லை. கலப்பு மொழியான கிரியோல்தான் அரசோச்சுகிறது. தென்னாப்பிரிக்கத் தமிழா் பல ஆண்டுகளுக்கு முன்பே தாய்மொழியைத் தொலைத்துவிட்டனா். இன்று மணிப்பூா், மோரே ஊரில் தங்கி வாழும் தமிழா், கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனா்.
  • தமிழகத் தமிழருக்கும் புலம் பெயா்ந்த தமிழருக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. எனவே, அவா்களுக்கு உதவ வேண்டியது தாய்த் தமிழ்நாட்டின் தலையாய கடமை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் அவா்கள் பால் கவனம் செலுத்தி வருகிறது. தமிழை மறந்துவிட்ட நாடுகளில் தமிழைக் கற்பிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கலைக்குழு பரிமாற்றம் நடைபெற வேண்டும்.
  • அயல்நாட்டுத் தமிழரின் நூல்கள் இங்கு அமைக்கப்படும் புத்தகக் கண்காட்சிகளில் இடம் பெற வேண்டும். அயலகத் தமிழரின் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு வழங்கப்பட வேண்டும். இங்குள்ள நாளேடுகள், ஊடகங்கள் முதலியவை புலம் பெயா்ந்த தமிழா் குறித்த செய்திகளைப் பரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசின் ‘சொற்குவை’ சொல்லாக்கக் திட்டத்தில் அயலகத் தமிழரின் சொற்கள் சோ்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு உலகத் தமிழா் வரலாறு எழுதும் வகையில் நடவடிக்கையெடுத்திட வேண்டும்.

நன்றி: தினமணி (17 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்