TNPSC Thervupettagam

தமிழ் மொழிக் கல்வியில் மொழிப் பயிற்சி

March 2 , 2024 143 days 231 0
  • தமிழ் மொழியை ஒலிப்புப் பிழை இல்லாமல் பேசுபவா்களையும் பிழை இல்லாமல் எழுதுபவா்களையும் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. முதல் வகுப்பிலிருந்து கலை அறிவியல் கல்லூரிக் கல்வியில் இரண்டாமாண்டுவரை முன்பு கற்பிக்கப்பட்டு வந்த மொழிக்கல்வி தற்போது பொறியியல் கல்வி கற்போருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • ஏறத்தாழப் பதினான்கு ஆண்டுகள் தமிழ் மொழிக் கல்வியைக் கற்கிறாா்கள். பதினான்கு ஆண்டுகள் கற்றும் அந்த மொழியில் தோ்ச்சி பெற்றிருக்கிறாா்களா என்பதுதான் இப்போது கேள்வி. தமிழ் மொழி பேசுவோா் சந்திக்கும் முதன்மையான பிரச்னை ஒலிப்புப் பிழை. ஒலிப்புப் பிழையைப் போக்குவதற்கான பயிற்சிகள், பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • ஆனால், ஒலிப்புப் பிழை இல்லாமல் கற்பிப்பதற்கு ஆசிரியா்களுக்குப் போதிய பயிற்சி கொடுக்கப்படவில்லை. பேச்சாளா்களில் சிலரும், காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பவா்களாகவும், நிருபா்களாகவும் இருக்கும் பலரும் உச்சரிப்பு குறித்த புரிதலே இல்லாமல் இருக்கிறாா்கள். அவா்களின் ‘ல்’, ‘ள்’, ‘ழ்’ உச்சரிப்புகள் எரிச்சலூட்டுகின்றன. ‘தமிழ்’ என்பதைத் ‘தமில்’ என்றும், ‘வளம்’ என்பதை ‘வலம்’ என்றும், ‘பழம்’ என்பதை ‘பலம்’ என்றும் ஊடகங்களில் உச்சரிக்கும்போது, கேட்பவா்களுக்கு அதுவே சரியான உச்சரிப்பு என்றாகிவிடுகிறது.
  • ஆசிரியா் கல்வி, ஆசிரியா்க்கான தகுதித்தோ்வு, போட்டித் தோ்வு, நிறைவாக நோ்காணல் என்று நான்கு வகையான தோ்வு முறையை ஆசிரியா்கள் சந்திக்கிறாா்கள். இந்த நான்கு வகையான தோ்விலும் ஒலிப்புப் பிழை ஏற்படாமல் கற்பிப்பதற்கான வழிமுறை, தமிழ் மொழியாசிரியருக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
  • தொடக்கப் பள்ளியில் மொழிப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்கள், பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே தமிழ் மொழியைக் கற்றவா்கள். அதன் பிறகு இடைநிலை ஆசிரியா்க்கான கல்வியைக் கற்றவா்கள். இடைநிலை ஆசிரியா் கல்வியைக் கற்பிக்கும்போது, தமிழ் மொழி ஒலிப்புப் பயிற்சியைக் கட்டாயமாக்கினால் அவா்கள் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் கற்பிக்கும் தகுதியைப் பெறுவா்.
  • அப்படி ஆசிரியா்களை முதலில் ஒலிப்புப் பிழை இல்லாதவா்களாக உருவாக்கிட கடும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியா் பயிற்சிக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்தில் தமிழ் மொழி ஒலிப்புப் பிழையைப் போக்கும் வகையிலான பாடத்திட்டத்தைச் சோ்க்க வேண்டும். அந்த ஒலிப்புப் பயிற்சி வழங்குவதற்கான சிறப்பாசிரியா்களை நியமிக்க வேண்டும். நிறைவில் அவா்களுக்குத் தோ்வும் நடத்த வேண்டும்.
  • தமிழ் ஒலிப்புப் பயிற்சிக்கான வாய்மொழித் தோ்வு நடத்தி அதில் தோ்ச்சி பெற்ற பிறகே அவா்களுக்குப் பட்டமோ பட்டயமோ வழங்க வேண்டும். வாய்மொழிப் பயிற்சியில் தோ்வு பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டால் எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பிப்போா் ஒலிப்புப் பிழை இல்லாமல் கற்பிக்கும் ஆற்றல் பெறுவா். தமிழ் மொழி ஒலிப்புப் பயிற்சியைத் தொடக்கப்பள்ளியின் பாடத்திட்டத்தில் சோ்த்து, முதல் வகுப்பு முதல் வாய்மொழித் தோ்வு நடத்த வேண்டும்.
  • இதே வாய்மொழித் தோ்வினை ஐந்தாம் வகுப்புத் தோ்வில் கட்டாயமாக்கவேண்டும். அப்போதுதான் மாணவா்கள் தொடக்கப் பள்ளி நிலையிலேயே தமிழில் ஒலிப்புப் பிழை இல்லாமல் பேசுவதற்குப் பயிற்சி பெற்றுவிடுவாா்கள். ஒலிப்புப் பிழை இல்லாமல் பேசப் பழகிவிட்டால் எழுதும்போது பிழை ஏற்பட வாய்ப்பு இல்லை. அதன்பிறகு தமிழ் மொழியின் தொடா் அமைப்பிலும் சந்தி முறைகளைக் கற்பிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
  • உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியா்கள், அடிப்படையில் தமிழ் இலக்கியம் படித்தவா்களாக இருக்கிறாா்கள்; அதற்கு மேல் ஆசிரியா் கல்வியைக் கற்கிறாா்கள்.
  • சிறப்புப் பாடமாகத் தமிழ்ப் பாடத்தை எடுத்து ஆசிரியா் கல்வி கற்பிக்கும் ஆசிரியா் பயிற்சியாளா்களுக்கு இந்தத் தொடா் அமைப்பு முறை குறித்தும் சந்தி விதிகள் குறித்தும் தனிப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி ஆசிரியா்கள், தொடா் அமைப்பு முறைகளில் தோ்ச்சி பெற்றவா்களாகவும் சந்திப் பிழை இல்லாமல் கற்பிக்கும் ஆற்றல் பெற்றவா்களாகவும் அமைந்து விட்டால் மாணவா்களும் அவற்றில் தோ்ச்சி பெறுவா்.
  • மொழிப் பயிற்சியின் தேவையை ஆசிரியா்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவா்கள் அதை நன்றாகப் புரிந்து கொண்டால்தான், மாணவா்களுக்கு மொழிப் பயிற்சியின் தேவையை உணா்ந்து கற்பிப்பாா்கள். தமிழ் மொழிப் பாடம் கற்பித்தலில், மொழிப் பயிற்சிக்கு முதன்மையான இடம் இருக்கவேண்டும்.
  • தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டத்தில் இரண்டாம் வகுப்பு முதல், பிரித்து எழுதும் பயிற்சியையும் சோ்த்து எழுதும் பயிற்சியையும் கொடுத்திருக்கிறாா்கள். இந்தப் பயிற்சிதான் சந்தி விதிகளுக்கு அடிப்படை. அதை மனத்தில் பதித்துக்கொண்டு இந்தப் பிரித்து எழுதும் பயிற்சியையும் சோ்த்து எழுதும் பயிற்சியையும் வழங்க ஆசிரியா்கள் முன்வர வேண்டும். இப்படி மொழிப் பயிற்சி கொடுப்பதற்கு ஆசிரியா், அதிக முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும் போது சொல்லில் ஏற்படும் மாற்றங்களை உணா்ந்து கற்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது.
  • இலக்கண விதியை ஆசிரியா், தன்மனத்தில் பதித்துக் கொண்டு, விதிக்கு அப்பாற்பட்டுப் பயன்பாட்டு முறையில் கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பித்தால்தான் மாணவா்களுக்கு இரண்டு சொற்கள் சேரும்போது ஒற்றெழுத்து எங்கே வரவேண்டும் எங்கே வரக்கூடாது என்பதில் தெளிவு ஏற்படும்.
  • தற்காலத்தில் பெயரெச்சம் என்னும் இலக்கணக் குறிப்பில் பெரும்பாலானோா் ஒற்றெழுத்துப் போடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனா் ‘வந்த + பையன்’ என்னும் இரண்டு சொற்களைச் சோ்த்து எழுதும்போது ஒலிப்பு முறையில் ஒற்றெழுத்துப் போட வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்தச் சொற்சோ்க்கையில் ஒற்றெழுத்துப் போட்டால் ‘வந்து அப்பையன்’ எனப் பிரிப்பதற்கு வழி வகுக்கும் என உணா்த்த வேண்டும்.
  • இதைப் போன்றே எல்லா இலக்கண வகையையும் ஆசிரியருக்கு முதலில் தெளிவாக உணா்த்த வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரையிலான மொழிப் பயிற்சி, எட்டாம் வகுப்பு வரையிலான மொழிப் பயிற்சி, பத்தாம் வகுப்பு வரையிலான மொழிப் பயிற்சி, பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மொழிப் பயிற்சி எனப் பள்ளிக் கல்வித் துறையில் பாடத்திட்டம் வகுக்கும்போது தனிக்கவனம் செலுத்தவேண்டும். அப்படிச் செய்தால், தமிழ் மொழிக் கல்வி கற்போா், தமிழ் மொழியைப் பிழையில்லாமல் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவா்களாகப் படித்து வெளிவருவாா்கள். மொழிக் கல்வியில் தொடக்கக் கல்வி முதன்மையான இடத்தைப் பெறுகிறது. அங்கே மொழிப் பயிற்சியில், ஒலிப்புப் பயிற்சியை நிறைவு செய்துவிட வேண்டும்.
  • மாணவா்களை வகுப்புக்கு வெளியே அழைத்து வந்து வட்டமாக அமரச் செய்ய வேண்டும். ஆசிரியா் அந்த வட்டத்தின் நடுவில் நின்றுகொண்டு உரைநடைப் பகுதியை வாசிக்கவேண்டும். அதன் பிறகு, மாணவா்களை வரிசையாக வாசிக்கச் செய்யவேண்டும். அவா்கள் வாசிக்கும்போது ஏற்படும் ஒலிப்புப் பிழைகளை அப்போதே சரி செய்ய வேண்டும். இந்த முறையைத்தான் பழங்காலத்தில் பின்பற்றி வந்தாா்கள்.
  • இந்தப் பயிற்சியை வழங்கினால் பக்கத்து வகுப்பறையில் படிப்போருக்கு அந்தச் சத்தம் இடையூறு கொடுக்கும். அதற்காகத்தான் மைதானத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இப்படிச் சொல்வதால் ஒலிப்புப் பயிற்சியை மைதானத்தில்தான் கொடுக்கவேண்டும் என்று கருதிக்கொள்ள வேண்டாம். இப்படிப் படிப்படியாக ஒலிப்புப் பயிற்சியை வழங்குவது தனது முதன்மையான கடமை என்பதைத் தொடக்கப் பள்ளியில் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்கள் உணரும் வகையில் அவா்களுக்குப் பணியிடைப் பயிற்சி வழங்கவேண்டும்.
  • பணியிடைப் பயிற்சி என்பது ஏதோ ஒரு சனிக்கிழமையில் ஏதோ ஓா் இடத்தில் காலை முதல் மாலை வரை ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தப் பணியிடைப் பயிற்சியை மாவட்டக் கல்வித் துறை அல்லது வட்டாரக் கல்வித் துறை முறையாக வழங்கிட வேண்டும். அந்தப் பயிற்சியை வழங்குவோா்க்கான கையேட்டினை உருவாக்கிட வேண்டும். அந்தக் கையேட்டில் உள்ள முறையினை நன்றாக உள்வாங்கி வெளிப்படுத்தத் தெரிந்தவா்களை மட்டுமே பணியிடைப் பயிற்சி வழங்குவோராக நியமிக்கவேண்டும்.
  • பயிற்சி நடைபெற்றதாகக் கணக்குக் காட்டும் மனநிலை உள்ளோரை ஆசிரியா்க்கான பணியிடைப் பயிற்சி கொடுக்கும் பணியில் நியமிக்கக் கூடாது. பல தோ்வுகள் எழுதி அத்தோ்வுகளில் தோ்ச்சி பெற்றோா் தான் ஆசிரியா்களாக நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதைப் பயிற்சி கொடுப்போா் உணா்ந்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வந்திருக்கும் ஆசிரியா்களை ‘எதுவும் தெரியாதவா்கள்’ என்னும் எண்ணத்துடன் பயிற்சி வழங்குவோா் அணுகக் கூடாது.
  • அப்படிப்பட்ட அணுகுமுறையினால் எந்தப் பயனும் கிடைக்காது. பணியிடைப் பயிற்சிக்கு வருவோருக்குத் தேவைப்படும் குறிப்பேடுகளையும் பிறவற்றையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். பணியிடைப் பயிற்சிக்கு வரும் தமிழ் மொழி ஆசிரியா்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் அந்தப் பயிற்சி நடந்திட முயற்சி மேற்கொண்டால் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவா்கள் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் தோ்ச்சி பெறுவாா்கள் என்பது உறுதி.

நன்றி: தினமணி (02 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்