TNPSC Thervupettagam

தமிழ்ச் சிந்தனை மரபில் ஒரு சுதேசி

March 2 , 2025 5 hrs 0 min 55 0

தமிழ்ச் சிந்தனை மரபில் ஒரு சுதேசி

  • பேராசிரியர் தொ.பரமசிவன், தமிழ்ப் பண்பாட்​டாய்​வு​களில் எல்லை​யில்​லாச் சுதேசி​யத்​தைத் தேடிய​வர். அவர் முன்னெடுத்த ஆய்வு முறை​களும் பல்துறை சார்ந்த நுண்ணாய்​வும், அவற்றின் வழி கண்டடைந்த வீச்​சுகளும் மிகவும் தனித்து​வ​மானவை. எந்த மேலைக் கோட்​பாடு​களி​லும் சிக்​கிக் கொள்​ளாமல் மண் சார்ந்​தும் மக்கள் சார்ந்​தும் பேருண்​மை​களைக் காட்​டிய​வர். தமிழியம் சார்ந்த இன்றைய இளம் தலைமுறை ஆய்வாளர் ஒவ்வொரு​வரும் தொ.ப.வை உள்வாங்க வேண்​டியது அவசி​ய​மாகும். முன்னு​தா​ரணமில்லா ஆய்வாளர் அவர்.

நுண்​பொருள் ஆய்வாளர்:

  • தொ.ப. தமிழ்ப் பண்பாட்​டின் விழுமிய நுட்​பங்​களைப் பேசி​ய​வர். காலங்​களைக் கடந்து புதைந்து கிடக்கும் வேர்களை அலசி ஆராய்ந்​தவர். தமிழ் மரபின் விழுதுகளை விடவும் வேர்​களைத் தோண்டி எடுத்​தவர். இதில் என்ன இருக்​கிறது? சாதாரண விடயம்​தானே! என்று நினைக்​கின்ற​வற்றில் நுட்​பமான கருத்துகளை எடுத்​துக் காட்​டிய​வர்.
  • அவருடைய பொருள்​கோடல் முறை பிரமிக்க வைக்கக் கூடியது. புழங்கு பொருட்​கள், சடங்கு சம்பிர​தா​யங்​கள், உணவு, இன்ன பிற பண்பாட்டுக் கூறுகள் பற்றி​யும் வெகு நுட்​பமான விசா​ரணை​களைச் செய்​தவர் அவர். பாட்​டாளிகள் சமைக்​கும்​போதே உப்பிட்டுச் சமைப்​பார்​கள். ஏன் தெரி​யுமா? வேலை செய்​யுமிடங்​களில் உப்பைத் தேட முடி​யாதல்​லவா! வசதியான மக்கள் வாழை இலையில் உப்பு பரிமாறி சாப்​பிடு​வார்​கள். உணவு முறை​யில் சாதி​யத்தை வெளிப்​படுத்​தி​யவர் தொ.ப.
  • மணவறை​யில் அரசாணிக்​கால் நடுவதன் வரலாற்றை விளக்கு​கிறார். அந்தக் காலத்​தில் அரசிடம் அனுமதி வாங்கி நடத்திய திரு​மணங்​களில் அரசாணிக்​கால் நடப்​பட்​ட​தாம். அது இன்றும் தொடர்​கிறது என்கிறார். “நமக்​குச் சொல்​லப்​பட்​டுள்ள வரலாறுகள் பிழை​யானவை. அவை யாவற்​றை​யும் திருத்தி எழுத வேண்​டும். நமது பண்பாட்டு வேர்களை நாட்டுப்புற மக்களிடம் கள ஆய்வு செய்து கண்டறிய வேண்​டும்” என்கிறார் அவர். இது சார்ந்து எண்ணற்ற ஆய்வு​களைச் செய்திருக்​கிறார்.
  • இன்று மதுரைக்​குப் பெருமை சேர்க்​கும் அழகர் கோயில் ஆதியில் பௌத்தக் கோயில் என்று கட்டுடைத்​துக் காட்டு​கிறார். சமணத்​தின் எச்சங்கள் பலவற்றை எடுத்​துக் காட்டு​கிறார். தைப்​பூசம் பௌர்ணமி நாள்​தான் தமிழர்​களின் ஆண்டுத் தொடக்கம் என்கிறார். சல்லிக்​கட்டை ‘மாடு அடக்​குதல்’ என்று சொல்வது தவறு; ‘மாடு அணைதல்’ என்றே சொல்ல வேண்டு​மென்​பார். மைந்து விரட்டு​தான் மஞ்சு விரட்​டானது. மைந்து என்றால் வீரம் என்பது பொருளாம். பழந்​தமிழர் வாழ்​வியல் சேர நாட்​டில் இன்றும் தொடர்​கிறது என்பார். வழிபடும்​போது தெய்வ உருவங்களை வண்ணப் பொடிகளால் தரையில் எழுதி வணங்​கும் முறை இன்றும் கேரளத்​தில் உள்ளது. இதனைக் ‘களம் எழுதுதல்’ என்பார்​கள். வழிபாடு முடிந்த பிறகு அந்த உருவங்​களைக் கலைத்து விடு​வார்​கள். இதனைக் ‘களமழித்​தல்’ என்பார்​கள். இந்த நிலை தமிழகத்​தில் சற்று மாறி​யிருக்​கிறது. வழிபாட்​டின்​போது கல் நட்டுச் சாமி கும்​பிடு​வார்​கள். அதன் பின்னர் அதனைக் கண்டு​கொள்​ளாமல் விட்டு விடு​வார்​கள். இது ஆதி நிலை.
  • இப்படிச் சில நூறு பண்பாட்டு நுட்​பங்​களைத் தொ.ப. அகழ்ந்து காட்​டி​யிருக்​கிறார். தமிழ்ப் பண்பாடு என்பது ஓடும் நதியாக​வும் உள்ளது; உறை பனியாக​வும் உள்ளது. இவ்விரண்டு துரு​வங்​களி​லிருந்​தும் தமிழ்ப் பண்பாட்டை விளங்​கிக் கொள்ள வேண்டு​மென்​கிறார்.

தொ.ப.​வின் முறை​யியல்:

  • தொ.ப.​வின் நாற்​ப​தாண்​டுக் கால ஆய்வுத் தடம் ஒரு சகாப்​தம். அவர் தொடங்​கியது மார்க்​சியம் என்றாலும், இறுதிவரை நின்றது பெரி​யாரி​யம். ஆனால், அதிகம் ஆய்வு செய்தது சமயம் பற்றி. அவர் எழுதிய கட்டுரைகளி​லேயே மிகப் பெரியது ‘தெய்வம் என்ப​தோர்’. நாட்​டார் தெய்​வங்கள் கிராமியப் பொருளா​தா​ரத்​தோடும், உள்ளூர் உற்பத்​திச் சக்தி​களோடும் பின்னப்​பட்டவை என்பதை நிறு​விக் காட்​டியவர் தொ.ப.
  • நாட்​டார் வழிபாட்​டில் தெய்​வங்​களின் இருத்​தலைச் சாதிகள் காப்​பாற்றுகின்றன. ஆனால், பெருந்​தெய்வ வழிபாட்​டில் சாதி​களைத் தெய்​வங்கள் காப்​பாற்றுகின்றன என்ப​தைத் தொ.ப. கட்டுடைத்​துக் காட்டு​கிறார். இறுதி​யாக, நாட்​டார் சமயம் ஒரு ‘பயன்​பாட்டுச் சமயம்’ என்பதை ஆழ்ந்து நோக்கு​கிறார். இதனால் தொ.ப. ஒரு ‘நவ பெரி​யாரிய​வா​தி’​யாகப் பரிணமிக்​கிறார்.
  • பெரி​யாரியம் அடிப்​படை​யில் கட்டுடைப்பு​வாதம் சார்ந்​தது. சாதி மறுப்பு, சமய மறுப்பு, தாலி மறுப்பு, சமூகச் சீர்​திருத்​தம், சமூக நீதி முதலான அனைத்​தும் கட்டுடைத்தல் சார்ந்​தவை. தொ.ப. மைய நீரோட்​டத்​தைக் கட்டுடைத்​துக் கொண்டே இருந்​தார். ஓர் எதிர்க்​கதை​யாடலை உருவாக்​கிக் கொண்​டே​யிருந்​தார். அவர் அடிப்​படை​யில் வாய்​மொழி மரபுக்​குரிய​வர். எழுது​வதைவிட பேசுவதையே விரும்​பிய​வர். எங்கும் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்​பார். பெரி​யார் கையாண்ட ‘எதிர்க்​குரல்’, ‘தூண்​டுதலை நிகழ்த்​துதல்’ ஆகிய இரண்​டை​யும் தொ.ப. தொடர்ந்து செய்துகொண்டே இருந்​தார்.
  • ஆய்வு​களில் பலரும் நேர்க்​கோட்டுத் தரவு​களைக் கொண்டு பொருள் விளக்கம் காண்​பார்​கள். ஆனால் தொ.ப. குறுக்​கும் நெடுக்​கு​மாகப் பல்வேறு தரவுகளை வெவ்​வேறு தளங்​களி​லிருந்து கோத்​துக் காட்டு​வார். நினைத்​துப் பார்க்க முடியாத அளவுக்கு இணைத்​துக் காட்டு​வார். சான்​றா​தா​ரங்​களைப் பல்வேறு திசைகளி​லிருந்​தும் அகழ்ந்​தெடுப்​பார். இதுவே அவரது புலமைப் பாய்ச்​சலாகும்.
  • ஆய்வு என்பது அனுமானமாக அமையக் கூடாது; ஆனால், அதனை அனுமானத்​துடன் தொடங்க வேண்​டும் என்பார். வழக்​காடு மன்றங்​களில் எடுத்​துரைக்​கும் நேர்க்​கோட்டு தர்க்க முறை​யியலைத் தொ.ப. கையாள மாட்​டார். பல இடங்​ளில் முன்​தொடர்ச்சி, பின்​தொடர்ச்சி இல்லாத ஒரு தர்க்க முறை​யியலைக் கையாளுவார். இது அவருக்கே உரிய பாண்​டித்​தி​ய​மாகும். தொ.ப. ஒரு நுண்​பொருள் ஆய்வாளர். நுட்​பங்​களின் மீதே அவருக்கு நாட்டம் அதிகம்.

தொ.ப.வின் பங்களிப்பு:

  • தொ.ப.​வின் ஆய்வுக் களங்கள் மிக விரிவானவை. சமூகம், சமயம், தத்து​வம், வரலாறு, நாட்​டார் வழக்​காற்றியல், இலக்​கி​யம், இலக்​கணம், கல்வெட்​டியல், தொல்​லியல் முதலான துறைகளை இணைத்து நுட்​பங்​களைத் தேடிய​வர். ‘அறியப்​படாத தமிழகம்’ வந்த​போது இவரை அறியாதவர்களே இல்லை. இன்று இருபதுக்​கும் மேற்​பட்ட தலைப்பு​களில் இவருடைய நூல்கள் கிடைக்​கின்றன. ஆனால் இவர் எழுதியவை பதின்​மூன்று நூல்கள் மட்டுமே. கட்டுரைகளைப் பிரித்​துப் போட்டுப் புதிய தலைப்பு​களில் நூல்கள் வெளியாகின்றன.
  • தொ.ப.​வின் ஒட்டுமொத்த பங்களிப்பை இரண்டு நிலைகளில் சொல்​லலாம். ஒன்று: தமிழ்ப் பண்பாட்​டின் செவ்​வியம் இந்திய அளவில் தனித்துவ விழு​மியம் சார்ந்தது என்ப​தைப் பரக்கப் பேசினார். இரண்டு: தமிழ் மரபின் மீது கவ்வி​யிருந்த வைதிக மரபை அகற்றித் தமிழ்ப் பண்பாட்டை மீளுரு​வாக்​கிக் காட்​டி​யுள்​ளார். இதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொன்​மை​யை​யும் தொடர்ச்​சி​யை​யும் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். தமிழ் மரபின் மீது தாக்​குதல் ஏற்படுத்திய வைதிக மரபை நிராகரித்து, நாட்​டார் மரபை அடையாளப்​படுத்​தினார். நாட்​டார் வைணவம், நாட்​டார் சைவம், சமண, பௌத்த மதங்​களின் வீழ்ச்சி முதலானவற்றை முன்னெடுத்​தார். இவை சார்ந்து பண்பாட்டு வரலாறு எழுதினார்.
  • சுருக்​க​மாகச் சொன்​னால் தமிழ் மரபின் தனித்து​வத்தை உயர்த்திப் பிடித்​தார். உ​யிர்ப்​பலித் தடைச் சட்​டம், சல்​லிக்​கட்டுக்​குத் தடை வந்த​போது அறி​வுத் தளத்​தில் உரக்​கப் பேசினார். தன் சுதேசி​யத்​தால் தமிழி​யம் சார்ந்த ஆய்​வுல​கில் தொ.ப. எப்​போதும்​ உயர்​ந்​து நிற்​பார்​.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்