TNPSC Thervupettagam

தமிழில் மருத்துவம் சாத்தியம்!

August 8 , 2024 112 days 113 0

தமிழில் மருத்துவம் சாத்தியம்!

  • மலர்தலை உலகம் அறிவியற்பாற்பட்டு ஆற்றல்மிக்கதாய் அனுதினமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் அறிவியல் காலமிது! தொழில்நுட்பம் வளர்ச்சியுற்ற நாடுகள்தான் வல்லமை பெறுகின்றன. அவைதான் அனைத்துலக மானிட வாழ்வின் போக்கை மாற்றுகின்றன என்றால் மிகையில்லை.
  • வளர்ந்து வரும் நாடுகளில் நம் இந்தியத் திருநாடு மனித வளம் நிறைந்த நன்னாடு. ஆற்றல்மிக்க இந்திய இளைஞர்களின் சக்தி அறிவியல் உலகத்திற்கு ஆற்றுப்படுத்தும் வல்லன்மை வாய்ந்தது. அறிவியல் ஆற்றலை நாம் கைக்கொள்ள வேண்டுமென்றால் நமக்குத் தேவை அறிவியல்சார் கல்வியில் தன்னிறைவு.
  • மனித இனம் ஆரோக்கியமாக, நலமாக வாழ பெரிதும் துணை நிற்பது மருத்துவமே. வாழ்க்கையின் இன்றியமையாத இடத்தை மருத்துவம் பிடித்திருக்கிறது. அத்தகு சிறப்புமிக்க மருத்துவக் கல்வியை நம் தாய்மொழியாம் தமிழில் பயிற்றுவிக்க இயலுமா என்ற வினாவிற்கு இயலும் என்று கங்கணம் கட்டிக் கூற முடியும்.
  • "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று நோயில்லாத் தன்மையை நம் முன்னோர் மிகப்பெரும் செல்வமாகக் கருதி வாழ்ந்தனர்.
  • 2050 ஆண்டுகளுக்கு முன்பே ஐயன் திருவள்ளுவர் "மருந்து' என ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார் என்பதும் இங்கு நோக்கி நெகிழத்தக்கது. ஒரு மொழியின் உயிர்ப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, தொடர்ச்சியில் இருக்கிறது என்பதற்கேற்றாற் போல், சங்க காலம் தொடங்கி பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டிலும் தமிழ்வழி மருத்துவம் சார்ந்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஆங்கில மருத்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்திற்கு வந்ததாகும். "அலோபதி' என்ற இந்த மருத்துவ இயலைப் பற்றிய நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. ஆகவே அவை அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டன.
  • ஆனால், ஐரோப்பிய மருத்துவத்தைத் தமிழில் கற்றுத்தர இயலும் என உறுதியாகக் கருதி செயற்படுத்தி முதன்முதலில் வழிகாட்டியவர் டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் என்ற அமெரிக்க மருத்துவர்தான். இவர் 1847-இல் இலங்கை வந்தார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டதோடு ஈழ நாட்டார்க்கு ஆங்கில மருத்துவம் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டார்.
  • அவர் தொடங்கி, தமிழ் அளவை நூற்சொற்களை மா.பாலசுப்பிரமணியம் செந்தமிழ் செல்வியில் வெளியிட்டது வரை பல முயற்சிகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டன.
  • விடுதலைக்கு முன்னர் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், அதன் செயலர் ஜான் முர்டாக்சின் முயற்சியில், வட்டார மொழியில் அடிப்படைக் கல்வி அனைவருக்கும் எட்ட வேண்டும் என்ற கருத்தில், 250 நூல்கள் வெளிவந்தன. அதில் 1927-ஆம் ஆண்டு, கண்ணோய் என்ற நூலிலிருந்து 1988 வரை சுகாதாரப் பணியாளர் பாடப்புத்தகம் வரை 11 நூல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல, சோவியத் யூனியன் தகர்வுக்கு முன்னர், அந்நாடு ஆற்றிய மருத்துவக் கல்விப் பணி பாராட்டத்தக்கதாக இருந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற நிறுவனம் தமிழகத்திலேயே முன்னோடியாக 40 மருத்துவ நூல்களுக்கும் மேல் வெளியிட்டுள்ளது.
  • 1932-இல் வெளியான அரசு கலைச்சொல் பட்டியலில் காணப்படும் குறைகளை நீக்கி, எளிதில் புரியும் வகையில் தமிழ்ச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் பட்டியல் ஒன்று தயாரிக்கும் பணிக்காக சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் ஒரு கலைச்சொல் குழுவை 01.10.1934-இல் அமைத்தது. இதன் முதற்கூட்டம் 29.09.1935 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அந்நிலையில் இக்கழகத் தலைவராக இசைத்தமிழ்ச் செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை செயல்பட்டார்.
  • அறிவியல் துறைச் சொற்கள் ஒன்பது நாள்கள் ஆராயப்பட்டதன் பயனாக 20.09.1936-இல் கலைச்சொல்லாக்க மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டை ஒட்டிப் பல துறை சார்ந்த 5,300 கலைச்சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது.
  • 1959-இல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1960-இல் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் முயற்சியால் கல்லூரிகளில் தமிழ், பாட மொழியாயிற்று. இப்படிப்புகளுக்குத் தேவையான பாடநூல்களைத் தயாரிக்க தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தொடங்கப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த நூல்கள் 1977 ஏப்ரல் முடிய 663 நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் 70 சதவீதம் அறிவியல் சார்ந்தவையாகும். 10 நூல்கள் மருத்துவம் குறித்ததாகும்.
  • கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1967-இல் இருந்து மருத்துவ நூல்களை வெளியிட்டுள்ளது. தமிழ் மொழிக்கென்றே அமையப் பெற்ற பல்கலைக்கழகமாம் தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவப் பாடத் திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட 14 மருத்துவ நூல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
  • முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியத்தின் வழிகாட்டுதலில் முனைவர் இராம.சுந்தரம் அவர்கள் தலைமையில் அந்தந்தத் துறைகளில் தலைசிறந்த மருத்துவர்கள், மருத்துவத் தமிழில் ஆர்வம் கொண்டவர்களும் அமர்ந்த குழு ஒன்று அமைக்கப் பெற்றது. அடிப்படை மருத்துவத்துக்கான நூல்களும் தமிழில் வெளியிடப்பெற்றன.
  • 1980-களில் தலைமைச் செயலகத்தில் வியாழன்தோறும் மதிய உணவுக்குப் பிறகு 3 மணி முதல் 4 மணி வரை எந்தையார் ஒüவை நடராசன் தலைமையில் சென்னை, பொது மருத்துவமனையின் நெஞ்சக மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம், நீரிழிவு மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஆகிய நால்வரும் ஆங்கில மருத்துவக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு பல சொற்களை உருவாக்கினார்கள்.
  • ஒரு முறை கூட்டத்திலே ஒüவை நடராசன் எய்ட்ஸ் என்ற நோய்க்கு தமிழாக்கத்தை "ஏமக்குறைவு' நோய் என்றும், பிறகு "ஏப்பு' என்று சுருக்கமாக ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக முடிவாற்றப்பட்டது. இந்நோயினால் உடல் விரைந்து சுருங்குவதனாலும் உடனே தேய்ந்து போய்விடுவதாலும் "தேய்வு நோய்' என்றே மாறி நிலைத்துவிட்டது வரலாறாகும்.
  • "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போலத்தான் மருத்துவர்கள் இன்றைக்கு எளிமையாக இனிமையாக எழுதவும் தொடங்கியுள்ளார்கள். மாபெரும் கண் மருத்துவரான கலைக்கோவன், மருத்துவர் நரேந்திரன் மருத்துவக் கலை சொல்லாக்கத்தின் கலைக்களஞ்சியங்கள் என்று சொன்னால் மிகையாகாது.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சிக் கழகம் மருத்துவ தலைப்பிலேயே 2001-ஆம் ஆண்டில் பன்னிரண்டு தொகுதிகளாக டாக்டர் வா.செ. குழந்தைசாமி தலைமையில் வெளியிட்டதை அறிவோம். அதில் உடல் நலம், தாய் சேய் நலம், புலன் உறுப்புகள், நரம்பு மண்டலம், செரிமான மண்டலம், மூச்சு மண்டலம், தொற்று நோய்களும் பால்வினை நோய்களும், புற்றுநோயும் முதியோர் நலமும், எலும்பியல் என்று தனித் தனித் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
  • தினமணி நாளிதழின் சனிக்கிழமை இணைப்பு இதழான தினமணி சுடரில் "சொல்லாக்க மேடை' என்னும் பகுதியில் தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதிய ஆசிரியர்கள் பயன்படுத்திய கலைச்சொற்களுள் ஏற்புடைய கலைச்சொற்கள், ஏற்க இயலாத கலைச்சொற்கள், பொருத்தமான புதிய கலைச்சொற்கள் ஆகியவை குறித்து அறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் விவாதம் இடம்பெற்றன.
  • மருத்துவ மொழிபெயர்ப்புகளில் உணர்வோ, நெகிழ்ச்சியோ நயமாக ஊட்டும் பணியைவிட கருத்து தெரிவிக்கும் பணியே முதலிடமும் சிறப்பிடமும் பெறும். எனவே, மருத்துவ நூல் மொழிபெயர்ப்புகளில் கவர்ச்சியின்றி விற்பனைக்கு வழிவகுக்கும் வகையில் அமைவது பெரும்பாலும் இல்லை என்ற காரணத்தினால் வணிக முறையில் அவை வெற்றி அடைவதில்லை.
  • இயற்சொற்கள், மரபு வழிச் சொற்கள், சிறப்புச் சொற்கள், ஒப்புமையாக்கச் சொற்கள் என்று மருத்துவ மொழிபெயர்ப்பில் சொற்களைத் தேடித்தேடிப் பெயர்க்க வேண்டும்.
  • உடலின் ஏதாவது ஓர் உறுப்பு தன் செயலினை இழப்பதை நாம் வாத நோய் என்று கூறுகிறோம். ஏதாவது ஒரு பக்கத்தில் முகம், கை, கால் செயல் இழப்பதற்கு பக்க வாதம் எனவும், பாரிச வாயு எனவும், இரண்டு கால்களும் செயல் இழப்பதற்கு கீல்வாதம் எனவும் கூறுவர். குழந்தைகளைப் பாதிக்கும் வாத நோய்க்கு இளம்பிள்ளை வாதம் என்று பெயர்.
  • முகத்தில் உள்ள ஒரு நரம்பு மட்டும் பாதிக்கப்பட்டு முகம் கோணும் தன்மைக்கு முகவாதம் என்று பெயர். இவ்வாறு வாதம் என்பது ஒரு நோயின் அறிகுறியாக வெளிப்பட்டு பல காரணங்களினால் உண்டாகிறது. மூளை, அனைவருக்கும் தெரியும். முன் பெருமூளை, நடுப் பெருமூளை, பின் பெருமூளை, கீழ் பெருமூளை, நடுமூளை, இணைமூளை என்று மூளையையே இவ்வளவு வகையாகச் சொல்லிக் காட்டலாம்.
  • அண்மையில் பேராசிரியர் மருத்துவர் செம்மல் முஸ்தபா "எம்.பி.பி.எஸ். தமிழில்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
  • "மருத்துவத்துக்கு மட்டும் 194 துறைகளைத் தெரிவு செய்துள்ளதாகவும், முதல் தொகுதி 34 பாடங்களைக் கொண்டு வெளியிடப் போவதாகவும் மேலும், அனைத்தையும் சேர்த்து 10,000 காணொலிகளை உருவாக்கி, கட்டுரை வடிவ நூல்களைப் படிக்கும் முறைமை மனிதச் சமூகத்துக்கு குறைந்து வருவதால் காணொலி வடிவக் கற்றல், மெய் நிகர் ஆசிரியர் போன்ற தொழில்நுட்ப முறைகளால் மருத்துவத் தமிழ் மகத்துவம் அடையும் காலம் மிக நெருக்கமாக உள்ளது' என்ற தொடர் உலகை நம் பக்கம் திருப்பும் என்பதற்கு நற்சான்றாகும்.

நன்றி: தினமணி (08 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்