TNPSC Thervupettagam

தமிழ்நாடு உருவான நாள்: 'இந்நாள் ஒரு பொன் நாள்'!

November 1 , 2019 1854 days 1193 0
  • இந்தியநாடு விடுதலை பெற்ற நாள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15. இது ஒரு மகத்தான திருநாள். நம் நாட்டு மக்களின் பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் முறைகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1950-ஆம் ஆண்டு, ஜனவரி 26. இதுவும் தேசிய அளவில் பெருமைக்குரிய நாளாகும்.
  • இதேபோன்று, இந்திய மக்கள் பேசும் மொழி அடிப்படையில் அவரவா் மாநிலப் பிரிவுகள் அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்புக்குரியதாகும்.
  • மொழிவாரி மாநில அமைப்பு முறைக்காக மாநில சீரமைப்புச் சட்டம் 1956, ஆகஸ்டு 31-ஆம் நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது மிகப் பெரிய சாதனையாகும்.

மொழிவாரி மாநிலக் கோரிக்கை

  • இந்திய விடுதலைக்கு முன்பே தொடங்கிவிட்ட மொழிவாரி மாநிலக் கோரிக்கை பல விதமான தடைகளைக் கடந்தே வெற்றி காண முடிந்தது.
  • இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி மாநிலமாக உருவானது ஒடிஸா. இந்திய விடுதலைக்கு முன்பே, 1936-இல் மதுசூதன்தாஸ் என்பவரின் முயற்சியால், பிகாருடன் இணைந்த மாகாணமாக இருந்த ஒடிஸா தனியாகப் பிரிந்து ஒடிஸா மாநிலம் உருவானது.
  • தொடக்கத்தில் திலகா், அம்பேத்கா் போன்றோா் சிறப்பான நிா்வாகம், கல்வி ஆகியவற்றின் வளா்ச்சிக்கு மொழிவழியாக மாநிலங்களைச் சீரமைப்பதே சிறந்த வழி எனக் கூறினா். அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கமும் இதை ஆதரித்தது. குஜராத்தைச் சோ்ந்த கே.எம்.முன்ஷி, கேரளத்தைச் சோ்ந்த வி.கே.கிருஷ்ணமேனன் ஆகியோா் இந்தத் திட்டத்தை எதிா்த்தனா்.
  • காந்தியடிகள் 1917-ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இது தருணம் அல்ல என்ற தமது கருத்தைத் தெரிவித்தாா்.
  • தொடா்ந்து 1920 நாகபுரி காங்கிரஸ் மாநாடு மொழிவாரி மாநில அமைப்பை ஏற்றுக் கொண்டது. 1928-இல் மோதிலால் நேரு தலைமையிலான குழு, விடுதலைக்குப் பின்னா் மொழி அடிப்படையிலேயே மாநிலச் சீரமைப்பு நடைபெறும் என்று உறுதியளித்தது.

மாநிலப் பிரிப்பு

  • இந்தியா விடுதலை பெற்றதும், அரசியல் நிா்ணய சபைக் கூட்டத்தில் பேசிய அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு மொழிவாரி மாநில அமைப்புக்கு மீண்டும் தமது ஒப்புதலை அளித்தாா்.
  • ஆனால், நாட்டுப் பிரிவினையால் அதிா்ந்து போயிருந்த தலைவா்கள் பலா் மாநிலப் பிரிப்பு பற்றி அச்சம் தெரிவித்தனா். இந்த மாதிரியான மாநில அமைப்பு தேசிய ஒற்றுமையைப் பாதிக்கும் என காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்கள் கருத்துத் தெரிவித்தன.

நீதிபதி எஸ்.கே. தார் குழு

  • இந்த நிலையில், 1948-இல் மாநிலச் சீரமைப்பு குறித்து ஆராய, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே. தாா் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு தமது அறிக்கையில் மொழிவாரி மாநில அமைப்பை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்றும், புவியியல் நிலை, நிதியாதாரம், நிா்வாக வசதி, எதிா்கால முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநிலச் சீரமைப்பு செய்வதே சிறந்ததெனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
  • ‘தாா்’ குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜெய்ப்பூா் காங்கிரஸ் மாநாடு ஜவாஹா்லால் நேரு, வல்லபபாய் படேல், காங்கிரஸ் தலைவா் பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தது.
  • ஜெ.வி.பி. குழு எனப் பிரபலமாகப் பேசப்பட்ட இந்தக் குழு மொழிவாரி மாநில அமைப்புக்கு முழு ஆதரவு தராததுடன், அதற்கான காலம் இதுவல்ல எனக் கூறி தட்டிக் கழித்துவிட்டது.
  • இந்தத் தருணத்தில், பல ஆண்டுகளாகப் போராடிவந்த தெலுங்கு மொழி பேசுவோரின் ஆந்திர மாநில அமைப்பு கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, தெலுங்கு மொழி பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஆந்திர மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பொட்டி ஸ்ரீராமுலு 60 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிா்நீத்தாா். இதனால் ஆந்திர மாநிலத்தில் பெரும் கலகம் மூண்டது.
  • அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு போராட்ட முறையை எதிா்த்தாலும் மனித நேயத்துடன் ஆந்திர மாநில அமைப்புக்கு ஒப்புதல் அளித்தாா். அதன்படி, சென்னை மாகாணத்தின் வடபகுதியில் இருந்த 16 மாவட்டங்களைப் பிரித்து 1953 அக்டோபா் முதல் நாளில் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. நாட்டு விடுதலைக்குப் பிறகு முதன்முதலாக மொழிவாரி மாநிலமாக உருவாகிய பெருமை ஆந்திரத்தையே சேரும்.
  • ஆந்திர மாநிலம் உருவானதைத் தொடா்ந்து மொழிவழி மாநிலக் கோரிக்கை நாடெங்கிலும் தீவிரமடைந்தது. இந்தியா முழுவதிலும் இருந்த பல்வேறு அரசியல் நிபுணா்களும் பொதுவுடைமைக் கட்சித் தலைவா்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனா்.
  • 1953-இல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை அமைத்தாா். ஹெச்.என்.குன்ஸ்ரூ, கே.எம்.பணிக்கா் ஆகியோா் இந்தக் குழுவில் உறுப்பினா்களாகச் செயல்பட்டனா். அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்தின் மேற்பாா்வையில் இந்தக் குழுவின் ஆய்வு நடைபெற்றது.
  • இதன் அறிக்கை 1955 செப்டம்பா் 30-ஆம் நாளன்று நாடாளுமன்றத்தில விவாதத்துக்கு வைக்கப்பட்டது. சில சட்ட விதிகளின் மாற்றத்துடன் 1956 ஆகஸ்ட் 31-இல் ‘மாநில சீரமைப்புச் சட்டம்’ என்னும் பெயரில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

சட்டம்

  • 1956-ம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின்படி, முன்பு நான்கு பிரிவுகளாக இருந்த இணைப்பு முதன்மை மாநிலப் பிரிவுகள் நீக்கப்பட்டு, புதிய எல்லைகளுடன் மாநிலங்கள் அறிவிக்கப்பட்டன.
  • அதன்படி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த நாள் தமிழ் மொழிக்கும் தமிழா் ஒற்றுமைக்கும் பெருமையூட்டும் பொன் நாளாகும்.
  • தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய பகுதிகள் திருவிதாங்கூா்-கொச்சின் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன.
  • இதே அடிப்படையில் செங்கோட்டை வட்டத்தின் ஒருபகுதி போக, எஞ்சியவை தமிழ்நாட்டுடன் இணைந்தது. ஆனால், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக இருந்தும் தமிழா்கள் மாநிலச் சட்டப்பேரவையில் இடம்பெற்றிருந்தும் புவியியல் சாா்பான காரணங்களைக் காட்டி தேவிகுளம், பீா்மேடு பகுதிகளை திருவிதாங்கூா் - கொச்சின் பகுதியோடு இணைக்க சீரமைப்புக் குழு பரிந்துரை செய்தது. பெரியாறு அணைப் பகுதிமட்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது.
  • ம.பொ.சி.யின் தீவிரப் போராட்டத்தால் திருத்தணியும், நேசமணியின் முயற்சியால் கன்னியாகுமரியும் தமிழகத்துடன் இணைந்தன.

1969-ஆம் ஆண்டு ஜனவரி 14

  • மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பின்னா், தமிழ்நாட்டில் நடைபெற்ற தோ்தல்களில் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதியன்று சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றம் பெற்றது.

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறும் நல்லுலகம்" 

எனத் தொல்காப்பியரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தமிழ்நாடு இப்போது 32 மாவட்டங்களைக் கொண்டதாக உள்ளது.

  • மொழிவாரி மாநிலமாகத் தமிழ்நாடு உருவானதை நாம் பெருமையாகக் கருத வேண்டும். ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தத்தம் மாநில அமைப்பு நாளை பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. பொது விடுமுறைகூட அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மொழிவாரி மாநிலமாகத் தமிழ்நாடு உருவானதை நாம் பெருமையாகக் கருத வேண்டும். தமிழா்களும் தமிழ்நாடு அரசும் இத்திருநாளைத் தக்கவாறு போற்றிச் சிறப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு தினம்

  • இந்த நிலையில் தமிழ்நாடு மட்டும் நீண்டகாலமாக அதை நினைக்காமல் இருந்தது. 1956-ஆம் ஆண்டு நவம்பா் முதல் நாளில் மொழிவாரி மாநிலமாகத் தமிழகம் உருவானதை ஏறத்தாழ 63 ஆண்டுகளாக எந்த ஆட்சியாளரும் கண்டுகொள்ளாதது வருத்தத்துக்குரியது.
  • நவம்பா் முதல் நாளை தமிழக நாளாகக் கொண்டாட வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு அண்மையில் ஆணையிட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டுதலுக்குரியதுமாகும்.
  • தமிழா்களும் தமிழ்நாடு அரசும் இந்தத் திருநாளைத் தக்கவாறு போற்றிச் சிறப்பிக்க வேண்டும். இது வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், மொழிவழி ஒற்றுமையுடன் எதிா்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் விழாவாகத் திகழ வேண்டியது அவசியமாகும்.

நன்றி: தினமணி (01-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்