- பிரான்சு நாட்டைச் சார்ந்த லூயி பிரெயில், பார்வையற்றவர்கள் தொட்டுணரக்கூடிய பிரெயில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்தார். பின்னர், பார்வையற்றவர்களின் கல்வி கற்கும் சூழல் புதிய அத்தியாயத்தை எட்டியது.
- தொடக்கத்தில் ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வக வடிவ அமைப்பில் இருந்தது. பின்னர் அது எட்டுப் புள்ளிகள் கொண்டதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தொடக்கத்தில் புடைப்புத் தாளில் அச்சிட்டுப் படிக்கத்தக்கதாக இருந்த இந்த பிரெயில் எழுத்துகள் தற்போது கணினி, அறிதிறன்பேசி சாதனங்களுடன் இணைக்கும் புதுப்பிக்கத்தக்க பிரெயில் காட்சிகளைப் பயன்படுத்திப் படிக்கும் வகையிலும் வளர்ச்சி பெற்றுள்ளது.
- பிரெஞ்சு மொழியில் தோற்றம் பெற்ற இந்த எழுத்துமுறை, இன்று 133 மொழிகளுக்குமேல் பிரெயில் குறியீடுகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரெயில் எழுத்துமுறையை முதன்முதலில் பிரெஞ்சு அல்லாத பிற மொழிகளுக்குத் தழுவியபோது பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- 1878-ஆம் ஆண்டு, பாரீஸில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான வேலைவாய்ப்பு சார்ந்த சர்வதேச மாநாட்டில்தான் சர்வதேச பிரெயில் தரநிலையொன்று உருவாக்கப்பட்டது. அந்த மாநாட்டில் பல்வேறு மொழிகளுக்கான எழுத்துகளின் பிரெயிலி குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைக்கும் முறை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
- அந்தச் சர்வதேச மாநாட்டின் மூலமாக விவாதிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் எட்டப்பட்ட ஒருங்கிணைந்த பிரெயில் எழுத்துமுறையானது, இந்திய மற்றும் ஆப்பிரிக்க மொழிகள், அரபு, வியத்நாம், ஹீப்ரு, ரஷியன் உள்ளிட்ட உலக மொழிகள் பலவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.
- முழுவதும் பார்வைத் திறனிழந்த அல்லது பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் சிறிய வயதிலிருந்தே அடிப்படை பிரெயில் முறைகளைக் கற்கத் தொடங்கி, அவர்கள் வயதாகும்போது சரளமாக பிரெயில் வாசிப்பவர்களாக மாறும் நிலை இன்று வெகு எளிதாகியுள்ளது. பார்வையற்ற குழந்தைகளுக்கான வளமான சூழல்களையும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை அறிவதற்கும், ஆராய்வதற்குமான வாய்ப்புகளை பிரெயில் நூல்கள் வழங்கியுள்ளன.
- பாடத்திட்ட நூல்கள், இதழ்கள், அகராதிகள், நாவல்கள், சிறுகதைகள், பொது அறிவு நூல்களுடன் தொட்டுணரக்கூடிய பட பிரெயில் புத்தகங்களும் தற்போது வெளிவந்துள்ளன.
- தமிழிலும் சில பிரெயில் நூல்கள் வெளிவந்துள்ளன. க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் சில நாவல்களையும், சிறுகதைகளையும், இலக்கண நூல்களையும் பிரெயில் பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
- 2011-ஆம் ஆண்டு 52 தொகுதிகள், 5000-க்கும் மேற்பட்ட பிரெயில் பக்கங்கள்கொண்ட தற்காலத் தமிழ் அகராதியைப் பிரெயிலில் அவர் வெளியிட்டார்.
- ஹேமச்சந்திர பருவால் தொகுத்த சம்ஸ்கிருத உச்சரிப்பின் அடிப்படையில் அமைந்த அஸ்ஸôமி மொழியின் முதல் சொற்பிறப்பியல் அகராதியான "ஹேம்கோஷ்' பிரெயில் பதிப்பின் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்திருக்கிறது. இந்த அசாமி பிரெயில் அகராதி 10,279 பக்கங்களில் 21 தொகுதிகளாக அமைந்துள்ளது.
- இப்படியான பிரெயில் பதிப்புகளின் வரலாற்றுப் பின்னணியில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள 46 நூல்கள்தான் பிரெயிலில் இதுவரை வெளியான அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகமானவையாகும். 46 நூல்களும் 115 தொகுதிகளாக அமைந்துள்ளன. இவை அனைத்தும் ஏறத்தாழ 13,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்டுள்ளன.
- இந்தத் தொகுப்பில் தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கீழ்க்கணக்கு நூல்கள், தமிழின் சில அடிப்படை இலக்கண நூல்கள் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூல பாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கின்றன.
- இந்திய அளவில், ஏன் உலக அளவில் இப்படியான பெருந்தொகுப்புகளையும், அதிக பக்கங்களையும்கொண்ட பிரெயில் பதிப்புகள் இப்போதுதான் வெளிவந்திருக்கின்றன. இவற்றுக்கு உரிய நிதியை மத்திய அரசு செம்மொழி நிறுவனத்திற்கு அளித்திருக்கிறது.
- 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கமம் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
- பார்வை மாற்றுத்திறனாளிகளின் பயன்கருதி இந்நூல்கள் அனைத்தையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.
- மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழுள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின்கீழ், சென்னையில் செயல்பட்டுவரும், பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கு உரிய அதிகாரமயமாக்கலுக்கான தேசிய நிறுவனம், இந்நூல்களைச் சிறப்பாக அச்சிட்டு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே மத்திய அரசுசார் பிரெயில் அச்சகம் இதுதான்.
- முக்கியமான பொது நூலகங்கள், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம், கல்லூரி நூலகங்கள் ஆகியவற்றுக்கு இலவசமாக அனுப்பிவைக்கும் பணியைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. இந்த பிரெயில் நூல்களைப் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அனுப்பும் பணியையும் நிறுவனம் செய்ய உள்ளது.
- பார்வை மாற்றுத்திறனாளிகள்மீதும், அவர்களது அறிவு வேட்கையின்மீதும் பெரும் நம்பிக்கையும், கரிசனமும்கொண்டு அவர்களுக்கு விலையில்லா பிரெயில் புத்தகங்கள் வழங்குவதைச் செம்மொழி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நன்றி: தினமணி (11 – 03 – 2024)