TNPSC Thervupettagam

தமிழில் மருத்துவக் கல்வி: நம்பிக்கை ஒளி தரும் கலங்கரை விளக்கம்!

November 2 , 2024 68 days 84 0

தமிழில் மருத்துவக் கல்வி: நம்பிக்கை ஒளி தரும் கலங்கரை விளக்கம்!

  • தமிழில் மருத்துவ அறிவியல்! தமிழ்வழியில் படித்த மருத்துவ மாணவர்கள் அந்நிய மொழியைக் கண்டாலே மிரள்வார்கள். அவர்களில் நானும் ஒருவன். மொழி புரியாமல் தேர்வுக்கான தயாரிப்புக்கு மனனம் செய்யும் நிலைமைதான் பலருக்கும் ஏற்படும். இந்தப் பின்னணியில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள ‘மருத்துவ உடற்செயலியல்’ என்னும் மருத்துவ நூல், ‘தமிழில் மருத்துவக் கல்வி சாத்தியமே!’ என்பதை உறுதிசெய்துள்ளது.
  • கைட்டன் (Guyton), ஹால் (Hall) எனும் இரண்டு மருத்​துவர்கள் எழுதிய முதலாண்டு மாணவர்​களுக்கான ‘Medical Physiology’ மருத்துவ நூல் தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்​டிருக்​கிறது. மொழிபெயர்ப்​பதில் பல மருத்​துவர்கள் இணைந்து பணியாற்றி​யிருக்​கிறார்கள். இவர்கள் எந்தச் சூழலில் இப்பணியைச் சிரமேற்​கொண்​டார்கள் என்பது முக்கியம். நவீன மருத்​துவக் கலைச்​சொற்​களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவும் வகையில் ஒரு முழுமையான மருத்​துவக் கலைச்சொல் அகராதி தமிழில் இல்லை. மணவை முஸ்த​பாவின் ‘மருத்​துவக் களஞ்சியம் பேரகராதி’, டாக்டர் சாமி சண்முகம் தொகுத்​துள்ள ‘மருத்​துவக் கலைச்​சொற்​கள்’, சென்னைப் பல்கலைக்​கழகத்தில் இயங்கிவரும் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ வெளியிட்​டுள்ள ‘கலைச்சொல் அடைவு’, தமிழ்நாடு பாடநூல் - கல்வி​யியல் பணிகள் கழகத்தின் ‘அறிவியல் சொல்ல​க​ராதி’, ப.அருளி தொகுத்த ‘அருங்​கலைச்சொல் அகரமுதலி’, சொற்கு​வை.​காம்... இவைதான் தற்போது மருத்​துவச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவர உதவுபவை. ஆனால், இவையும் முழுமையாக இல்லை.
  • அடுத்து, நவீன மருத்​துவச் சொற்கள் கிரேக்க, லத்தீன் மொழிகளின் அடிப்​படை​யில்தான் பெரும்​பாலும் இருக்கும். இயற்சொற்கள், மரபுவழிச் சொற்கள், சிறப்புச் சொற்கள், ஒப்பு​மை​யாக்கச் சொற்கள், பயன்பாட்டுச் சொற்கள் என மருத்துவ மொழிபெயர்ப்பில் சொற்களைத் தேடித்​தேடிப் பெயர்க்க வேண்டும். அவை தமிழ் இலக்கணத்​துக்குப் பொருத்​த​மாகவும் இருக்க வேண்டும். இந்தப் பின்னடைவு​களைக் கருத்தில் கொண்டு, மருத்​துவக் கலைச்​சொற்​களைத் தமிழுக்குக் கொண்டு​வரு​வதில் மிகுந்த சிரமங்களை மேற்கொண்​டும், ஓய்வில்லாத மருத்​துவப் பணிகளுக்கு இடையில் கடுமையான உழைப்பைச் செலுத்​தி​யும்தான் ‘மருத்துவ உடற்செயலியல்’ நூல் மொழிபெயர்ப்பு சாத்தி​யப்​பட்​டிருக்​கிறது.
  • நூலில், மைய நரம்பு மண்டலம், ஒருங்​கிணைந்த உடற்செயலியல் ஆகிய பகுதிகளை மொழிபெயர்த்த மருத்​துவர்கள் அதிக கவனத்​தோடும், மாணவருக்குப் புரிதல் முக்கியம் என்ற நோக்கத்​தோடும் செயல்​பட்​டிருப்பதை உணர முடிகிறது. இந்தப் பகுதி​களில் இடம்பெற்றுள்ள எல்லாப் பாடங்​களும் எளிமையான மொழியில் தரப்பட்​டுள்ளன; அதேவேளை​யில், அறிவியல் ஒழுங்​கி​லிருந்து விலகாமலும், தரமான, சுவாரசியமான மொழிபெயர்ப்​பாகவும் இருக்​கின்றன.
  • இதய நாள மண்டலம், சுவாச மண்டலம், இரைப்பை – குடல் மண்டலம் ஆகிய பகுதிகள் அனைவரும் விரும்பிப் படிக்கும் பகுதிகள் என்பதால், இவற்றில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கலைச்​சொல்​லாக்​கங்கள் மிகவும் இயல்பாக இருக்​கின்றன. வாசித்தவுடன் மனதைப் பற்றிக்​கொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ரத்தமும் அதன் கூறுகளும்’ பகுதி மிகவும் எளிமையாக மொழிபெயர்க்​கப்​பட்​டிருக்​கிறது. நூலின் முதல் இரண்டு பகுதிகள் கூகுள் மொழிபெயர்ப்பு போன்று சற்றே தடுமாறும் உலர்ந்த மொழிநடையில் தரப்பட்​டிருக்​கிறது.
  • சிறுநீரக மண்டலம் பகுதியில் கலைச்​சொல்​லாக்​கத்தைக் கையாண்​டதில் நிறையத் தடுமாற்​றங்கள் தெரிகின்றன. உதாரணமாக, 76ஆவது பாடத்தின் தலைப்பு பொருத்​தமில்லை. ‘நெஃப்​ரான்’ (Nephron) என்பது ‘சிறுநீரக அணு’ என்பதைப் பள்ளி மாணவர்​கள்கூட அறிவர். இந்த நூலில் ‘நெஃப்​ரான்’ என்றே பயன்படுத்​தப்​பட்​டிருக்​கிறது. ‘Regulation’ என்பதைக் ‘கட்டுப்​பாடு’ என்கிறார்கள். ‘ஒழுங்​கு​முறை’ என்று சொல்வதுதான் பொருத்தம். ‘Control’ என்பதுதான் கட்டுப்​பாடு. நாளமில்லாச் சுரப்பி மண்டலம் பகுதியை இன்னும் எளிமைப்​படுத்​தி​யிருக்​கலாம். ‘Hormone’ என்பதை ‘ஊனீர்’ என்கிறார்கள். இதற்கு ‘இயக்​குநீர்’ என்பதே பொருத்தம். அதுபோல் ‘Myxedema’ என்பதை ‘சளியழற்சி’ என்று அழைப்​ப​தற்குப் பதிலாக ‘நீர்க்​கட்டு வீக்கம்’ என்பதே பொருத்தமாக இருக்​கும்.
  • இனப்பெருக்க மண்டலப் பாடங்கள் முழுவ​திலும் தூய தமிழ் மிளிர்​கிறது. அதேநேரத்​தில், அது வாசிப்பைக் கடினமாக்கு​கிறது. இந்தப் பகுதியில் முதல் இரண்டு பாடங்​களுக்கு ஆங்கிலத் தலைப்புகள் அடைப்​புக்​குறிக்குள் கொடுக்​கப்​பட​வில்லை. ஆங்கிலப் பதிப்பு நூலின் துணைகொண்​டுதான் இவற்றைப் படிக்க முடியும். இந்தப் பகுதியில் அலகுகளைக் (Units) குறிப்​பிடும் எழுத்​துருக்கள் திருத்​தப்பட வேண்டும். இது தேர்வுக்குத் தயாரிக்க உதவும் நூல் என்பதால் இந்த ஒழுங்கு அவசியப்​படு​கிறது.
  • இந்த நூலில், ஆங்கில மருத்​துவக் கலைச்​சொற்​களுக்கு இணையாகத் தமிழில் புதிய கலைச்​சொற்களை ஏராளமாக வழங்கித் தமிழுக்கு வளம் சேர்த்திருக்​கிறார்கள். அதேவேளை​யில், ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள மருத்​துவத் தமிழ்ச்​சொற்களை மறந்து​விட்டு, ஆங்கிலத்தில் அப்படியே வழங்கிச் சறுக்கியும் இருக்​கிறார்கள். பல சொற்களைத் தவறாகவும் வழங்கி​யிருக்​கிறார்கள். வளம் சேர்த்​தவற்றில் சில: Ventilation - காற்றூட்டம், Pituitary – சுவலி, Thyroid – வீதனக்​கோளம், Hormone - இசைமம். சறுக்​கிய​வற்றில் சில: லிப்பிடுகள் (Lipids), நியூரான் (Neuron), லிம்போசைட்டுகள் (Lymphocytes). இவை முறையே கொழுப்பு அல்லது கொழுப்புத் தொகுதி, நரம்பணு, நிணநீர் அணுக்கள் என்று பள்ளிப் பாடங்​களிலேயே இருக்​கின்றன. தவறானவற்றில் சில: Plasma - நிணநீர், Testicles - விந்தணுக்கள், Tadpole - அரைத்​தவளை. இவை முறையே ஊனீர், விரைகள், தலைப்​பிரட்டை என்று இருக்க வேண்டும்.
  • அடுத்து, ஆங்கிலத்தில் ‘and’ என்பது தமிழில் ‘மற்றும்’ ஆகாது. நூலின் பாடத் தலைப்பு​களில் தொடங்கி துணைத் தலைப்புகள், வாக்கி​யங்கள், படத் தலைப்புகள், அட்டவணைகள் என எல்லா​வற்றிலும் ‘and’க்குப் பதிலாக ‘மற்றும்’ என்றே மொழிபெயர்த்திருக்​கிறார்கள். இது இலக்கண வழியில் பிழை என்பது மட்டுமல்​லாமல், வாசிப்பின் வேகத்​தையும் குறைக்​கிறது. உதாரணமாக, செல் மற்றும் அதன் செயல்​பாடுகள், இதயம் மற்றும் இரத்தநாள அமைப்பு. இவற்றை ‘செல்லும் அதன் செயல்​பாடு​களும்’, ‘இதயமும் இரத்தநாள அமைப்பும்’ என்று மாற்றி​யிருந்​தால், தமிழுக்கு இனிமை சேர்க்கும் உம்மை​களைப் பெற்று, அந்த வாக்கி​யங்கள் சிறப்பு பெற்றிருக்​கும்.
  • ஆங்கில மருத்துவ நூல்களைத் தயாரிக்​கும்​போது, அதற்கென ஒரு மொழி ஆசிரியர் நியமிக்​கப்​படுவது வழக்கம். நூலைப் பல பேர் இணைந்து எழுதும்​போது, மொழி நடையின் தரத்தை அவர் ஒரே சீராக அமைத்து​விடு​வார். ஒரு சொல்லுக்குப் பல பெயர்கள் தரப்படு​வதையும் சரிப்​படுத்​தி​விடு​வார். உதாரணமாக, இந்த நூலில் ‘Physiology’ எனும் சொல்லுக்கு உடலியல் என்று ஒருவரும், உடலியங்​கியல் என்று அடுத்​தவரும் உடற்செயலியல் என மற்றவர்​களும் பயன்படுத்​தி​யிருக்​கிறார்கள். மொழி ஆசிரியர் இருந்​திருந்​தால், நூலின் அட்டைப்​படத்தில் கூறியுள்​ளபடி, ‘உடற்​செயலியல்’ பதத்தை மட்டும் நூலெங்கும் வருமாறு செய்து​விட்டு, மற்ற இரண்டு பதங்களையும் அடைப்​புக்​குறிக்குள் போட்டு​விடு​வார். அதுபோல், ஆக்ஸிஜன் சொல்லுக்கு ஒரு மொழிபெயர்ப்​பாளர் ஆக்ஸிஜன் என்றே பயன்படுத்​தி​யிருக்​கிறார். அடுத்​தவர்கள் பிராணவாயு, உயிர்வளி எனப் பயன்படுத்​தி​யிருக்​கிறார்கள். இதை மொழி ஆசிரியர் ‘உயிர்வளி’ என்று அழகு தமிழுக்கு மாற்றி நூலெங்கும் ஒரேவித​மாகப் பயன்படுத்​தி​யிருப்​பார்.
  • இந்த நூலுக்கு மெய்ப்பு சரிபார்த்​த​தாகத் தெரிய​வில்லை. அட்டைப் பக்கம் தொடங்கி, நூல் முழுவ​திலும் எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், சந்திப் பிழைகள், வாக்கியப் பிழைகள், நிறுத்​தற்​குறி​யீட்டுப் பிழைகள் பரவலாகக் காணப்​படு​கின்றன. பற்களுக்கு இடையில் சிக்கிக்​கொண்ட பாக்குபோல் இவை நெருடு​கின்றன; நூலை ரசித்து வாசிக்கும் அனுபவத்​துக்குத் தடைபோடு​கின்றன. இந்தக் குறைகளை மறுஅச்சில் சரிப்​படுத்​தி​விட்​டால், இந்நூலைத் தமிழுலகம் பாராட்டி வரவேற்​கும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்