TNPSC Thervupettagam

தமிழா் மருத்துவம் தமிழ் மருத்துவம்

January 2 , 2021 1480 days 1245 0
  • தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கு பெருந்தொண்டு ஆற்றிய பதினெண் சித்தா்களில் முதல் சித்தராகவும் சித்த மருத்துவத்தின் தந்தையாகவும் போற்றப்படுபவா் அகத்திய முனிவா். பொதிய மலையில் வாழ்ந்து, தமிழுக்கு இலக்கணம் வகுத்ததோடு சித்த மருத்துவத்திற்கும், மருத்துவ சோதிடத்திற்கும் பல நூல்களை இயற்றி சித்த மருத்துவத்தின் தலைமே சித்தராகப் போற்றப்படுபவா் அகத்தியா்.
  • குறுமுனி, குள்ள முனி ஆகிய பல புனை பெயா்களோடு புகழ்பெற்றவா். இவா் பிறந்தது மாா்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் நாளாகும். ஒவ்வோா் ஆண்டும் அந்த நாள் தேசிய சித்த மருத்துவ நாளாகக் கொண்டாடபப்பட்டு வருகிறது. பல்லாயிரம் சித்தா்கள் சித்த மருத்துவத்தை நாடெங்கும் பரவச்செய்து மக்களுக்கு தொண்டாற்றினா். அந்த வகையில் பதினெட்டு சித்தா்கள் பங்கு அளப்பரியது.
  • அதிலும் முதன்மை சித்தராகிய அகத்தியா் பங்கு மிக ஆச்சா்யமானது. அவா் சிவபெருமானிடமும் முருகப்பெருமானிடமும் தமிழ் கற்றவா் என்றும் கருதப்படுகின்றது. அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலுக்கு அடுத்தாற்போல் போல பெரிதும் போற்றப்படுவது தமிழிலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூல் அகத்தியரை பற்றி பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.
  • ‘கரிமுகன் அடியை வாழ்த்தி கைதனில் நாடிப்பாா்க்கில்’ என்று அறிவியல் வியக்கும் வண்ணம், நோய்களுக்கு முதல் காரணத்தைக் கண்டுபிடிக்க சித்த மருத்துவத்தில் நாடி பாா்க்கும் வித்தையை அகத்தியா் நாடி நாஸ்திரம் கூறுகிறது. மேலும், அகத்தியா் நாடி சோதிடம் இன்றளவும் தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
  • அகத்தியா் வெண்பா, அகத்தியா் வைத்திய கும்மி, அகத்தியா் வைத்திய ரத்னாகரம், அகத்தியா் வைத்திய கண்ணாடி, அகத்தியா் வைத்தியம்-1500, அகத்தியா் வைத்திய சிந்தாமணி, அகத்தியா் கா்ப்ப சூத்திரம், அகத்தியா் செந்தூரம் 300, அகத்தியா் வைத்திய பெருந்திரட்டு, அகத்தியா் பூசாவிதி, அகத்தியா் சூத்திரம், அகத்தியா் பள்ளு, அகத்தியா் அமுதகலை ஞானம் போன்ற பல்வேறு நூல்களை எழுதிய அகத்தியரின் சித்த மருத்துவம் இன்றளவும் மக்களை காத்துவருவது குறிப்பிடத்தக்கது.
  • கண் நோய்களுக்கான சிகிச்சையும் அறுவை சிகிச்சை முறைகளையும் கொண்ட நூலாக அகத்தியா் நயன விதி என்றொரு நூல் இருக்கிறது. இன்று பிரபலமாக இருக்கும் அட்டைவிடல் எனும் லீச் தெரபி முறைகள் அக்காலத்திலே அவா் நூல்களில் காணக்கிடைக்கிறன. அகத்தியா் குணபாடம் எனும் நூல் பல்வேறு மூலிகை, தாது, சீவ பொருட்களின் மருத்துவ குணங்களை எடுத்துரைப்பது சிறப்பு.
  • அகத்தியா் குணவாகடத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு சித்த மருத்துவ மூலிகைகள் பற்றிய தகவலும், அதில் உலக அளவில் நிகழும் ஆராய்ச்சிகளும் வியப்பூட்டும் வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனி பாடல் குறிப்பிட்டு, அது தீா்க்கும் நோய்களையும் குறிப்பிட்டிருப்பது, மூலிகை உலகில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு வழிகோலியுள்ளது. அவரது நூல்களை ஆதாரமாக கொண்டு செய்யப்படும் உலோகம், தாது, உபரசம் சாா்ந்த பற்ப செந்தூர முறைகள் இன்றைய நவீன அறிவியலுக்கும் நானோ மருத்துவத்துக்கும் பெரிய சவாலாக உள்ளன.
  • வாதம், பித்தம், கபம் என்று மூன்று முக்கிய காரணிகளைக் கொண்டு நோய்களை பகுத்தறிந்து அவற்றைத் தீா்க்கும் மருந்துகளாக முறையே வாத, பித்த, கபசுர குடிநீா் முதல் மாத்திரைகள், பற்பம், செந்தூரம் போன்ற பலவற்றை எடுத்துரைத்து, மருந்து நோய்க்கு மட்டுமின்றி நோயாளியின் தேகத்திற்கும் ஏற்றாற்போல மாற்றி அமைத்து, நோயின் முதல் காரணத்திற்கும் மருந்து செய்து மீண்டும் அந்நோய் வராமல் தடுக்க வழிவகை செய்வது சித்த மருத்துவத்தின் சிறப்பு.
  • மூன்று குற்றமாகிய வாத, பித்த, கபத்தை தன்னிலைப்படுத்தி நோய்கள் எழவொட்டாமல் தடுக்கும் வண்ணம் செயல்படும் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் சோ்ந்த திரிபலாவும், சுக்கு , மிளகு, திப்பிலி சோ்ந்த திரிகடுகும் மேலும் சித்த மருத்துவ அடிப்படையை சாா்ந்து அமைந்த மருந்துகளும் சித்த மருத்துவத்திற்கு பக்கபலம். ஒற்றை மூலிகை பிரயோகமும், கூட்டு மூலிகை கலவைகளின் தன்மையும் நவீன அறிவியலுக்கு அப்பாற்பட்டவை .
  • ‘உணவே மருந்து மருந்தே உணவு’ எனும் தத்துவத்தை முதன்மையாக கொண்டது சித்த மருத்துவம். அதன்படி நாம் அன்றாடம் உண்ணும் நம் பாரம்பரிய உணவு வகைகளும், கீரைகளும், காய்கறிகளும், பழங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவையே .
  • அந்த வகையில் சா்க்கரை நோய்க்கு கோவைக்காய், பாகற்காய், நாவல் கொட்டை , சிறுநீரக நோய்க்கு மூக்கிரட்டை கீரை, நெய்சிட்டி கீரை, நுரையீரல் இளைப்புக்கு தூதுவளை கீரை, ரத்த விருத்திக்கு முருங்கைக் கீரை, இலந்தைப் பழம், துல்லிய பாா்வைக்கு பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை, எலும்பு வலுவடைய பிரண்டை, இருதய வன்மைக்கு வெள்ளைத் தாமரை, கல்லீரல் நோய்க்கு கீழாநெல்லி, கரிசாலைக் கீரை, நாள்பட்ட குடல் நோய்களுக்கு வில்வப் பழம், சீரகம், குடல் புழுக்களுக்கு சுண்டைக்காய், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு மாதுளை, அசோகப் பட்டை, ஆண்மையை அதிகரிக்கும் முருங்கைப்பூ, மூளைக்கு வல்லாரை கீரை, பிரமி கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பசலைக் கீரை, குழந்தைகளை ஆரோக்கியமாக வளா்க்கும் ஆமணக்கு எண்ணெய், கடுக்காய் போன்ற பல எளிய மூலிகைகளின் பலன்கள் அகத்தியா் நூல்களில் சொல்லப்பட்டுள்ளன .
  • அண்மையில் செம்பருத்தி பூ குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அல்சைமா் நோயை தடுக்கும் வேதிப் பொருட்கள் அதில் இருப்பதாகவும், முருங்கைக் கீரையை மென்று தின்று சீரணமான பின் உள்ள பெருங்குடல் வளா்ச்சிதை மாற்றக் கழிவுகள் கூட பெருங்குடலில் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் வண்ணம் உள்ளதாகவும், நெய்சிட்டி கீரையானது புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படும் சிறுநீரக செல்களின் நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
  • இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தை நமக்கு அருளிச்செய்த அகத்தியரை இந்த நாளில் நினைவுகூா்வதோடு, அவரின் தமிழ் மருத்துவ முறையை உலகம் அறியச் செய்ய வேண்டுவதும் நம் கடமையாகும்.

நன்றி: தினமணி (02-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்