TNPSC Thervupettagam

தமிழறிஞர் வ.உ.சி.

September 5 , 2021 1062 days 712 0
  • நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நாட்டுடைமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழறிஞர்களின் படைப்புகளில் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத் தலைவர் அ.சங்கர வள்ளிநாயகத்தின் படைப்புகளும் உள்ளடக்கம்.
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவில் சங்கர வள்ளிநாயகம் ஆற்றிய உரை, அதே நிறுவனத்தால் ‘வ.உ.சி.யும் தமிழும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது. வ.உ.சி.யின் இலக்கியப் பணிகளை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் சங்கர வள்ளிநாயகம்.
  • அவரின் சொற்பொழிவு வ.உ.சி.யின் தமிழ்ப் பணிகளைப் பற்றிய நல்லதொரு அறிமுகம்.
  • சுதந்திரப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வ.உ.சிதம்பரனார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் தலைவர். அதன் காரணமாகவே, வ.உ.சி. என்றதும் அவரது அரசியல் செயல்பாடுகள்தான் முதலில் நினைவுக்கு வருகின்றன.
  • நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகள் பெரிதும் இரண்டாம்பட்சமாகி விடுகின்றன.
  • தமிழறிஞர்களின் வரிசையிலும் வைத்தெண்ணப்பட வேண்டியவர் வ.உ.சி. விடுதலைப் போரில் சிறைவாசம் அனுபவித்த அரிதான தமிழறிஞர்களில் அவரும் ஒருவர்.

நவீன வள்ளுவர்

  • சிதம்பரனாரின் ‘சுயசரிதை’, ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’, ‘பாடற்றிரட்டு’ ஆகிய நான்கு நூல்களும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவை. செய்யுள்களில் பெரும் பகுதி அவரது சிறைவாசத்தின்போது உருவானவை.
  • வ.உ.சி.யின் சுயசரிதை அவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளின் வரலாற்றுப் பதிவையும் உள்ளடக்கியது. ‘மெய்யறிவு’ நூலானது, அவரது சக கைதிகள் மனந்திருந்தும் பொருட்டு அறிவுரையாக எழுதப்பட்டது.
  • வெண்பா யாப்பில் அதிகாரம் ஒன்றுக்குப் பத்து பாடல்கள் என்ற கணக்கில் பத்து அதிகாரங்களையும் நூறு பாடல்களையும் கொண்டது. வ.உ.சி.யின் சொல்லாட்சியிலிருந்து அவர் வள்ளுவத்தை ஆழ்ந்து பயின்றதை அறியமுடிகிறது.
  • அவரது ‘மெய்யறம்’ குறளின் அடிப்படையில் ஐந்து இயல்களாக இயற்றப்பட்டது.
  • திருக்குறளைப் போலவே அதிகாரத்துக்குப் பத்து பாடல்களாக 125 அதிகாரங்களில் எழுதப்பட்ட இந்த நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்று மனித வாழ்வை ஐந்து இயல்களாகப் பிரித்துக் காண்கிறது.
  • பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நால்வகை ஆசிரமங்களுக்கு மாறானது இது. வள்ளுவத்தின் சொல்லாட்சியை இந்த நூலிலும் காண முடிகிறது.
  • வள்ளுவர் குறட்பாக்களில் உணர்த்த விழைந்த கருத்துகளை ஓரடியி லேயே எடுத்துக் காட்டியுள்ளார் வ.உ.சி. தம் சமகாலத்தின் புதிய அறங்களாய் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தவும் குழந்தைத் திருமணங்களைக் கண்டிக்கவும் செய்துள்ளார்.
  • பல்வேறு சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பான ‘பாடற்றிரட்டு’ அவரது கவியுள்ளத்தை எடுத்துக்காட்டுவது. சிறை செல்லும் முன் எழுதப்பட்ட 97 பாடல்கள் முதல் தொகுதியாகவும் சிறைவாசத்தின்போது எழுதிய 284 பாடல்கள் இரண்டாம் தொகுதியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை என்று யாப்பில் அவருக்கிருந்த புலமையை இந்தப் பாடல்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. வ.உ.சி.யின் சிறைவாசத்தால் வறுமை சூழ்ந்த அவரது குடும்பத்தின் நிலையையும் சில பாடல்கள் தெரிவிக்கின்றன.

உரையாசிரியர்

  • திருக்குறளின் அறத்துப்பாலுக்கும் பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள மற்றொரு நூலான இன்னிலைக்கும் சைவ சமயச் சாத்திரமான சிவஞானபோதத்துக்கும் வ.உ.சி. உரை எழுதியிருக்கிறார்.
  • சிறுநூலான இன்னிலைக்கு அவர் எழுதிய உரையில், 30 நூல்களை மேற்கோள் காட்டியுள்ளது அவரது விரிந்து பரந்த வாசிப்புக்கும் உரைத்திறனுக்கும் சான்று.
  • அறத்துப்பாலுக்கு வ.உ.சி. எழுதிய உரை பரிமேலழகர் உரையிலிருந்து மாறுபட்டது. இயல் வகைபாடு, அதிகார வைப்பு, குறள் வைப்பு என அனைத்திலும் அவர் பரிமேலழகரிலிருந்து வேறுபட்டே நிற்கிறார்.
  • கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களை வள்ளுவர் இயற்றவில்லை என்பது வ.உ.சி.யின் துணிபு.
  • மூலத்திலிருந்து 44 பாட வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவஞானபோத உரையில், பிற உரைகளைப் போல மாற்று சமயத்தாரின் கொள்கைகளைக் கண்டிக்கும் போக்கைத் தவிர்த்திருக்கிறார்.

பதிப்பும் மொழிபெயர்ப்பும்

  • திருக்குறளின் அறத்துப்பாலுக்கு மணக்குடவர் எழுதிய உரையையும் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கும் பொருளதிகாரத்தின் அகத்திணை, புறத்திணை இயல்களுக்கும் இளம்பூரணர் எழுதிய உரையையும் வ.உ.சி. பதிப்பித்துள்ளார்.
  • மணக்குடவர் உரையே தமிழ் மரபுரை என்று அவர் கருதியதே அதைப் பதிப்பிக்கக் காரணம். மணக்குடவர் விளக்கம் தராத இயலுக்கும், குறள்களுக்கும் வ.உ.சி.யே உரை விளக்கங்களை எழுதிப் பதிப்பித்திருக்கிறார்.
  • சில குறள்களுக்கு மணக்குடவர் உரைக்கும் பரிமேலழகர் உரைக்கும் உள்ள வேறுபாடுகளையும் குறித்துக்காட்டியுள்ளார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பதிப்பில் பாட வேறுபாடுகளைக் களைந்தும் சிதைவுகளை முழுமை செய்தும் வெளியிட்டுள்ளது வ.உ.சி.யின் பழந்தமிழிலக்கிய இலக்கணப் புலமையை எடுத்துக் காட்டுகிறது.
  • அகத்திணை, புறத்திணை தவிர்த்த பொருளதிகாரத்தின் ஏழு இயல்களையும் எஸ்.வையாபுரியுடன் இணைந்து பதிப்பித்துள்ளார்.
  • ‘மனம்போல வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ ஆகியவை ஆங்கிலத்திலிருந்து வ.உ.சி. மொழிபெயர்த்த நூல்கள். இவை நான்கும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை.
  • பின்னைய இரு நூல்களும் ஒரே நூலின் இரண்டு பகுதிகளாக அமைந்தவை. தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மொழியாக்கம் செய்யப்பட்டவை. 1927-ல் சேலத்தில் காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாட்டில் வ.உ.சி. ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
  • அந்த உரையில், சமகால அரசியல் பிரச்சினைகளைக் குறித்துப் பேசும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசியுள்ளார்.
  • பாண்டித்துரை நிறுவிய மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களில் வ.உ.சி.யும் ஒருவர். தமிழே வ.உ.சி. என்ற பேராளுமையை உருவாக்கியது. வள்ளுவத்தின் அறமே அவரது உருவாகி நின்றது.
  • அரசியல் துறவறம் மேற்கொண்ட இறுதிக் காலத்திலும் தமிழே அவரது ஆறுதலாகவும் அமைந்தது.
  • வ.உ.சி. பிறந்த 150ஆவது ஆண்டு தொடக்கம்: செப். 5

நன்றி: இந்து தமிழ் திசை (05 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்