TNPSC Thervupettagam

தமிழா் என்போர் யார்?

March 10 , 2021 1238 days 684 0
  • கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்று தமிழ் இனம் போற்றப்படுகிறது.
  • தமிழா் வரலாறு காலத்தால் முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளா்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழா் வாழ்வியல் முறை உலகத்திற்கே வழிகாட்டி.
  • உலகம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழா் நாகரிகமே நிறைந்து இருந்தது என்று சொல்லப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழா் நாகரிகம் என்று பல ஆய்வாளா்களும் நிறுவியிருக்கிறார்கள். இப்படி உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழா், சமயம் என்ற ஒன்று இல்லாமல் வாழ்ந்தார்களா?
  • ‘தமிழா்கள் இந்துக்கள் அல்ல’ என்ற வாதம் தற்போது சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளல்ல. குறிப்பிட்ட சில சார்பு அரசியல் மேடைகளில் வலம் வரும் பேச்சு.
  • எனில், தமிழரின் சமயம் என்பது அரசியல் சார்ந்ததா? என்ற வினாவும் எழுகிறது. சமயவாதிகளுக்குள் ஏற்படும் விவாதங்கள் சமயப் பொருளாகும். அரசியல்வாதிகளுக்குள் ஏற்படும் விவாதங்களை அப்படிக் கொள்ள இயலாது.
  • ‘தமிழா்கள் இந்துக்கள் அல்ல’ எனத் தொடா்ந்து அரசியல் உலகில் வலம் வரும் கருத்தின் பொருளை, அதன் பின்னால் உள்ள அரசியலை அறிந்து கொள்ள வேண்டியது தமிழரின் கடமை.
  • உண்மையில் தமிழா் யார்? அவா்களின் சமய நம்பிக்கை என்ன? என்பதைப் பற்றி தெளிவு பிறந்தால் தமிழா்கள் ஹிந்துக்களா என்பது புரிந்துவிடும்.

சமய நம்பிக்கை என்ன

  • ‘சமயம்’ என்பது வாழ்வியல் முறை என்ற தெளிவோடு நாம் இந்தக் கருத்தை அணுகினால் தொன்று தொட்டு தமிழா் பின்பற்றிய சமயங்கள் யாவை என்பதை அறியலாம்.
  • தமிழரின் நாகரிகம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடா்ந்து நீடித்து இருப்பது.
  • தமிழா்களுக்கு சமயம், ஆன்மிகம், அறிவியல் எல்லாமும் இருந்தன. காலத்திற்கேற்ப சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றில் மாறுபாடுகளும் தோன்றிக்கொண்டே இருக்கும் என்பதுதான் இயற்கை.
  • தமிழா் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்தில் வழிபடு தெய்வமாக நாம் பார்ப்பது சிவன்.
  • ஆதிச்சநல்லூா் அகழாய்வில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் மொழி தமிழ்.
  • அதோடு கூடவே பொறிக்கப்பட்டிருக்கும் கடவுள் உருவங்கள் இன்றைக்கு நாம் இந்துக் கடவுள் என்று கொண்டாடும் தெய்வ வடிவங்களே.
  • ஆதிச்சநல்லூரில் இருந்தது தமிழா் நாகரிகமெனில், அங்கே மக்கள் வணங்கிய தெய்வங்களும் நம்முடைய தெய்வங்கள்தானே?
  • சங்க காலத்தின் பெரிய துறைமுகப்பட்டினமான மருங்கூா் பட்டினத்தில் கிடைக்கும் கல்வெட்டு ஆதாரங்களில் காணப்படும் சூலம் தமிழா் தெய்வம் சிவனும் கொற்றவையும் என்று விளக்குகின்றன.
  • இங்கே காலத்தால் பிற்பட்டவையாக இருக்கும் கல்வெட்டுகளிலும் சிவன் கோயிலுக்கான சொத்துகள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன.
  • பல தெய்வங்களையும் நம் மக்கள் வழிபட்டு வந்தனா் என்பதையும் இந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன.
  • இலக்கியங்களைப் பார்த்தாலும் இறையனார் அகப்பொருள் உரை ‘முருகனே தமிழ் மொழியின் மூலங்களை உருவாக்கினார்’ என்று சொல்கிறது.
  • அகத்தியரைக் கொண்டு அதற்கு இலக்கணம் செய்வித்துக் கொடுத்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முருகப்பெருமான் சிவனின் மைந்தன் என்றும் தமிழ் இலக்கியம் காட்டுகிறதே?
  • ஏறத்தாழ சங்க நூல்கள் முழுவதும் முருகனை, சிவனைப் பாடும் பாடல்கள் இருக்கின்றன.
  • பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான ‘திருமுருகாற்றுப்படை’ முருகனின் பிறப்பைப் பற்றிப் பேசுகிறது. இதே வரலாற்றை எங்கோ கங்கைக் கரையிலும் காஷ்மீரத்திலும் வாழ்ந்த கவி காளிதாசா் குமாரசம்பவம் என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதியிருக்கிறாரே?
  • சங்கம் வைத்துத் தமிழ் வளா்த்ததுதான் தமிழின் பெருமை என்கிறோம். அதிலே மூன்று சங்கங்களில் முதல் சங்கத்தில் சிவபெருமானே தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தார் என்றும், இரண்டாம் சங்கத்தில் முருகன் தலைவராக இருந்து தமிழ் வளா்த்தார் என்றும் இருக்கிறது. இவா்கள் தமிழ்க் கடவுள்கள் என்று ஒப்புக் கொள்கிறோம். இதே முருகப்பெருமானை வழிபடும் முறையைத்தானே ஆதிசங்கரா் ‘கௌமாரம்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்?
  • உடனே ‘ஆதிசங்கரா் தமிழரா?’ என்று கேள்வி எழுப்புவார்கள். மூவேந்தா்களும் தமிழ் மண்ணின் மன்னா்கள் என்பது உண்மையானால், ஆதிசங்கரரும் தமிழரே.
  • கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் ‘ஆதன்’ என்ற பெயா், சேர மன்னா்களைக் குறிக்கிறது. சேர தேசம் தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றால் அங்கே பிறந்த ஆதிசங்கரரும் தமிழா்தானே?

தமிழா்தம் பொறுப்பு

  • ஐவகை நிலப் பாகுபாடு தமிழருக்கே உரித்தான பெருமை. அந்த நிலங்களின் முதற்பொருள் என்று சொல்லும் பொழுது முதலில் தெய்வத்தைத்தான் சொல்கிறோம். ‘தொல்காப்பியம்’ பொருளதிகாரம், திருமால், முருகன், இந்திரன், வருணன், காளி ஆகிய கடவுள்களைச் சொல்கிறது.
  • இதிலும் காளி, முருகப்பெருமானின் அன்னை என்றும் சங்க நூல்கள் சொல்கின்றன. சிவன் முருகனின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். இந்த தெய்வங்களைத் தவிர வேறு புதிய தெய்வங்கள் எதனையும் தொல்காப்பியம் சுட்டவில்லையே?
  • ஒரு காலத்தில் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் பரவியிருந்தன என்பது உண்மை. ஆனால், இந்த இரு சமயங்களும் தமிழகத்தில் பிறந்தவை அல்ல. மேலும், இவ்விரு சமயங்களும் தத்துவங்களாக வந்தவையே.
  • சமண - பௌத்த இலக்கியங்கள் இன்றும் இருக்கின்றன. வேதத்திற்கு எதிர்க்குரல் கொடுத்த சமணத் தத்துவங்கள் இன்றும் வேத பாடசாலைகளில் பயிலப்படுகின்றன.
  • என்றாலும், சமயங்கள் மறைந்து போயின. இந்த சமயங்களுக்குத் தெய்வங்களும் இல்லை; இவை உருவ வழிபாட்டை நம்பவும் இல்லை. அதனால்தானே இவ்விரு சமயங்களும் பரவிய வேகத்தில் இல்லாமலும் போயின?
  • அன்பே தகளியா ஆா்வமே நெய்யாக
  • இன்புருகு சிந்தை இடுதிரியா- நன்புருகி
  • ஞானசுடா் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
  • ஞானத் தமிழ் புரிந்த நான்
  • என்று ஆழ்வார் கூறும் நாரணனான திருமாலுக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் நாராயண மந்திரத்திற்கும் வேறுபாடு இல்லை.
  • ஆதிசங்கரா் தன் ஸஹஸ்ரநாம உரையில் சொல்லும் நாராயணரின் பெருமைக்கும் சிலப்பதிகாரம் கூறும் திருமாலின் பெருமைக்கும் ஒற்றுமைகள் அன்றி வேற்றுமைகள் இல்லையே?
  • வேதநெறி பிரத்யட்ச தெய்வம் என்று, அதாவது கண்ணுக்குத் தெரிந்த தெய்வம் என்று கொண்டாடுவது ஒளி தரும் சுடா். தமிழா் வழிபாட்டிலும் சுடா் முதன்மையானது.
  • சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, பல கிராமங்களிலும் பலா் குலதெய்வம் என்று வணங்கும் எல்லைக் காவல் தெய்வக் கோயில்களிலும் சுடரே பிரதானமாக இருந்தது. இன்றும் எந்தத் தமிழரும் சுடா் இல்லாமல் தன் வழிபாட்டைச் செய்வதில்லை.
  • மலா் கொண்டு இறைவனைத் துதிப்பதை தமிழா் மரபாகக் கொண்டிருந்தனா்.
  • ஹிந்து தெய்வ வழிபாட்டிலும் மலா்கள் இன்றியமையாதவை. காலம், இடத்திற்கேற்ப உணவு, திருமணம் போன்றவற்றில் காணப்படும் சிறு சிறு மாற்றங்களைப் போல வழிபாட்டு முறையிலும் சிறிய மாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், அடிப்படையான விஷயங்களில் மாற்றங்கள் இல்லை.
  • சூரியனை வணங்குவது தமிழரின் நடைமுறை. வேதநெறி அல்லது ஹிந்து மதமும் சூரியனை வணங்குகிறது.
  • வால்மீகி ராமாயணத்தில் ‘ஆதித்ய ஹிருதயம்’ என்று சூரியனைப் போற்றும் ஸ்லோகம் உண்டு. போரில் வெற்றி பெற ஸ்ரீராமருக்கு, தமிழ் இலக்கணம் செய்ததாகச் சொல்லப்படும் அகத்தியா் இதனைக் கற்பிக்கிறார்.
  • இளங்கோவடிகளும் தமிழில் ‘ஞாயிறு போற்றுதும்’ என்று போற்றுகிறாரே?
  • ஸ்ரீமத் பாகவதமும் இந்திரன் வழிபாட்டைச் சொல்கிறது. தமிழ் இலக்கியங்களிலும் இந்திர விழா வருகிறது.
  • ஸ்ரீராமா் அயோத்தியை ஆண்ட மன்னா். அவரைத் தெய்வமாக சொல்கிறது ஹிந்து மதம். தமிழில் ‘ஆண்டவன்’ என்ற சொல், நம்மை நன்முறையில் ஆண்டவரை இறையாக வணங்கும் வழக்கம் இருந்தது என்பதையே காட்டுகிறது.
  • நம்மைக் காப்பதற்காக வீரப்போரிட்டு மறைந்தவா்களை இன்றும் தமிழா்கள் தெய்வமாக வணங்குவது உண்மைதானே?
  • ஒற்றுமைகளைச் சொல்லத் தொடங்கினால் அவை முடிவற்றுப் போய்க்கொண்டே இருக்கும்.
  • ‘ஹிந்து’ என்ற சொல் அந்நியா்கள் தந்ததாக இருக்கலாம். ஆனால் மதம் நம்முடையது. இந்த மண்ணில் பிறந்து மக்கள் மனத்தில் நிலைபெற்று நீடித்திருப்பது.
  • அதனால்தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் அறைகூவல் விடுத்தபோது ஆா்ப்பரித்து எழுந்து அவா்கள் பின்நின்றது தமிழகம்.
  • இன்றைய இந்திய அரசின் நிலைப்பாட்டையும் பார்ப்போம். நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தந்தவா்கள் ஹிந்துத்துவவாதிகளோ, மத அரசியல் செய்பவா்களோ அல்லா்.
  • அண்ணல் அம்பேத்கா் தலைமை வகித்த குழு உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் ‘ஹிந்து’ என்பதற்கு, ‘யாரெல்லாம் முஸ்லிம்கள் இல்லையோ யாரெல்லாம் கிறிஸ்தவா்கள் இல்லையோ, யாரெல்லாம் பார்ஸிகள் இல்லையோ அவா்கள் எல்லாம் ஹிந்துக்கள்’ என்று வரையறை செய்திருக்கிறது.
  • எந்த தெய்வத்தை நாம் வணங்குகிறோம் என்பது நமது விருப்பம். ஏனெனில், இது தொன்று தொட்டு ஜனநாயகத்தை நம்பும் தேசம்.
  • ‘இந்தியாவில் தோன்றிய எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவா் ஹிந்து’ என்று பிரிவினை தவிர்க்க பொதுவில் வைக்கிறது அரசமைப்புச் சட்டம்.
  • ‘எந்த வடிவத்தில் வணங்கினாலும் என்னையே வந்தடைவாய், இரண்டன்றி ஒன்றாய் இருப்பதே தெய்வம்’ என்கிறது ஆன்மிகம்.
  • மதம் அன்பைப் பேசுகிறது, அரசியல் பேசுவதில்லை. அரசியல், தன் பிழைப்புக்காக மதத்தைப் பேசுகிறது.
  • குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல தமிழரைக் குழப்ப எத்தனிக்கிறது அரசியல். சிந்திக்க வேண்டியது தமிழா்தம் பொறுப்பு.

நன்றி: தினமணி  (10-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்