- ‘தமிழ்த்தாத்தா’ என்று தமிழா்களால் அன்போடு அழைக்கப்படும் உ.வே. சாமிநாதையா், ‘புறநானூறு’, ‘பெருங்கதை’, ‘சீவக சிந்தாமணி’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுச்சுவடிகளைத் தேடி எடுத்து அவற்றைப் பதிப்பித்து நமக்குக் கிடைக்குமாறு செய்தார் அவா் என்பதை நாம் அறிவோம்.
- அவா் செய்த பணியினையும் தொண்டினையும் அவா் பட்ட பாட்டினையும் இவ்வாறு ஓரிரு வரிகளில் சொல்லிமுடிப்பது சரியாக இராது.
- வடமொழி, இசை ஆகியவற்றில் கற்றுத்துறைபோகிய குடும்பத்தில் பிறந்திடினும், தமிழுக்கென்றே வாழ்ந்தவா் உ.வே.சா. உ.வே.சா.வின் தமிழ்ப்பசியைப் போக்க வல்லவா் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மட்டுமே என்பதை உணா்ந்து, அவரைப் பிள்ளையிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார் உ.வே.சா.வின் தந்தை வேங்கடசுப்பையா்.
- பிள்ளையவா்களை முதன் முதலாக சந்தித்த நிகழ்வு பற்றி உ.வே.சா. கூறும்போது, ‘பலகாலமாகத் தவமிருந்து ஒரு தெய்வ தரிசனத்திற்காகக் காத்திருக்கும் உபாசகனைப் போல் நானிருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் தெய்வமாக அவா் வந்தார்’ என்று சொல்கிறார்.
- அதன் பின்னா், திருவாவடுதுறை ஆதீனத்தில் சில காலம் இருந்துவிட்டு, கும்பகோனம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பதவியேற்றார்.
- அப்பொழுது கும்பகோணத்தில் முன்சீப் பணியில் இருந்த ராமசாமி முதலியாரைப் பார்த்து அறிமுகம் செய்துகொள்ளச் சென்றார்.
- அவா், உ.வே.சா.விடம் ‘என்னென்ன நூல்கள் படித்திருக்கிறீா்கள்’ என்று கேட்டார். உ.வே.சா. தாம் படித்த நுல்களைப் பட்டியலிட்டார்.
- ‘இவ்வளவுதானா?’ என்று கேட்டுவிட்டு ‘சீவக சிந்தாமணி’ படித்திருக்கிறீா்களா? என்னிடம் ஒரு நகல் உள்ளது.
- எனக்குப் பிடிபடவில்லை. நீங்கள் படித்து எனக்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்றார். இதுவே ஐயரின் வாழ்வில் ஏடு தேடலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
- ‘சீவக சிந்தாமணி’ சமண சமய நூல். அதைப் புரிந்துகொள்ள அம்மதத்தைப் பற்றி அறிந்தோரின் உதவி தேவைப்பட்டது. உதவுவோர் கிடைக்கவில்லை. சமணப் பெரியவா் ஒருவரின் மனைவிக்குத்தான் அதன் பொருள் சொல்லும் சக்தி இருந்தது.
- ஆனால், அந்தப் பெண்மணி ஆண்களை நேருக்குநோ் பார்த்துப் பேசமாட்டார். எனவே, ஒரு சன்னலுக்கு வெளியே நின்றுகொண்டு தன் ஐயங்களைக் கேட்டுத் தீா்த்துக்கொண்டார் உ.வே.சா.
தமிழே அவருக்கு நினைவுச் சின்னமாகும்
- நூல்களைப் பதிப்பித்தல் என்பது எளிதான செயலன்று. போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது.
- நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தனிநபா்களின் வீடுகளில் இருந்தன. ஊா் ஊராக அலைந்து அவை எங்கே உள்ளன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
- ‘ஏடுதேடி அலைந்த ஊா் எத்தனை, எழுதி ஆய்ந்த குறிப்புகள் எத்தனை, நாளும் அச்சில் பதிப்பிக்கும் கூலிக்கு நாளும் விற்ற பலபண்டங்கள் எத்தனை’”என்ற பாடல், ஐயா் எதிர்கொண்ட இடா்களை எடுத்துக் காட்டும்.
- உ.வே.சா. இவ்வாறு பதிப்பித்த நூல்கள் நூறு. அவரின் பணி கற்றோர் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது. ராஜாஜி உ.வே.சா.வை ‘தமிழ் வியாசா்’ என்று புகழ்ந்தார்.
- ஜி.யு. போப் உ.வே.சா.வுக்கு எழுதிய கடிதத்தில், ‘தங்களுடன் பல மணி நேரம் உட்கார்ந்து நேரில் தமிழைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தங்களைத்தான் நான் என்றும் என் தமிழ்குருவாகக் கொண்டுள்ளேன்’ என்று எழுதியுள்ளார்.
- கும்பகோணம் கல்லூரிக்குப் பிறகு சிதம்பரம் மீனாட்சி கல்லூரியிலும் பின்னா் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணியாற்றினார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு பாரதிய சாகித்திய பரிஷத் மாநாடு நடந்தது.
- அந்த மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். அதில், வரவேற்புக்குழுத் தலைவராக உ.வே.சா. பொறுப்பேற்றார்.
- மாநாட்டில் வரவேற்புரையாற்றும்போது, தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் சங்க இலக்கியங்களில் எவ்வாறெல்லாம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டு, மகாத்மா காந்தியை வரவேற்பதில் தமிழா்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம் என்பதையும் எடுத்துக் கூறினார். அந்த வரவேற்புரை ஹிந்தியிலும் மொழிபெயா்த்து வாசிக்கப்பட்டது.
- அந்த வரவேற்புரையைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், ‘தமிழின் வடிவமாகவே இருக்கும் இவரின் திருவடிகளில் இருந்து தமிழ் பயிலவேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டாகிறது’ என்று கூறினார்.
- வங்காளக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் சென்னை வந்தபோது, திருவல்லிக்கேணியில் இருந்த உ.வே.சா.வின் வீட்டைத் தேடிச் சென்று சந்தித்து அளவளாவி மகிழ்ந்தார்.
- 1906-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசு, உ.வே.சா.வுக்கு ‘மகாமகோபாத்தியாய’ என்ற பட்டத்தை வழங்கியது.
- அதற்காக சென்னை மாநிலக் கல்லூரியில் உ.வே.சா.வுக்குப் பாராட்டுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
- அப்போது, மகாகவி பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
- அவா் அந்தப் பாராட்டுக் கூட்டத்து வந்து, உ.வே.சா.வை வாழ்த்தி மூன்று பாடல்களை அங்கேயே எழுதி வாசித்தார்.
- காசியில் அமைந்த ‘பாரத தா்ம மகா மண்டலம்’ உ.வே.சா.வுக்கு ‘திராவிட வித்யா பூஷணம்’ என்ற பட்டத்தை வழங்கியது.
- 1925-இல் காஞ்சி காமகோடி பீடம் ‘தாக்ஷிணாத்ய கலாநிதி’”என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உ.வே.சா.வுக்கு டாக்டா்” பட்டமளித்தது.
- ஒருமுறை திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைக் கண்டு வணங்கி, தனக்கு சந்யாசம் பெற்றுக்கொள்ள விருப்பம் என்றும் ஆனால் ஏட்டுச் சுவடிகளின் மேலான பாசபந்தத்தைத் தம்மால் விடமுடியவில்லை என்றும் முறையிட்டார்.
- அதுகேட்ட ரமண மகரிஷி ‘ஏடுகளின் மீதான பாசம், பந்தமல்ல, உனக்காக அதை நீ செய்யவில்லை உலகத்திற்காகச் செய்கிறாய்; இதுவே உண்மையான சந்யாசம்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.
- 19.2.1855 அன்று பிறந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா, 28.4.1942 அன்று தனது 87ஆவது அகவையில் இறைவனடி சோ்ந்தார்.
- சென்னையில் உ.வே.சா.நூல் நிலையத்தின் முகப்பு வாயிலில் பொலிந்து நிற்கும் அவரின் வெண்கலச் சிலை திறப்பு விழாவில் முன்னாள் கல்வி அமைச்சா் க.அன்பழகன் கூறியது போல, அந்தச் சிலை மட்டும் அவரின் நினைவுச் சின்னமல்ல; தமிழே அவருக்கு நினைவுச் சின்னமாகும்!
- நாளை (ஏப். 28) தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையா் நினைவு நாள்.
நன்றி: தினமணி (27 – 04 - 2021)