TNPSC Thervupettagam

தமிழர் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் பொங்கல்

January 14 , 2021 1292 days 653 0
  • இன்று விவசாயத்தின் பெருமையையும் விவசாயிகளின் பெருமையையும் அறிந்து கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு விவசாயத்தின் முக்கியவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
  • உலகின் ஒவ்வொரு படைப்பிற்கும் இயற்கையே காரணமாக அமைகிறது. இயற்கை இல்லேயேல் எதுவுமே இல்லை. அது போல் விவசாயத்திற்கும் இயற்கைதான் அவசியமானதாக திகழ்கிறது. அதுவும் சூரியன் என்றொரு இயற்கைதான் விவசாயத்திற்கு தேவையான முதலும், முக்கியமானதுமான ஒன்றாக உள்ளது. இயற்கையோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு இயற்கை என்றுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இயற்கைக்கு எதிராக செயல்படும் சமூகம் பட்டு வரும் வேதனைகளை உலகமே பல கட்டங்களில் உணர்ந்துள்ளது.
  • ’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்பான் வள்ளுவப் பெருந்தகை. பொதுவாகவே நமக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி சொல்வதை நாம் பண்பாடாக, வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதே போல், விவசாயத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்து வரும் சூரியனுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கும், விவசாயத்தின் மூலம் கிடைத்த பொருளை உண்ணும் மனிதனுக்கும் தோன்றியதன் விளைவாக வந்ததுதான் பொங்கல் திருநாள்.
  • பொதுவாக நெல் அறுவடை முடிந்து நெல் மூடைகளை வீட்டிற்கு கொண்டு வந்து தான் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்து விட்டது என்று குதூகலிக்கும் விவசாயி, அந்த மகிழ்ச்சிக்கு காரணமான சூரியனிடம் தனது நன்றியை பகிர்ந்து கொள்ள பிறந்ததுதான் பொங்கலிடும் வைபவம்.
  • அன்று, தனது வயலில் விளைந்த நெல்லை மணியாக்கி, புது அரிசியை, புது பானையில் பொங்கலிட்டு, அந்த பொங்கலையும், தனது மண்ணில் விளைந்த, தனது நண்பர்களின் மண்ணில் விளைந்த காய்கனிகளையும் சூரியனுக்கு நேரே வைத்து படைத்து நன்றி சொல்லி, மகிழ்வான் விவசாயி. 
  • இவ்விழா தமிழரால் தமிழ் நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.‘பொதுவாக விழாக்கள் அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கும் போது அந்த விழாக்கள் காலத்தால் அழியாமல், காலம் கடந்தும் தொடரும் என்பதற்கு உதாரணமான விழாவாக விளங்கி வருகிறது பொங்கல் விழா.
  • நிலத்தை உழுது, பண்படுத்தி, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, இரவு, பகல் பாராது, கண் துஞ்சாது நெல் விதையை, நெல் மணியாக்க பாடுபடும் விவசாயிகளின் உழைப்பும், முயற்சியும் சொல்லி மாளாது. அத்தகைய காலகட்டத்தில், விவசாயிகளின் கையில் காசு இருக்காது. நெல் கதிர் அறுவடைக்குத் தயாராகி, அறுவடை முடிந்து குவியலாக குவிக்கப்படும் போதுதான் விவசாயிகளின் மனம் நிறையும். 
  • அதன் பின்னர்தான் அவனது வாழ்வில் வசந்தம் பிறக்கும்.  அதனால்தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிறார்கள்.
  • இந்த பொங்கல் திருநாளை ஒட்டி மண் சார்ந்த எத்தனையோ விளையாட்டுகள், பாரம்பரியம் மாறாத நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் என கிராமங்களில் களைகட்டும். பொதுவாக சூரியனை நேரில் பார்ப்பதற்கு வசதியாக வீட்டு முற்றத்தில் பொங்கல் இடுவதுதான மரபு என்றாலும் கூட, அடுக்கு மாடி குடியிருப்புகள் பெருகி விட்ட இந்நாளில் முற்றங்கள் இருப்பது கேளவிக்குறியே. இருப்பினும் மேல்தளத்திலோ, கிடைக்கும் இடத்திலோ கல் அடுப்பு பானைகளை வைத்தோ, கேஸ்-ஸ்டவ்களை வைத்தோ பொங்கலிட்டு தங்களின் நன்றியை சூரியனுக்கு தெரிவிப்பதற்கு யாரும் மறப்பதில்லை என்பதுதான் மற்ற பண்டிகையை விட பொங்கலுக்கு தமிழர்கள் காட்டும் மரியாதை என்றால் மிகையில்லை.
  • பொங்கலிட்டு மகிழ்வோம்..பொங்கும் செல்வம் பெறுவோம்..

நன்றி: தினமணி (14 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்